100 நாள் வாந்தியும், சாம்பல் தின்பதும்!: அவ(ள்) நம்பிக்கைகள் - 2

100 நாள் வாந்தியும், சாம்பல் தின்பதும்!: அவ(ள்) நம்பிக்கைகள் - 2

நம்பிக்கை:

"அம்மாவுக்கு வாந்தி அதிகமாக இருக்கிறதென்றால், பிறக்கும் குழந்தைக்கு முடி அதிகமாகவும், கருகருவென்றும் இருக்கும்!?"

உண்மை :

கர்ப்பகாலத்துக்கே உரித்தான, மசக்கை மற்றும் வாந்தி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள்தான். கருவின் வளர்ச்சிக்கு உதவும் கர்ப்பகால ஹார்மோன்களான, ஹெச்சிஜி (hCG), ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜெஸ்டிரான்கள் கர்ப்பகாலம் முழுதும் அதிகம் சுரக்கின்றன.

என்றாலும், கருவின் வளர்ச்சி முதல் 3 மாதங்களில்தான் அதிகம் இருக்கும் என்பதால், அதற்கு ஈடுகொடுக்கும் அளவில் இந்த கர்ப்பகால ஹார்மோன்கள் இன்னும் அதிகம் சுரக்கும். அதனாலேயே தாய்க்கு வாந்தியும், மசக்கையும் முதல் 3 மாதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால், மருத்துவர்கள் நாங்கள் இதை ’100 நாள் வாந்தி’ என்று கூட குறிப்பிடுவது உண்டு. அதிலும் இரட்டை கர்ப்பம் என்றால், இந்த வாந்தி இன்னமும் கூடும் என்பதே உண்மை.

ஆக, பிறக்கும் குழந்தையின் முடி மற்றும் அதன் அடர்த்தி சார்ந்ததல்ல அம்மாவின் மசக்கை.

நம்பிக்கை :

"மசக்கையின்போது புளிப்பான உணவு வகைகள், மண், திருநீறு ஆகியவற்றை உண்ணத் தோன்றும்... அப்படி உண்பதில் தவறில்லை!?"

உண்மை :

பொதுவாக மசக்கை மற்றும் வாந்தியின்போது, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். இதனால் பெண்ணின் சுவையுணரிகள், தொடர்ந்து உண்ணும் சரியான சுவையில் இருக்கும் தினசரி உணவை வெறுக்கச் செய்யும். அதற்கு மாற்றாக அதிக புளிப்பு, உவர்ப்பு உள்ள உணவுகளைத் தேடி உட்கொள்ளத் தூண்டும்.

அத்துடன், ஆரம்ப நாட்களின் அதிக வாந்தியின் காரணமாக உடலின் நீர்த்தன்மை குறைந்துவிடும். இதனோடு ரத்தத்தின் அத்தியாவசிய உப்புகளான சோடியம், பொட்டாசியம், க்ளோரைட் ஆகியனவும் சேர்ந்தே குறையும். இதனாலேயே இந்த உப்புகள் நிறைந்த அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுகளின் மீது இயல்பாகவே ஈர்ப்பு (craving) கர்ப்பகாலத்தில் ஏற்படுகிறது.

ஆயினும், இந்த சமயத்தில் பிடிக்கிறது என்பதற்காக உண்ணும்போது, அளவுக்கதிகமான காரமும், புளிப்பும் அமிலத்தன்மையை அதிகரித்துவிட வாய்ப்புள்ளது.

மேலும் திருநீறு, மண், சாம்பல், சமைக்கப்படாத அரிசி போன்றவற்றை விரும்பி உட்கொள்ளச் செய்யும் நிலை PICA என்று அழைக்கப்படுகிறது. இது தாயின் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் குறைபாடு இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளாகும். ஆகவே மண், திருநீறு ஆகியவற்றை உண்ணத் தோன்றுவது அதிகமாகும்போது, மருத்துவர் அறிவுரையுடன் தக்க பரிசோதனைகளும், மருத்துவச் சிகிச்சையும் மேற்கொள்வது அவசியம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
100 நாள் வாந்தியும், சாம்பல் தின்பதும்!: அவ(ள்) நம்பிக்கைகள் - 2
பாவப்பட்ட பப்பாளி! : அவ(ள்) நம்பிக்கைகள்- 1

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in