கைது செய்யப்பட்ட தந்தை, மகன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் போலீஸார்.
கைது செய்யப்பட்ட தந்தை, மகன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் போலீஸார். 
க்ரைம்

கொள்ளையடிக்க தந்தையைக் கூட்டு சேர்த்த மகன்... 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.25 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்!

காமதேனு

பெங்களூருவில் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1கோடி ரூபாய் மதிப்புள்ள 1.25 கிலோ வைர, தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மாடநாயக்கனஹள்ளியில் முதியோர் இல்லம் நடத்துபவரின் வீட்டில் தங்க, வைர நகைகள், பல லட்ச ரூபாய் கொள்ளை போயின. இதுகுறித்த புகாரின் பேரில், மாடநாயக்கனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்போது, முதியோர் இல்லம் நடத்துபவரின் வீட்டுக்கு நன்கு அறிமுகமானவர் தான், கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து முதியோர் இல்ல உரிமையாளரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது இல்லத்திற்கு, எம்.எஸ்.பைக் என்ற மிர்சா சையத் பைக் என்ற இளைஞர் துப்புரவு பணிக்காக வந்து சென்றது தெரிய வந்தது. இதனால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " முதியோர் இல்லம் நடத்துபவரின் வீட்டிற்கு மிர்சா சையத் பைக் துப்புரவு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது முதியோர் இல்லம் நடத்துபவர் வீட்டில் அங்கு தங்க நகைகள் இருப்பதைப் பார்த்து திருட முடிவெடுத்தார். இதற்காக அவரது தந்தை மிர்சா நூருதீனை கூட்டாளியாக சேர்த்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் முதியோர் இல்லம் நடத்தும் உரிமையாளர் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்தனர்.

அத்துடன் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் தூவியுள்ளனர். அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்துள்ளார். அவர்களிடமிருந்து சுமார் 1 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ வைர மற்றும் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, 21 லட்சம் ரூபாய் ரொக்கம், பூஜை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

மிர்சா சையத் பைக்கின் தந்தைக்கு இதய நோய் இருந்துள்ளது. இதற்காக மூன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில், தங்க நகைகளைத் திருடி விற்றால், அதில் கிடைத்த பணத்தில் அறுவை சிகிச்சை செய்யலாம், வசதியாக வாழலாம் என்று நினைத்திருந்தனர். தற்போது அவர்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். இதைத் தவிர வேறு எங்காவது அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டார்களா என்று போலீஸார் தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT