அழகான காஷ்மீரை நான் அமைதியாகக் கண்டதில்லை! : காஷ்மீரி கவிஞர் நிகத் சாஹிபா பேட்டி

2021-ம் ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதாளர்
கவிஞர் நிகத் சாஹிபா
கவிஞர் நிகத் சாஹிபா

‘காஷ்மீர் மிகவும் அழகான மாநிலம்தான். ஆனால் அமைதியான காஷ்மீரை இதுவரை கண்டதில்லை‘ என்கிறார் நிகத் சாஹிபா.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர், இந்த ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதைப் பெறும் காஷ்மீரி மொழி கவிஞர். இன்னமும் பெண் குழந்தைகள் அரிதாகவே பள்ளிப் படிப்பை தாண்டும் சமூகத்தில் வாழ்ந்து வரும் நிகத் சாஹிபா, தனது தனித்துவமான கவிதைகளால் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். காமதேனு இணையதளத்துக்காக அவர் பிரத்தியேக பேட்டி அளித்தார்.

தன்னுடைய இருப்பின் காரணமாக ஆண் பதற்றமடைவதைப் பார்த்து அவர் இருக்கும் அறையை விட்டு ஒரு பெண் வெளியேறும் நிலை ஒருநாள் மாறும் என்று நான் நம்புகிறேன். கனவும் காண்கிறேன்.
Q

உங்களின் பால்யம், குடும்பம், பள்ளத்தாக்கு, சீதோஷணம் பற்றிச் சொல்லுங்களேன்!

A

எனக்கு 2 அண்ணன்கள், ஒரு தம்பி. அம்மா பள்ளி வாசம் அறியாதவர். அப்பாவால் எட்டாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை. இதற்கிடையில் என்னுடைய பரம்பரையில் முதல் பட்டதாரி நான். ஆனால், என்னுடைய குழந்தைப்பருவத்தை உண்மையில் மறக்கவே விரும்புகிறேன். ஏனெனில், அது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. யாருடனும் பழகாமல், தனியாகவே இருந்தேன். பிறகு வாசிப்பு புதிய உலகை சிருஷ்டித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கை காண இரு கண்கள் போதாது. ஆனால் அமைதி என்பது அரிதான ஒன்று. இங்குக் குளிர்காலம் மிகவும் கொடூரமாக இருந்தாலும் ஒவ்வொரு பருவத்தையும் விரும்பவே செய்கிறேன்.

Q

அத்தகைய சூழலில் உங்கள் பெற்றோர் எப்படி படிக்க அனுமதித்தார்கள்?

A

பள்ளி நேரம் போக வீட்டு வேலைகளையெல்லாம் செய்த பிறகே, படிக்க நேரம் கிடைக்கும். அதேநேரம், நான் படிப்பில் கடினமாக உழைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அம்மா விரும்பினார். நாளடைவில் அப்பாவும் அதை ஆமோதித்தார். அந்த வகையில் நான் அவர்களை அதிகம் ஏமாற்றவில்லை.

Q

பள்ளி நாட்களில் மற்றவர்களை விட தனித்தன்மையுடன் இருந்ததாக நினைத்தீர்களா?

A

எனக்கான நண்பர்களை சம்பாதிப்பதே கடினமாகத்தான் இருந்தது. ஏனென்றால், எனக்கும் சக மாணவிகளுக்கும் பொதுவான விருப்பங்கள் என்பதே கிட்டத்தட்ட இல்லை. எனக்கிருந்த வாசிப்பு பழக்கம்தான் அதற்குக் காரணமென இப்போது புரிகிறது.

Q

காஷ்மீரில் தற்போது பெண்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது?

A

பள்ளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதனால் பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது. ஆனாலும் கல்வித் தரம் மேம்படவில்லை என்பதுதான் வேதனை. என்னுடைய பாட்டிமார்கள், அக்கம்பக்கத்து மூதாட்டிகள் பள்ளிக்குச் சென்றவர்கள் அல்லர். இன்றோ மகள்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவதற்கேணும் பள்ளிக்கு அனுமதிக்கப்படும் பெண் பிள்ளைகளை காண்கிறேன். ஒரு ஓரத்தில் பெண்களுக்கான அதிகாரம் குறித்த பிரக்ஞையும் தாய்மார்கள் மனதில் துளிர்த்துள்ளது.

Q

கவிதையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

A

நான் கவிதையை தேர்ந்தெடுக்கவில்லை. கவிதைதான் என்னை தேர்ந்தெடுத்தது.

Q

சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகக் கலையை பார்க்கிறீர்களா?

A

கவிதைகள் எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக மட்டுமே வைத்திருப்பதில்லை. சில நேரம் சோகமாக்கும். சில நேரம் சிந்திக்க வைக்கும். அத்துடன் ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து கொள்ளவும், பிறர் மீது கரிசனமும் கொள்ள வைத்து இந்த உலகை சிறப்பாகக் காட்டுகிறது இல்லையா!

Q

ஒரு காலத்தில் காஷ்மீர் என்றாலே இலக்கியவாதிகள், கவிஞர்கள், பண்டிதர்கள், சால்வைகள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்துக்குப் புகழ்பெற்று இருந்தது. இப்போது நம்மிடையே புதிய முகத்தைப் பெற்றுள்ளதா, காஷ்மீரை நினைக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

A

திகிலடைந்த மக்கள், அதிர்ச்சிக்குள்ளான குழந்தைகள், சூறையாடப்பட்ட தாய்மார்கள் கொண்ட அழகான நிலப்பரப்பு. அமைதியான காஷ்மீர் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் இதுவரை பார்த்ததே இல்லை.

Q

ஊரடங்கு, யுத்தக் காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள்?

A

காஷ்மீர் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழப் பழக்கப்பட்டவர்கள். கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உலக மக்கள் புகார் செய்வதை பார்க்கும்போது, அவர்கள் இங்கு வாழ்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

Q

அந்த நேரத்தில் சமூக ஊடகங்களின் எழுச்சி, உங்கள் பள்ளத்தாக்கில் பாதிப்பை ஏற்படுத்தியதா?

A

பல்வேறு துறைகளில் மக்கள் சமூக ஊடகங்களால் அறிவை பெற்று இருக்கின்றனர். மக்கள் தங்கள் உரிமைகளை முன்பை விட அதிகமாக அறிந்திருக்கிறார்கள். தாங்கள் பல காலம் நம்பியிருந்த பிம்பங்கள் மீதான தவறான நம்பிக்கைகள் உடைக்க சமூக ஊடகம் உதவியிருக்கிறது.

Q

இலக்கியத் துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன, இலக்கியத்தில் பாலின வேறுபாடு உள்ளதா?

A

காலங்காலமாக இலக்கியம் ஆண்களின் பரப்பாகவே இருந்து வருகிறது. அறிவார்ந்த செயல்களை பெண்களால் செய்ய முடியும் என்பதை நம்பவும், ஒப்புக்கொள்ளவும் சில ஆண்களுக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. ஆண்களின் அத்தகைய வரையறைக்குள் பெண்கள் செல்லும்போது அவர்கள் விரோத உணர்வு கொள்கிறார்கள். அத்தகைய விரோத மனப்பான்மைக்கு நடுவே நீடித்திருப்பதே நான் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்.

ஆணாதிக்க கொடி உயரே பறக்கும் சமூகத்தில் இதுபோன்ற விஷயங்கள் மிகவும் பொதுவானவை. தற்போது பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சூழல் மெதுவாக மாறி வருகிறது. தன்னுடைய இருப்பின் காரணமாக ஆண் பதற்றமடைவதை பார்த்து அவர் இருக்கும் அறையை விட்டு ஒரு பெண் வெளியேறும் நிலை ஒருநாள் மாறும் என்று நான் நம்புகிறேன். கனவும் காண்கிறேன்.

Q

ஒரு கவிஞராக இருப்பதால் மக்கள், மாணவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

A

எனது மக்களிடமிருந்து நான் மிகுந்த பாராட்டுக்களையும் அன்பையும் பெற்றுள்ளேன். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ விரும்புகிறேன். மாணவர்களுக்கு நான் அவர்களின் ஆசிரியர் அவ்வளவுதான். அங்கு நான் கவிஞராக இருப்பதில்லை.

Q

தெற்கிலிருந்து அதுவும் தமிழகத்திலிருந்து ஒரு விருதைப் பெறுவது பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

A

மிகப்பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். எனக்கு தென்கோடி தமிழகத்திலும் வாசகர்கள் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

Q

எதிர்காலத் திட்டம்?

A

எழுதிக் கொண்டே இருப்பது.

கவிஞர் நிகத் சாஹிபா
கலைஞர் பொற்கிழி விருது பெரும் நிகத் சாஹிபா யார்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in