அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல்களில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் பல தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளன. இந்த நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து, திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6:30 மணிக்கு அறிவாலயத்தில் நடக்க உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இதில் திமுக மக்களவைக் குழுத தலைவர் தேர்வு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

கடந்த 2019ம் ஆண்டின் மக்களவையில் திமுக குழுத் தலைவராக டி.ஆர்.பாலு செயல்பட்டார். துணைத்தலைவராக கனிமொழி, பொருளாளராக பழனிமாணிக்கம், கொறாடாவா ஆ.ராசா ஆகியோர் செயல்பட்டனர். இந்த முறை மக்களவையில் திமுக குழுத்தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில், அவரை எதிர்த்து போட்டியிட்ட 47 வேட்பாளர்களின் டெபாசிட் தொகையையும் இழக்க வைத்துள்ளார். அத்துடன் டி.ஆர்.பாலு தற்போது திமுகவின் பொருளாளராக உள்ளார். எனவே, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கனிமொழி திமுகவின் மக்களவைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in