மண்டபம் காவல் நிலையம் 
க்ரைம்

நடுக்கடலில் தங்கக்கட்டிகளை வீசிய மூவர் கைது... ரூ.3 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்கம் பறிமுதல்!

காமதேனு

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நடுக்கடலில் வீசிய 3 பேரை கைது செய்துள்ள வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், தங்கத்தையும் மீட்டுள்ளனர்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. இதே போல் தமிழ்நாட்டில் இருந்து மஞ்சள், புளி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த நேற்று முன்தினம் அதிகாலை இலங்கையில் இருந்து படகுமூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தங்கக்கட்டிகள் (கோப்பு படம்)

இதையடுத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளையை அடுத்த சிங்கிவலை குச்சி அருகே முயல் தீவுக்கும், மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் சுற்றி வளைக்க முயன்றபோது, படகிலிருந்த நபர்கள் கடலுக்குள் சாக்கு மூட்டை ஒன்றை தூக்கி வீசிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

கைது

இதையடுத்து அவர்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த காஜா ஷெரீப், ஹம்துன் திஸ்தர், ஹெரோஸ் அலி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் படகுடன் மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அதனை கடலில் வீசியதாகவும் மூவரும் தெரிவித்துள்ளனர். மேலும் கடலில் பார்சலை வீசிய இடத்தை ஜிபிஎஸ் கருவியை கொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கடலில் வீசப்பட்ட தங்கத்தை ஸ்கூபா வீரர்களை கொண்டு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று மாலை கடலில் வீசப்பட்ட தங்கம் அடங்கிய மூட்டை கிடைத்ததை அடுத்து அதனை மண்டபம் முகாமிற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்துள்ளனர். அப்போது 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

SCROLL FOR NEXT