பெகாசஸ்: இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரவீந்திரன் குழு

பெகாசஸ்: இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரவீந்திரன் குழு

பெகாசஸ் விவகாரத்தை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தனது விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருக்கிறது. ஏற்கெனவே, இடைக்கால அறிக்கையை இக்குழு உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும், நாளை அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதி என ஏறத்தாழ 300 இந்தியர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல்கள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. பல்வேறு நாடுகளிலும் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இந்த மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படும் என்றும், அதன் மூலம் ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்றும் தெரியவந்ததைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021 அக்டோபர் மாதம் இது குறித்து விசாரிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவ, டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழு, 8 வாரங்களில் விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்துக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரனின் மேற்பார்வையில் செயல்படும் இக்குழு, ‘ரவீந்திரன் குழு’ என்று அழைக்கப்படுகிறது.

பெகாசஸ் விவகாரம் வெடித்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாகச் சொன்ன மத்திய அரசு, அதன் பின்னர் காத்திரமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அது நீதிமன்றத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றமே தானாக இந்தக் குழுவை அமைத்தது. இந்த விவகாரத்தில் தேசப் பாதுகாப்பு எனும் பதத்தை மத்திய அரசு பயன்படுத்திவந்ததை உச்ச நீதிமன்றம் ரசிக்கவில்லை. தேசப் பாதுகாப்பு விஷயத்தில் நீதிமன்றத்தின் எல்லை வரையறைக்கு உட்பட்டதுதான் என்றாலும், ஒவ்வொரு முறையும் தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் அரசுக்கு ‘ஃப்ரீ பாஸ்’ கொடுக்க முடியாது என்றும், மவுனமான பார்வையாளராக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதுவரை இந்தக் குழுவின் முன்பு, பத்திரிகையாளர்கள் என்.ராம், சித்தார்த் வரதராஜன், பரஞ்சோய் குஹா தாகுர்தா உள்ளிட்ட 13 பேர் ஆஜராகி சாட்சியமளித்திருக்கிறார்கள். பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உட்பட பலரது செல்போன்களைப் பெற்று அதில் தடயவியல் பரிசோதனையை இக்குழு நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பெகாசஸ் குறித்து புகார் எழுப்பிய செயற்பாட்டாளர்களில் பலர் பரிசோதனைக்காக இக்குழுவிடம் தங்கள் செல்போன்களை வழங்கவில்லை என்று குழுவினர் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கிடையே, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் ஜனவரி இறுதியில் வெளியான கட்டுரை பெகாசஸை மோடி அரசு வாங்கியதாகச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. 2017 ஜூலையில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் கடற்கரையில் உலவினார். இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டது, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது வரை பல தகவல்கள் தலைப்புச் செய்திகளாகின. ஆனால், அந்தச் சமயத்தில்தான் பெகாசஸ் வேவு மென்பொருளை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்கிறது இந்தக் கட்டுரை. 2 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதாகச் சொல்லப்பட்டது. அதில் பெகாசஸும் அடக்கம் என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in