’பொய்க் கர்ப்பம்’ ஆணுக்கும் உண்டாகுமா?

அவள் நம்பிக்கைகள்-6
’பொய்க் கர்ப்பம்’ ஆணுக்கும் உண்டாகுமா?

சில சமயங்களில் கருத்தரிக்காமலே தான் கர்ப்பம் தரித்ததுபோல பெண்கள் கற்பனை செய்து கொள்வதுண்டு. அப்படிக் கற்பனை செய்து கொள்ளும் பெண்ணுக்குக் கர்ப்பத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருக்கக் கூடும் என்றால் நம்ப முடிகிறதா..?

இது என்ன ’எஜமான்’ படத்தில் வரும் மீனாவின் கதைபோல இருக்கிறதே என்கிறீர்களா!

பொய் ஆனந்தமா?

இது கதையல்ல உண்மை. ஆனந்தியின் வயது 29. ஆரம்ப நாட்களிலிருந்தே மாதவிடாய்ப் பிரச்சினையுடன் இருந்த பெண் அவர். திருமணமாகி 6 வருடங்கள் கழிந்த பின்னரும் குழந்தை பிறக்கவில்லை. ஆனால், எப்போதும்போல மாதவிடாய் தள்ளிப்போனாலும், அவருக்கு இந்த முறை தனக்குக் கரு உண்டாகியிருக்கிறது என்று தோன்றுகிறது. சிறுநீர் பரிசோதனை செய்தபோது, அது உறுதியும் ஆனது. ஆனந்திக்கு உண்மையிலேயே ஆனந்தம் ஆகிவிட்டது. வாந்தி, மயக்கம், சோர்வு, சிறுநீர் உபாதைகள் என அனைத்து அறிகுறிகளும் இருக்க, வீட்டில் பெரியவர்களான தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியின் ஆலோசனையுடன் கிராம முறைப்படி சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாகவே இருந்தார் ஆனந்தி.

ஐந்தாவது மாதம் மருத்துவமனைக்கு வந்த ஆனந்தியின் வயிறும் பெரிதாக இருந்தது. வயிற்றில் குழந்தையின் அசைவுகள் தெரிவதையும் மருத்துவரிடம் கூறுகிறார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் சந்தேகத்துடன் ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகளை அடுத்துப் பரிந்துரைத்தார். அதன் முடிவுகள், ஆனந்தி உண்மையில் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. ஆனந்தி மனதளவில், தான் கர்ப்பமுற்றதாக எண்ணி அதன்படி செயல்படுவதை மருத்துவர் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறி, அதற்கான சிகிச்சைகளையும் பரிந்துரைக்கிறார்.

உண்மையில் ஆனந்தி பொய் சொல்லவில்லை. அவர் உணர்ந்தது அத்தனையும் உண்மை. என்ன டாக்டர் குழப்புகிறீர்களே என்கிறீர்களா? அதுதான் ’ஸ்யூடோ சயிசிஸ்’ எனும் பொய்க் கர்ப்பம்.

பொதுவாக, மாதவிடாய் தள்ளிப்போவது, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஏற்படுதல், எடை கூடுதல், வயிறு மற்றும் மார்பு பெருத்தல் போன்ற அறிகுறிகள் அனைத்தும் ஒரு பெண் கர்ப்பம் தரித்ததைச் சுட்டிக் காட்டுகிறது என்றாலும், இந்த அறிகுறிகள் அனைத்தும், ’ஸ்யூடோ சயிசிஸ்’ (Pseudocyesis) எனும் பொய்க் கர்ப்பத்திலும் ஏற்படக்கூடும்.

ஆனால், பொய்யான கர்ப்பம் ஏன் ஏற்படுகிறது, ஒரு பெண் எப்படி அப்படி நினைக்க முடியும், அப்படி நினைத்தால் அதைக் குணப்படுத்துவது எப்படி என்றெல்லாம் கேள்விகள் எழுகிறதல்லவா? அதற்கான பதில்களைத் தெரிந்து கொள்ளும் முன் பொய்க் கர்ப்பம் எத்தனை காலமாக இருக்கிறது என்ற வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

அவள் வரலாறு!

ஏறத்தாழ கி.மு. 300-ல் இருந்தே இந்த பொய்க் கர்ப்பம் காணப்பட்டது என்பதை கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ராட்டிஸின் குறிப்பேடுகள் கூறுகின்றன. 1555 -ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டு ராணியான முதலாம் மேரி (Bloody Mary) தனது 37-வது வயதில் தான் கருத்தரித்தாக பிரகடனம் செய்கிறார். என்றாலும் அவருக்கு இருந்தது, 'Pseudocyesis' என்ற பொய்யான கருத்தரித்த நிலைதான், இறுதிவரை அவருக்குக் குழந்தை பிறக்கவேயில்லை என்கிறது வரலாறு.

பால்கூட சுரக்குமா?

ஆனந்தியோ, அரசியோ phantom pregnancy என்ற ’ஸ்யூடோ சயிசிஸ்’ தோன்ற மன அழுத்தம்தான் முக்கியக் காரணம் என்கிறது மருத்துவம். அதிலும் இந்த நிலையை மன நோய்களில் ஒன்றாகவே வரிசைப்படுத்துகிறது. உண்மையில், குழந்தைப்பேறின்மை, அதற்கான தொடர் சிகிச்சைகள், அடுத்தடுத்து நிகழ்ந்த கருச்சிதைவுகள், கர்ப்பம் குறித்த பயம், பிசிஓடி மற்றும் ஹார்மோன்கள் பாதிப்புகள், சிறுவயது மன அழுத்தம், மன நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்த ஸ்யூடோ சயிசிஸ் தோன்றக்கூடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், எடை கூடுதல், சிறுநீர் உபாதைகள், வயிற்றுப் பகுதி பெருத்தல், மார்பகங்களில் வலி, பால் சுரத்தல் போன்ற அறிகுறிகளும், உடல் மாற்றங்களும் இவர்களுக்குக் காணப்படும் என்பதுதான் இதில் ஆச்சரியம். இதற்கு முக்கியக் காரணமாக இவர்களுக்கு மன அழுத்தத்தின்போது உற்சாக ஹார்மோனான டோப்பமைன் அளவு குறைவதால்தான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம் இந்த குறைவான டோப்பமைன் பிட்யூட்டரி மற்றும் சினைப்பை சுரப்பிகளையும் மாற்றியமைப்பதால், மற்ற அறிகுறிகளும் ஏற்படுத்துகிறது.

குடும்பம் கொடுக்கும் அழுத்தம்

உண்மையில், குழந்தைப்பேறுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ள குடும்பங்களில், மணமான பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்துடன் சமுதாய அழுத்தமும் சேர்ந்து கொள்ள, அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு வெகு எளிதாக இந்த நிலை ஏற்படுகிறது. என்றாலும் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மற்றும் ரத்தப் பரிசோதனைகள், இந்த பொய்க் கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் வழிவகுக்கிறது.

சென்ற தலைமுறைகளில் சற்று அதிகம் காணப்பட்ட இந்த phantom pregnancy, சமீப காலமாக, ஸ்கேனிங் போன்ற தொழில்நுட்பங்களால் அரிதாகிவிட்டது. என்றாலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்பரிக்க நாடுகளிலும் இது சற்று அதிகமாக இன்றும் காணப்படுகிறது.

ஆண்களுக்கும் வாந்தி, மயக்கம்!

பெண்களை பாதிப்பது ’ஸ்யூடோ கயிசிஸ்’ என்றால், மனைவி கருத்தரித்த பின், உளவியல் மாற்றங்களை எதிர்கொள்ளும் சில கணவன்மார்களுக்கு கோவேட் அறிகுறிகள் (Couvade Syndrome) எனப்படும் நிலை ஏற்படக் கூடுமாம். அதுமட்டுமின்றி, இதே ஹார்மோன்கள் மாற்றங்களால் ஆண்களுக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிறு பெருப்பதும் கூட காணப்படுகிறது என்றால் பெண்களின் மனநிலை என்னென்ன மாற்றங்களை உண்டாக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

உண்மையில், இப்படி ’ஸ்யூடோ சயிசிஸ்’ என்ற பொய்யான கர்ப்பத்தால் பாதிப்படைந்த பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று என்கின்றனர் மனவியல் மருத்துவர்கள். ஆகவே இதற்கு உளவியல் ஆலோசனைகள், மருந்துகள், தொடர் சிகிச்சைகள் மட்டுமன்றி, தேவைப்படும்போது, டிஎன்சி போன்ற சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்கின்றனர்.

குழந்தைப்பேறு வேண்டும் என்ற முடிவு எடுப்பதற்கும், அதற்காக ஏங்கித் தவிப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் ’ஸ்யூடோ சயிசிஸ்’ போன்ற பாதிப்புகள் தோன்ற முக்கியக் காரணம். இதை புரிந்துகொண்டு நாம் இவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும். இந்த வகையான பொய்க் கர்ப்பத்தால் பாதிக்கப்படும் பெண்கள் குணமடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். உண்மையிலேயே கருத்தரிந்தாலும், அல்லது பொய்யாக கருத்தரிந்தாலும், ஒரு பெண்ணுக்கு உடனிருப்பவர்கள் நம்பிக்கையைக் காட்டிலும் சிறந்ததொரு மருந்தில்லை என்பதே உண்மை.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
’பொய்க் கர்ப்பம்’ ஆணுக்கும் உண்டாகுமா?
மசக்கை இனிக்குமா..?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in