கரோனா பாதித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?

அவள் நம்பிக்கைகள்-7
கரோனா பாதித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?

எந்தவொரு கருத்தரித்த பெண்ணுக்கும் பெரும் அச்சத்தை அளிக்கும் ஓர் அறிகுறி என்றால் அது ரத்தக்கசிவுதான். கண்ணீர் மல்க, "பயம்மா இருக்கு டாக்டர்... குழந்தைக்கு எதுவும் ஆகாதில்ல?" என்பதே இவர்களின் முதல் கேள்வியாக இருக்கும்.

உண்மையில் கர்ப்பகால ரத்தக்கசிவு என்றாலே அது அபார்ஷன்தானா, இது ஏன் ஏற்படுகிறது, கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்பானது என்கிறார்களே அது உண்மைதானா, அப்படியென்றால் இதற்குப் பயப்பட வேண்டியதில்லையா என்று பல கேள்விகள் எழுகிறதுதானே.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், லேசான ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். 20 முதல் 25 சதவிகித பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ரத்தக்கசிவை 'ஸ்பாட்டிங்' என்று அழைப்பார்கள். உண்மையில் லேசான ஸ்பாட்டிங்கால் ஆபத்து இல்லை. அதுவே அதிகரிக்கும்போது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

ரத்தக்கசிவு ஆபத்தா?

ஒரு பெண்ணின் கருமுட்டையும், ஓர் ஆணின் விந்தணுவும் இணைந்து சினைக்குழாயில் உருவாகும் கருவானது, தானே நகர்ந்து, கருப்பையில் பதிந்து, பின் படிப்படியாக வளர்ந்து, குழந்தையாக உருவாகிறது.

அப்படி கரு முதன்முதலாகக் கருப்பையில் பதியும்போது, அது முதலில் கருப்பையில் தனக்கான ஒரு நிலையான இடத்தை ஏற்படுத்திக் கொள்ள, கருப்பையின் உட்சுவரான எண்டோமெட்ரியத்தை லேசாகப் பறித்து (endometrial burrowing), தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பிறகே வளரத் தொடங்குகிறது.

பொதுவாக இந்நிகழ்வின்போது ஒருசிலரில் Implantation Bleeding எனும் லேசான ரத்தக்கசிவு மற்றும் அடிவயிற்று வலி ஏற்படக்கூடும் என்பதுடன், இந்த லேசான ரத்தக்கசிவு எந்தவொரு சிகிச்சையும் இல்லாமல் தானாகவே சரியாகிவிடுகிறது. ஆகவே இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுமட்டுமின்றி, ஒரு சில பெண்களில் கருப்பை வாயில் காணப்படும் புண் அல்லது சதை வளர்ச்சி (cervical erosion/ cervical polyp) ஆகியவற்றிலும், இதேபோல் கர்ப்பகால ரத்தக்கசிவு ஏற்படக்கூடும். இதுதவிர இதற்கும் உள்ளே வளரும் கருவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இதுபோன்ற நிலைகளில் கர்ப்பகாலத்தில் தனி சிகிச்சை தேவையில்லை.

மருத்துவரை அணுகவேண்டிய நேரம்

பொதுவாக, ஸ்பாட்டிங் ஏற்படும்போது, மாதவிடாய் சமயங்களில் உபயோகிப்பது போல சானிடரி பேட்களை மாற்ற வேண்டியிருக்காது. ஆனால், சற்று மிதமாகவோ அதிகப்படியாகவோ ரத்தப்போக்கு இருந்தால், உடனடி மருத்துவ உதவி பெறுவது நல்லது. அதேபோல், கருத்தரித்த சமயத்தில், ரத்தக்கசிவுடன் கூர்மையான முதுகுவலி இருந்தாலோ, பழுப்பு நிற ரத்தத்தை விட அடர்சிவப்பாக இருந்தாலோ அல்லது வெளியேறும் உதிரப்போக்கில் ரத்தக்கட்டிகள் இருந்தாலோ, கருச்சிதைவாக இருக்கக்கூடும் என்பதால் உடனடி மருத்துவ உதவி பெறுவது இங்கு அவசியமாகிறது.

உண்மையில் கருச்சிதைவு என்பது கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் நிலையாகும். இது ஏறத்தாழ 50 சதவீதப் பெண்களுக்குக் கரு சினைக்குழாயிலிருந்து கருப்பையில் பதிவதற்கு முன்பே நிகழ்ந்துவிடுகிறது. ஒரு பெண்தான் கருத்தரித்திருக்கிறாள் என்பதை உணர்வதற்கு முன்பே நிகழ்ந்துவிடுவதால் இது பெரும்பாலும் மனக்குழப்பங்களை உண்டாக்குவதில்லை. பயோகெமிக்கல் ப்ரெக்னன்சி என்று அழைக்கப்படும் இந்த நிலையில் சிறுநீர் பரிசோதனை மட்டுமே பாசிடிவ் எனக் காட்டும். இதையும் தாண்டி வெற்றியுடன் கருப்பையில் பதிந்த பிறகு கருச்சிதைவு ஏற்படுவதுதான் முதல் மூன்று மாதங்களில் ரத்தக்கசிவைக் கவனிக்க வேண்டிய ஒன்றாக மாற்றிவிடுகிறது.

Spontaneous Abortion எனும் இந்த தானாகவே நிகழும் கருச்சிதைவு, நூற்றில் இருபது பெண்களுக்கு ஏற்படுகிறது. அதிலும் அப்பெண் பதின்பருவத்தில் கருத்தரித்திருந்தாலோ அல்லது வயது கூடிய பின் (35க்கு மேல்) கருத்தரித்திருந்தாலோ, இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் இருபதில் 80சதவீதத்தினரிடையே கருச்சிதைவுக்கான காரணமாக குரோமோசோம் குறைபாடுதான். உருவான கருவின் குரோமோசோம்களில் பிறழ்வுகள் ஏற்படுவதும், அவற்றின் எண்ணிக்கை கூடுவதாலும், குறைவதாலும் இங்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. இந்த குரோமோசோம் நிகழ்வுகளை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், பிற காரணங்களால் ஏற்படும் ரத்தக்கசிவை முற்றிலும் நிறுத்தி, குழந்தையை பாதிப்புகளின்றி பெற்றெடுக்கவும் முடியும் என்பதால் ரத்தக்கசிவு என்றதுமே பயப்படத் தேவையில்லை என்பதே உண்மை.

பிற காரணங்கள் (20%) என்று கூறப்படும் டார்ச் நோய்கள், இருதய மற்றும் சர்க்கரை நோய், தைராய்டு குறைபாடு, டெங்கு, கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள், ரத்த சோகை, மாத்திரைகள், கருப்பை கட்டிகள் ஆகியன கருத்தரித்த பெண்ணுக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதும், குணப்படுத்துவதும் அவசியமாகிறது.

இப்படி, கர்ப்பகால ரத்தக்கசிவு ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் முக்கியப் பரிசோதனை ஸ்கேனிங் தான். ’டேட்டிங் ஸ்கேன்’ மூலமாகக் கருவின் இதயத் துடிப்பை உறுதி செய்துகொள்வதுடன் வேறு பாதிப்புகள் எதுவும் இல்லையென்பதை கண்டறியவும் இது உதவுகிறது. சிலசமயங்களில் ஸ்கேனிங்கில் கண்டறிய முடியாத காரணங்களுக்காக மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.

தந்தையும் காரணமாக இருக்கலாம்!

அடுத்தடுத்து நிகழும் கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) என்பது அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், பெண்ணுக்கு மேற்சிகிச்சைக்கான அவசியத்தையும் ஏற்படுத்தலாம். மேலும் கருவுற்ற தாய், உள்ளே வளரும் கரு ஆகிய இருவரில் மட்டுமன்றி, தந்தையின் குரோமோசோம்களில் மாற்றங்கள் நிகழும்போதும் (reciprocal translocation) கருச்சிதைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

பொதுவாக லேசான ஸ்பாட்டிங்கால் ஆபத்து இல்லை என்றாலும், அதிகப்படியான உதிரப்போக்கை ஒரு கர்ப்பிணிப் பெண் உணரும்போதே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும், அதன் காரணங்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை பெறுவதும் அவசியமாகிறது. மேலும், ஓய்வு, ஆரோக்கியமான உணவு, உறக்கம், இவற்றுடன் ப்ரொஜஸ்டிரான் மருந்துகள் இங்கு உதவுகின்றன.

அதேசமயம் முழுமையான கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துகள் மூலமாகவோ, சமயங்களில் டிஎன்சி மூலமாகவோ உள்ளே இருக்கும் கருவை அகற்ற வேண்டியும் வரலாம். என்றாலும், எல்லோரும் நம்புவதுபோல பப்பாளி, பைனாப்பிள் உட்கொள்வதாலும், பயணங்கள் மேற்கொள்வதாலும், உடலுறவு கொள்வதாலும், மாடிப்படி ஏறுவதாலும் கருச்சிதைவு நிகழாது என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். எல்லா கர்ப்பகால ரத்தக்கசிவும் கருச்சிதைவு அல்ல. அதேசமயம் எந்த ரத்தக்கசிவையும் கர்ப்பகாலத்தில் நாம் உதாசீனப்படுத்தவும் கூடாது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கரோனா பாதித்தால் கருச்சிதைவு ஏற்படுமா?
’பொய்க் கர்ப்பம்’ ஆணுக்கும் உண்டாகுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in