இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேல் மீது ஈரானின் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரானின் வான்வழித் தாக்குதல்
Updated on
2 min read

தங்கள் மீதான  ஈரான் நாட்டின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரும் பதிலடியில் அமெரிக்கா இணையாது என்று அந்நாட்டு  தரப்பில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைக்கு உதவி செய்வதாக கூறி சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் இந்த மாதத் தொடக்கத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் இரண்டு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால்  கடும் கோபமடைந்த ஈரான்  இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரித்திருந்தது.

இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில்  நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி இஸ்ரேல்  மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், நீண்ட தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை ஈரான் வீசியது.

எனினும் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. இதனால் உயிர் சேதம் போன்ற பெரும் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.  ஆனாலும், ஒரு சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் கடந்து உள்ளே நுழைந்தன. அவை தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களைத் தாக்கின. இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உடனடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் படைகள் இடைமறித்து அழித்தன.

இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலின் மக்களையும், அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க இரும்பு கவசம் கொண்டு பாதுகாக்கும் என உறுதியளித்தார். 

இதனிடையே இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான எந்தவொரு இஸ்ரேலிய எதிர் தாக்குதலிலும் அமெரிக்கா இணையாது என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,  "இஸ்ரேல் தன்னைத் தற்காத்து கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும். ஆனால், போரை விரும்பவில்லை. இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் இணைய மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in