கலைஞர் பொற்கிழி விருது பெரும் நிகத் சாஹிபா யார்?

நிகத் சாஹிபா
நிகத் சாஹிபா

கலைஞர் பொற்கிழி விருது 2007-ல் உருவாக்கப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 30-வது புத்தகக் கண்காட்சி விழாவில் கலந்து கொண்டார். அப்போது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இதனால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை கவிதை, புனைவிலக்கியம், நாடகம், உரைநடை ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கும் ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்துக் கவுரவித்து வருகிறது.

இம்முறை மூவர் அடங்கிய விருதுக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால், ’தமிழ் எங்கள் மூச்சு’ என்று வாழ்ந்த கலைஞர் தமிழல்லாத பிற இந்திய மொழி எழுத்தாளருக்கும் ஒரு விருது கொடுக்க வேண்டும் என்று நினைத்த பரந்த சிந்தனைதான்.

”என்னைப் பெண் கவிஞர் என்றழைக்காதீர்கள். என்னைப் பொதுவாக கவிஞர் என்றே அழையுங்கள்” என்று சொல்லும் நிகத் சாஹிபாவுக்குத்தான் இந்த முறை கலைஞர் பொற்கிழி விருது கொடுக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்தோம்...

இந்த ஆண்டு கவிதைக்கு கவிஞர் அபி, புனைவுக்கு இராஜேந்திர சோழன், உரைநடைக்கு எஸ்.ராமகிருஷ்ணன், நாடகத்துக்கு வெளி ரங்கராஜன், ஆங்கிலத்துக்குப் பேராசிரியர் ப. மருதநாயகம் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அகில இந்திய அளவில் பிறமொழி எழுத்தாளரை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதன்படி கிரிஷ் கர்னாட் (கன்னடம்), அபுரி சாயாதேவி (தெலுங்கு), அர்ஜுன் டாங்ளே (மராத்தி) , எட்வின் ஜோசஃப் பிரான்சிஸ் டிசவ்சா (கொங்கனி) போன்ற பலரும் விருது பெற்று இருக்கிறார்கள். இந்த ஆண்டு பிறமொழி எழுத்தாளர்களில் மகளிரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விருதுக் குழு முடிவு செய்தது. இதன்படி, இந்திய மொழிகளில் எழுதும் பெண் எழுத்தாளர்களை அலசி ஆராய்ந்தோம்.

அப்போது, தமிழகத்திலிருந்து கடைக்கோடியில் இருக்கும் காஷ்மீரி கவிஞர் நிகத் சாஹிபா கவனத்தைக் கவர்ந்தார். 600 ஆண்டு பழமையான காஷ்மீரி மொழியில் இன்று எழுதும் கவிஞர்களில் தனித்துவமான கவிதைக் குரல் நிகத் சாஹிபாவுக்குச் சொந்தமானது. இவர், யுவபுரஸ்கார் விருது பெற்றவராகவும் 21-ம் நூற்றாண்டின் புதிய குரலாகவும் இருந்தது எங்களை உற்சாகப்படுத்தியது.

”என்னைப் பெண் கவிஞர் என்றழைக்காதீர்கள். என்னைப் பொதுவாக கவிஞர் என்றே அழையுங்கள்” என்று சொல்லும் நிகத் சாஹிபாவுக்குத்தான் இந்த முறை கலைஞர் பொற்கிழி விருது கொடுக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்தோம்.

இலக்கிய உலகில் இவரது கவிதைகளின் கருத்துகளைப் பார்த்த ஆண் இலக்கியவாதிகள் நேரில் புகழ்ந்தாலும் முதுகுக்குப்பின், ”இவருக்கு வேறு யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள்” என்று கிசுகிசுத்தனர்.

காஷ்மீரின் கிராமத்தில் பிறந்த இஸ்லாமியப் பெண்ணான நிகத் சாஹிபாவின் தாய் படிக்காதவர். தந்தை 8-ம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். காஷ்மீரில் முதலில் புத்தகங்கள் கிடைப்பதே கடினம். தொடக்கப்பள்ளியில் பல பெண்கள் இவரோடு படித்தனர் என்றாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 10-ம் வகுப்பைத் தாண்ட முடியவில்லை. இவர் நிறைய புத்தகங்கள் படிப்பதால், யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று தாயார் பயப்பட்டார். ஆனாலும் தன் மகள் பட்டம் பெற்று அரசாங்க வேலைக்குப் போக வேண்டும் எனக் கருதினார். எனவே, சாஹிபா கல்வியைத் தொடர தாய் அனுமதித்தார்.

ஒருவழியாக தனது பட்டப் படிப்பை முடித்து ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தார். சுயமாக சம்பாதிக்கத் தொடங்கினார். இந்தப் பணம்தான் குடும்பத்துக்குள் இவருக்குச் சில சுதந்திரங்களைப் பெற்றுக் கொடுத்தது. கவிதை எழுதுவதால் பணம் சம்பாதிக்க முடியாது என்று கருதி, இவரது கவிதை முயற்சிகளை ஊக்கப்படுத்தாமல் இருந்த குடும்பம், இவர் சம்பாதிக்கத் தொடங்கியவுடன் இவரைக் கவிதை எழுத அனுமதித்தது.

இலக்கிய உலகில் இவரது கவிதைகளின் கருத்துகளைப் பார்த்த ஆண் இலக்கியவாதிகள் நேரில் புகழ்ந்தாலும் முதுகுக்குப்பின், ”இவருக்கு வேறு யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள்” என்று கிசுகிசுத்தனர். இவர் விருதுகள் பெற்றபோது பெண் என்பதால்தான் விருதுகள் அளிக்கப்படுவதாகப் பேசினர். இவற்றால் மனம் வெதும்பி ஒரு காலகட்டத்தில் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

2013-ல் ஒரு பெண் இசைக்குழு காஷ்மீரில் பயங்கரக் கொலை மிரட்டல்களைச் சந்தித்தது. இதனால் அந்த இசைக்குழுவே கலைக்கப்பட்டது. இத்தகைய சமூகச் சூழலில் விமர்சனங்களால் தன் எழுத்தை நிறுத்துவது என்பது, தனது எதிரிகளை வெற்றியடையச் செய்துவிடும் என்ற புரிதல் வந்தவுடன் நிகத் சாஹிபா மீண்டும் எழுதத் தொடங்கிவிட்டார்.

இசைத்துறையில் இருக்கும் ஒரு பெண்ணை ’பெண் பாடகி’ என்றும் நடனமாடும் ஒரு பெண்ணை ’பெண் நடனக்காரி’ என்றும் அழைக்கும் வழக்கம் இல்லாதபோது, ஏன் கவிஞர்களை மட்டும் ’ஆண் கவிஞர்’, ’பெண் கவிஞர்’ என்று குறிப்பிடுகிறார்கள் என்பது இவரது கேள்வி.

ஆண், பெண் என்று பால்பாகுபாடு தேவைப்படாத இடங்களில்கூட ஆண், பெண் பேதம் பாராட்டுவது என்பது பிரித்துச் சிந்திக்கும் ஒரு பழக்கத்தினால் வருவது. ஒருவரைக் கவிஞர் என்று சொன்னாலே போதுமானது. இதில் ஆண் கவிஞர், பெண் கவிஞர் என்கிற பேதம் பாராட்டுவது ஒரு பிரதியை வாசிக்கையில் அப்பிரதி குறித்த முன்கூட்டிய அனுமானங்களை ஏற்படுத்தித் திறந்த மனநிலையில் ஒரு பிரதியை வாசிக்கவிடாமல் செய்கிறது என்று இவர் வாதிடுகிறார்.

இத்தகைய நிகத் சாஹிபாவின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காஷ்மீரி , தமிழ் ஆகிய மொழிகளுக்கிடையே ஒரு புதிய உரையாடல் தொடங்கும் என்று நம்புவோமாக.

ஒரு அமைதி கவிதை

நிகத் சாஹிபா

தமிழில்: இந்திரன்

என் முன்னாலேயே நீங்கள் மக்களைக் கொல்கிறீர்கள்.

நான் துக்கம் அனுஷ்டிக்கிறேன்.

நீங்கள் அவர்களுக்காக மக்களைக் கொல்கிறீர்கள்.

அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

அவர்களுக்காக மக்கள் உங்களைக் கொல்கிறார்கள்.

அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

”நான்”கள் சிலர்தான்

– சிதறிப்போய், களைத்துப் போய், சுருங்கிப்போய்.

”அவர்கள் “ நிறைய பேர் :

ஒற்றுமையாக, சக்தி மிக்கவர்களாக ,

விரிவடைந்து கொண்டே...

கவிதை

நிகத் சாஹிபா

தமிழில்: இந்திரன்

என்னை வந்து சந்திக்கச் சொல்லும்

ஒரு தோழி அல்ல கவிதை...

அனுபவத்தின் வெளிச்சத்தில்

எனக்கு அறிவுரை சொல்வதற்காக

தன் வேலைகளை எல்லாம் தள்ளிப் போடுகிறவள்.

நான் சில பிரச்சினைகளால் சூழப்பட்டு இருக்கும்போது

என் துயரத்தை சொல்லுகிறபோது

எனக்கு உறுதியளிக்கிற ஒருத்தி.

நான் என் கண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும்போது

முன்னால் இருக்கும்

ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்ததை வெளியிடும்போது

மனசார என்னைப் பின் தொடர்பவள்

கட்டுரையாளர்: கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர். ‘பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம்’ மொழிபெயர்ப்பு தொகுப்பு உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in