4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், வீட்டில் சமைத்த உணவுகளை ஆர்டரின் பேரில் பெரும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வழங்க முன்வருகிறது ஸ்விக்கி நிறுவனம்.
இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, 4 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத தனது ’ஸ்விக்கி டெய்லி’ சேவையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, வீட்டில் வைத்து உணவை சமைப்போர் தொழிலும் புத்துயிர் பெற இருக்கிறது.
ஸ்விக்கி நிறுவனத்தின் ஸ்விக்கி டெய்லி சேவை, ஹோட்டல்களுக்கு மாற்றாக வீட்டில் சமைத்த உணவுகளை விரும்புவோருக்கு வரப்பிரசாதமாகும். ருசி மட்டுமன்றி வீட்டுச் சமையலின் கைப்பக்குவத்துக்காகவும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த ஸ்விக்கி டெய்லி வசதியை பயன்படுத்தி வந்தனர்.
இதன் மூலம் 3 நாள் முதல் மாதக்கணக்கு வரை நாள்தோறும் உணவுகளைப் பெறுவது சாத்தியமாகும். சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் உயர் கல்வி மற்றும் பணிநிமித்தம் தனியே தங்கியிருப்போர், தனிப்பட்ட தேவைகளுக்காக தற்காலிகமாக வீட்டுச்சாப்பாடு அவசியமாகும் குடும்பங்கள் ஆகியோர் இதனால் பயன்பெற முடியும்.
நகரங்கள் தோறும் இல்லத்தரசிகள் மற்றும் குறைந்த முதலீட்டில் சமையல் தொழிலில் வருமானம் ஈட்ட விரும்புவோர், வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளை சமைத்து டெலிவரி செய்து வருகின்றனர். தற்போது ஸ்விக்கி டெய்லி மூலம், இந்த வீட்டு உணவு தயாரிப்போருக்கான டெலிவரி சவால் நிவர்த்தியாகும். கொரோனா காலத்தில் இந்த விநியோக சங்கிலிக்கு தேவை அறுபட்டதால், ஸ்விக்கி தனது ஸ்விக்கி டெய்லியை நிறுத்தி வைத்தது.
தற்போது வாடிக்கையாளர் கோரிக்கையின் அடிப்படையில் ஸ்விக்கி டெய்லியை படிப்படியாக பல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. பாரம்பரிய சமையல், சைவம் அல்லது அசைவம் மட்டுமே சமைப்போர், தேவை மற்றும் வசதிக்கு ஏற்ற உணவுக் கட்டணம் என பலவகையிலும் அனுகூலமான இந்த வசதிகளை ஸ்விக்கி டெய்லி ஒருங்கிணைக்கத் தயார் என அறிவித்துள்ளது.
நகரங்களில் ’கிளவுட் கிச்சன்’ என்ற பெயரில் வீட்டில் சமைத்த உணவுகள் பிரபலமாகி வருவதன் மத்தியில், ஸ்விக்கியும் களத்தில் இறங்குவது வாடிக்கையாளர் மற்றும் உணவு சமைப்போர் என இருதரப்பினருக்கும் ஆதாயம் சேர்ப்பதாக அமையக் கூடும்.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!
திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்
தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு
ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்ஷன் என்ன?
காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!