எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி 
செய்திகள்

முடிந்து போனதைப் பற்றி பேசக்கூடாது... எஸ்.பி.வேலுமணி கருத்தை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி!

கே.காமராஜ்

பாஜகவுடன் இணைந்திருந்தால் கூடுதல் இடங்களை பெற்று இருக்கலாம் என முடிந்து போன விஷயங்களை பற்றி பேசக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அவர் பேசும்போது, ”மக்களவைத் தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகள் கூட்டணிகளை அமைத்து போட்டியிட்டன. தங்களிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அவர்கள் தேர்தலை எதிர்கொண்டார்கள். ஆனாலும் திமுகவும், பாஜகவும் கூறிக் கொள்வது போல் அவர்களின் வாக்கு சதவீதம் அதிகரிக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் அதிமுகவின் வாக்கு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் கூடுதல் இடங்களை பெற்றிருக்கலாம் என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”முடிந்து போன விவகாரம் குறித்து மீண்டும் பேசக்கூடாது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப கூட்டணிகள் அமைக்கப்படும். அந்த வகையில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டோம். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசியக் கட்சிகளுடன் என்றைக்கோ கூட்டணி சேர்ந்து இருப்போம்” என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “ அதிமுகவை அழித்து விடுவோம் என பலகாலமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையோடு வென்று ஆட்சி அமைக்கும். தேசிய கட்சிகள் வெற்றி பெறும் வரை நம்மை பயன்படுத்துகின்றனர். அதன் பின்னர் கண்டு கொள்வதில்லை. அண்ணாமலையை அடையாளம் காட்டியது அதிமுக தான். தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கண்டிருப்பார். அவரது கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். கோவையில் கடந்த முறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணாமலை குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் இருப்பது போல பாஜக நிர்வாகிகள் பல மாநிலங்களில் இருப்பதால் பின்னடைவு என நினைக்கிறேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

SCROLL FOR NEXT