பாவப்பட்ட பப்பாளி! : அவ(ள்) நம்பிக்கைகள்- 1

பாவப்பட்ட பப்பாளி! : அவ(ள்) நம்பிக்கைகள்- 1

எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கவே முடியாது. பெண்மைக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்ற வரம்தான் தாய்மை. என்றாலும், கருவுற்ற நாள் முதலாக, உடலாலும் உள்ளத்தாலும் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பெண், உண்மையில் பிரசவிக்கும் நாள்வரை எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளமே. அதிலும் அவளுக்குத் தோன்றும் சந்தேகங்கள் இன்னும் அதிகம் என்றிருக்க, அதற்குத் தரப்படும் விளக்கங்களோ இன்னொரு வகை.

தாய்மை என்பது எளிதான ஒன்றல்ல என்றாலும் பயத்தோடு எதிர்நோக்கும் காலமுமல்ல. கர்ப்ப காலத்தில், நம்மிடையே நிலவும் உண்மைக்கும் அறிவியலுக்கும் புறம்பான நம்பிக்கைகளைப் பற்றியும், அவற்றில் பொருந்தியுள்ள மருத்துவ உண்மைகளைப் பற்றியும் ஒவ்வொன்றாக காண்போமா..?

பப்பாளி கருச்சிதைவை ஏற்படுத்துமா?

"பப்பாளியை உட்கொண்டால், கருச்சிதைவு நேரிடலாம்..?"

பழி ஓரிடம்...பாவம் ஓரிடம்...பாவப்பட்ட பப்பாளி..!

இந்த பப்பாளிதான், எத்தனை தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நம்மையும் கர்ப்பிணி கதாநாயகிகளையும் கதிகலங்க வைத்திருக்கிறது. கொடுமைக்கார மாமியார் + பப்பாளி 80-கள் சினிமாவின் ‘டெட்லி காம்பினேஷன்’ ஆச்சே!

உண்மையில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள பப்பாளியில் இருப்பது, அதிக அளவு பீட்டா கரோட்டீன்கள் (வைட்டமின்-ஏ) மற்றும் இரும்புச் சத்துதான். அத்துடன், பி வைட்டமின்கள், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் நிறைந்த இந்த பப்பாளி, கர்ப்ப காலத்தில் நன்மைகளையே அளிக்கிறது.

என்றாலும் பப்பாளிக் காய்களில் வெளிப்படும் பாலில் உள்ள பப்பாயின் நொதி, சில சமயங்களில் கருப்பை சுருங்கி விரிவதை ஏற்படுத்தக் கூடும். இதை சித்த மருத்துவமும் சுட்டிக்காட்டுகிறது. ஆகையால், கருவுற்று 6 மாதங்களில் இருந்து பப்பாளியைச் சாப்பிடலாம் என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுவதுண்டு. ஆனால், பப்பாளி காய்க்குத்தான் இது பொருந்தும். கனிக்கு அல்ல. கனி இருக்கக் காய் உங்களைக் கவர்ந்தால் பப்பாளி காய்களை மட்டும், நன்கு சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்!

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in