சர்வதேசம்

பெகாசஸ் உளவுச் செயலி; இஸ்ரேல் நிறுவனத்தின் சிஇஓ ராஜினாமா: என்ன காரணம்?

காமதேனு

பெகாசஸ் எனும் உளவுச் செயலியை உருவாக்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு வழங்கிய நிறுவனம் என்எஸ்ஓ. இதன் நிறுவனர்களான நிவ் கார்மி, ஷாலேவ் ஹுலியோ, ஓம்ரி லாவி ஆகிய மூவரின் பெயர்களின் முதல் எழுத்துகள் மூலம் ‘என்எஸ்ஓ’ என இந்நிறுவனம் அழைக்கப்படுகிறது. இதில் நிவ் கார்மி என்பவர் ஆரம்பத்திலேயே இந்நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது, சிஇஓ-வாக இருக்கும் ஷாலேவ் ஹுலியோ பதவி விலகுவதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

என்எஸ்ஓ என்பது இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனம்தான் என்றாலும், இஸ்ரேல் அரசின் அனுமதி மற்றும் கண்காணிப்பின் பேரில்தான் இயங்கிவருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த உளவுச் செயலி மூலம் அரசியல் தலைவர்கள் கண்காணிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வெறுமனே தொலைபேசியை ஒட்டுக்கேட்பது போன்ற சமாச்சாரம் அல்ல பெகாசஸ். வேவு பார்க்கப்படும் நபருக்குத் தெரியாமலேயே, செல்போன் கேமராவை ஆன் செய்து காட்சிகளைக் காணொலிகளாகப் பதிவுசெய்வது வரை எல்லாமே செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் பிரச்சினைக்குரிய ஆவணங்களை அவரது செல்போனில் சேமித்துவைத்து, அவரைச் சட்டத்தின் முன் குற்றவாளியாகச் சித்தரிக்கவும் முடியும் என்பது ஆபத்தான இன்னொரு அம்சம்.

இந்நிலையில், இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளிடம் பெகாசஸ் உளவுச் செயலியை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகவே ஷாலேவ் ஹுலியோ பதவி விலகுவதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது தலைமை இயக்க அலுவலராக இருக்கும் யாரோன் ஷோஹார் இனி ஷாலேவ் ஹுலியோவின் பணிகளை முன்னெடுப்பார் என என்எஸ்ஓ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT