பெகாசஸ் விவகாரம்: பேசப்படட்டும் உண்மைகள்

பெகாசஸ் விவகாரம்: பேசப்படட்டும் உண்மைகள்

சில மாதங்களுக்கு முன் நாட்டையே உலுக்கி, நாடாளுமன்றத்தையும் ஸ்தம்பிக்கச்செய்த பெகாசஸ் விவகாரம், மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இவ்விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றமே ஒரு நிபுணர் குழுவை நியமித்திருப்பதும், தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் அரசு பதில் சொல்லாமல் நழுவும் வழிகளை அடைத்திருப்பதும் மிக முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. குடிமக்களின் தனியுரிமை எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் பணியையும் உச்ச நீதிமன்றம் அக்கறையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

பிரச்சினையின் வேர்கள்

பெகாசஸ் ஸ்பைவேர் எனும் வேவு மென்பொருள் தொடர்பான பரபரப்புத் தகவல்கள் கடந்த ஜூலை மாதம் வெளியாகின. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபார்பிடன் ஸ்டோரீஸ் ஆகிய அமைப்புகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த17 ஊடகங்களும் சேர்ந்து வெளியிட்ட இந்தத் தகவல்கள், பிற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் புயலைக் கிளப்பின. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ், அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படும் என்றும், அதன் மூலம் ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்றும் தெரியவந்தது. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதி என ஏறத்தாழ 300 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல்களால் வெகுண்டெழுந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கின.

வெறுமனே தொலைபேசியை ஒட்டுக்கேட்பது போன்ற சமாச்சாரம் அல்ல பெகாசஸ். வேவு பார்க்கப்படும் நபருக்குத் தெரியாமலேயே, செல்போன் கேமராவை ஆன் செய்து காட்சிகளைக் காணொலிகளாகப் பதிவுசெய்வது வரை எல்லாமே செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் பிரச்சினைக்குரிய ஆவணங்களை அவரது செல்போனில் சேமித்துவைத்து, அவரைச் சட்டத்தின் முன் குற்றவாளியாகச் சித்தரிக்கவும் முடியும் என்பது ஆபத்தான இன்னொரு அம்சம்.

நடவடிக்கை எடுத்த நாடுகள்

சர்வதேச அளவில் இவ்விவகாரம் வெளியானதும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஜெர்மனி காவல் துறையினர் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருப்பதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. பயங்கரவாதம், திட்டமிடப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவே, அதிலும் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கவே பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியதாக ஜெர்மன் காவல் துறை விளக்கம் சொன்னது. அதாவது, விதிவிலக்கான தருணங்களில் அதை ஜெர்மன் போலீஸார் பயன்படுத்தியிருக்கிறார்கள். எனினும், இதுகுறித்து முழுமையான விளக்கம் தேவை என அங்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றன. செல்போன், கணினி ஆகியவற்றில் மிக முக்கியமான தருணங்களில், அதுவும் மிகச் சில கண்காணிப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள பாதுகாப்பு அமைப்புகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என ஜெர்மனி நீதிமன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

தாங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கியே, நிபுணர் குழுவை நீதிமன்றம் அமைத்திருப்பதாக மத்திய அரசும், பாஜகவினரும் வாதிடுகிறார்கள். ஆனால், தாங்களே ஒரு நிபுணர் குழுவை அமைத்து விசாரிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றம் தானாகவே ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்பதே உண்மை. பெகாசஸ் விவகாரம் வெடித்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாகச் சொன்ன மத்திய அரசு, அதன் பின்னர் காத்திரமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அது நீதிமன்றத்தை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெகாசஸ் மூலம் அரசின் சார்பில் வேவுபார்க்கப்பட்டதா எனும் கேள்விக்கு ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டியே, இது தொடர்பாக எதையும் பேச அரசு விரும்பவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. குறிப்பாக, தேசப் பாதுகாப்பு எனும் காரணத்தை முன்வைக்க தகுந்த ஆதாரங்களை மத்திய அரசு முன்வைக்காததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தெளிவற்றது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உண்மையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சுருக்கமான வடிவம்தான், அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தேசப் பாதுகாப்பு விஷயத்தில் நீதிமன்றத்தின் எல்லை வரையறைக்கு உட்பட்டதுதான் என்றாலும், ஒவ்வொரு முறையும் தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் அரசுக்கு ‘ஃப்ரீ பாஸ்’ கொடுக்க முடியாது என்றும், மவுனமான பார்வையாளராக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் அரசுக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.

குழுவின் பணிகள் என்னென்ன?

உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் நிபுணர் குழுவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவ, டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழு, 8 வாரங்களில் விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்துக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

பெகாசஸ் மென்பொருளை அரசு வாங்கியதா, அரசு நிறுவனங்களோ வேறு யாரேனுமோ இதைப் பயன்படுத்தியிருக்கிறார்களா, அப்படிச் செய்திருந்தால் அது சட்டப்படி மேற்கொள்ளப்பட்டதா எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் குழு விசாரிக்கும். மிக முக்கியமாக, இதுதொடர்பான புகார்கள் பொதுவெளிக்கு வந்த பின்னர், அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இந்தக் குழு விசாரிக்கவிருக்கிறது.

மிக முக்கியமான பிரச்சினை என்பதால், இந்தக் குழுவில் அங்கம் வகிக்க பலரும் தயங்கியதும் தெரியவந்திருக்கிறது. “பெகாசஸ் சர்ச்சையை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்க பலரை அணுகியபோது, அதை அவர்கள் நாகரிகமாக நிராகரித்துவிட்டார்கள் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

நவீன தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவின் பணி, மிகச் சவாலானதாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், மிகவும் சாதுரியமும், தந்திரங்களும் நிறைந்த மென்பொருளான பெகாசஸ், வேவு பார்த்ததற்கான தடயங்களை அத்தனை எளிதில் வெளிப்படுத்திவிடாது. இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என்பதால், இதுகுறித்த ஆதியந்தமான எல்லாத் தகவல்களும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. இந்தக் குழுவின் விசாரணைக்கு அரசு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதும் கேள்விக்குரிய விஷயம். எனினும், உண்மையை நோக்கிய பயணத்தில் இது முதல் படி என்பதில் சந்தேகமில்லை.

தனிமனிதச் சுதந்திரத்தின் முக்கியத்துவம்

தனிமனித உரிமை முதல் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள், ஊடகவியலாளர்கள் பணி செய்யும் பாங்கு, அரசின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை எனப் பல்வேறு அடுக்குகளில் அதிர்வுகளை ஏற்படுத்தும் விவகாரம் இது. அரசுகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்காணிப்பு மேற்கொள்வது என்பது அவசியமானதுதான் என்றாலும், அதில் அடிப்படை உரிமைகள் மீறப்படக் கூடாது என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். நீங்கள் எதைக் கேட்கிறீர்கள், என்ன பார்க்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என எல்லாவற்றையும் யாரோ ஒருவர் வேவு பார்க்கிறார் என்று தெரியவந்தால், நம் தனிமனித சுதந்திரம் என்னவாகும் என்பதுதான் அவர்கள் எழுப்பும் முக்கியக் கேள்வி.

ஸ்பைவேர் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் வீச்சு, சட்டத்தின் வரையறைகள் சுட்டிக்காட்டும் எல்லைகளைத் தாண்டி எங்கோ சென்றுவிட்டது. எனவே, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் என ஜனநாயகத்தின் தூண்கள் மீதும் தனிமனிதர்கள் மீதும் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்தி சட்டத்தின் எல்லைகளைக் கடந்து கண்காணிப்பது ஆபத்தானது.

மேற்கோள்கள் சுட்டும் நிதர்சனங்கள்

இந்த உத்தரவில், ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவலை நீதிமன்றம் மேற்கோள் காட்டியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. அந்த நாவலில் ஒவ்வொரு வீட்டிலும் டெலிஸ்க்ரீன் எனும் சாதனத்தைப் பொருத்தி, குடிமக்கள் அனைவரையும் கண்காணிக்கும் ‘பிக் பிரதர்’ அரசு பற்றி புனைவு கலந்து எழுதியிருப்பார் ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் இந்நாவலை மொழிபெயர்த்த க.நா.சு பிக் பிரதரை ‘முத்தண்ணா’ என்று குறிப்பிட்டிருப்பார்). சுதந்திரச் சிந்தனையின் வாடையைக்கூட மோப்பம் பிடித்துவிடும் அளவுக்கு அத்தனை உக்கிரமாக வேவு பார்க்கும் அரசு. அந்த வகையில், இவ்விவகாரத்தின் தீவிரத்தை நீதிமன்றம் ஆழமாக உள்வாங்கியிருப்பது தெளிவாகிறது.

18-ம் நூற்றாண்டில் பிரிட்டனின் பிரதமராக இருந்தவரும், ‘தி ஃபர்ஸ்ட் இயர்ல் ஆஃப் சதம்’ என்று அழைக்கப்பட்டவருமான வில்லியம் பிட்டின் வார்த்தைகளையும் உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியிருக்கிறது. அந்த வார்த்தைகள் மன்னராட்சி நடக்கும் தேசத்துக்கு மட்டுமல்ல, ஜனநாயக நாட்டுக்கும் பொருத்தமானவை:

“பரம ஏழை ஒருவன் தனது குடிசையில் இருக்கும்போது, அரண்மனையின் எந்தப் படையையும் அனுமதிக்க மறுக்க முடியும். அவனது குடிசை பலவீனமானதாக இருக்கலாம் - அதன் கூரை ஆட்டம் கண்டிருக்கலாம் - அதற்குள் காற்று வீசலாம் - புயல், மழைகூட நுழையலாம் - ஆனால் இங்கிலாந்தின் மன்னன் அந்தக் குடிசைக்குள் நுழைய முடியாது.”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in