நீட் தேர்வு (கோப்பு படம்) 
அறிவொளி

நீட் தேர்வுக்கான வினாத்தாள் ரூ.50 லட்சம்... விலை பேசி விற்றவர்கள் கைது!

காமதேனு

நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை பேசி விற்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2024 ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ம் தேதி நாடு முழுவதும் நடந்து முடிந்தது. பீகாரில் இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே லீக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்படி, அந்த மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தேர்வு நடந்த மே 5 ம் தேதியன்று நிதிஷ்குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர் பாட்னா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வீடுகளில் இருந்து வங்கி காசோலைகள் உள்ளிட்ட பிற ஆவணங்களைக் கைப்பற்றினர். தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, அவர்களிடமிருந்து பெற்ற வினாத்தாளும் தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாளும் ஒன்றுபோல இருந்தன என காவல்துறை கூறியுள்ளது.

தேர்வு எழுத வந்த மாணவர்கள்

அமித் ஆனந்த் கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தேர்வு எழுதுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் உதவுவதாக கூறி, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அணுகி, அவர்களுடன் உரையாட ஒரு வாட்ஸ் ஆப் குழுவையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.  அமித் ஆனந்த் டானாபூர் நகர் பரிஷத்தைச் சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் சிக்கந்தர் யாதவேந்துவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.  

அந்த சிக்கந்தர் மூலமாக நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் அமித் ஆனந்திற்கு கிடைத்துள்ளது. இதனை ராம் கிருஷ்ணா நகரில் உள்ள லேர்ன் பாய்ஸ் விடுதிக்கு சுமார் 35 மருத்துவ மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களிடம் 30 லட்சம் ரூபாய் முதல்  50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு வினாத்தாள்களை கொடுத்ததாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

வினாத்தாளைப் பெற்றதும் நண்பர்களிடமோ வேறு யாரிடமோ கேள்விகளை தெரிவிக்க முடியாத வகையில் மாணவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். பின் மாணவர்களை தங்களது வாகனங்களில் தேர்வு மையங்களில் இறக்கிவிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் வைத்திருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீஸாருக்கு அதிலிருந்து ஒரு முக்கியக் குற்றவாளியின் தொடர்பு எண் கிடைத்துள்ளது. அவர்தான் ராம் கிருஷ்ணா நகரில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சிக்கந்தருக்கு உதவியவர் என்று தெரியவந்துள்ளது. எனவே அவரைக் கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.

மருத்துவராகும் கனவில் மிகவும் சிரமப்பட்டு இரவு பகலாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாத்தாள்களை பணம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்யப்பட்ட இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

SCROLL FOR NEXT