புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்
புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் 
சர்வதேசம்

‘இங்கிலாந்து மன்னரின் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது’ -பிரதமர் ரிஷி சுனக் பெருமூச்சு

காமதேனு

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சூழலில், அந்த பாதிப்பு அதன் ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்று கூடுதல் விளக்கம் தந்திருக்கிறார், பிரதமர் ரிஷி சுனக்.

”மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். ஆனால் நோய் ஆரம்பத்தில் பிடிபட்டதில் நிம்மதியடைந்தேன்” என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்றைய தினம் பெருமூச்சு பகிர்ந்திருக்கிறார்.

புற்றுநோய்க்கான வெளிநோயாளி சிகிச்சையை மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடங்கியுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுக்கான அவரது சமீபத்திய சிகிச்சையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னல் சார்லஸ் - பிரதமர் ரிஷி சுனக்

அதிர்ஷ்டவசமாக, அது முன்கூட்டியே பிடிபட்டது என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிபிசி வானொலிக்கான ஒரு பேட்டியில் இன்றைய தினம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மன்னர் பிரதமருடனான வாராந்திர சந்திப்பினை வழக்கம்போலவே அவர் தொடர்வார் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சார்லஸின் தாயாரான ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் இறந்ததை அடுத்து, அவர் 70 ஆண்டுகள் ஆண்டுகளாக வகித்து வந்த அரியணை காலியானது. இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் பட்டத்து இளவரசராக நீண்ட வருடங்கள் காத்திருந்த சார்லஸ் மன்னரானார்.

சார்லஸின் மருமகளும் அடுத்த பட்டத்து இளவரசர் வில்லியமின் மனைவியுமான, வேல்ஸ் இளவரசி கேத், அண்மையில்தான் வயிற்று அறுவை சிகிச்சையில் இருந்து தேறி இருந்தார். அது தொடர்பான அறிவிப்பின் சுவடு மறைவதற்குள், மன்னரின் புற்றுநோய் குறித்தான தகவல்கள் வெளியாகி இங்கிலாந்து மக்களை விசனத்தில் ஆழ்த்தியுள்ளன. பொதுவெளியில் இது தொடர்பான அறிவிப்பினை பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிடுவதற்கு முன்னதாக சுமார் இரு வாரங்கள் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ்

மனைவி கேத் குணமடைந்த போதும் அவருக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டியும், தங்களது 3 குழந்தைகளையும் கவனிக்கும் பொருட்டும், தனது அரச கடமைகளில் இருந்து பட்டத்து இளவரசரான வில்லியம் விலகி இருக்கிறார். வில்லியம் தம்பியும், 2020-ம் ஆண்டே அரச பொறுப்புகளில் இருந்து விலகியவருமான ஹாரி, தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். தந்தையின் உடல்நிலை குறித்த தகவலறிந்தது, அவர் இங்கிலாந்துக்கு விரைந்திருக்கிறார்.

இதனிடையே இங்கிலாந்து மன்னர் சார்லஸின் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. ஆனபோதும் அதற்குச் சவால் விடும் வகையில் அவரது முதிய வயது உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

SCROLL FOR NEXT