கர்ப்பகாலத்தில் சுய மருத்துவம் செய்வதா?: அவ(ள்) நம்பிக்கைகள்-31

கர்ப்பகாலத்தில் சுய மருத்துவம் செய்வதா?: அவ(ள்) நம்பிக்கைகள்-31

நம்பிக்கை:

"தலைவலி, காய்ச்சல் வந்தா டாக்டர்கிட்ட எதுக்கு உடனே ஓடணும்? மருந்துக்கடையில ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டாலே போதும்..!"

உண்மை:

இது பொதுவாகவே எல்லோரும் செய்வதுதான் என்றாலும், கர்ப்பகாலத்தில் இப்படி சுயமருத்துவம் செய்து கொள்வது சரியா என்பது இன்னும் அதிக கவனம் பெறுகிறது.

பொதுவாக, நாம் எல்லோரும் பயன்படுத்தும் மருந்துகள் மிதமானவையா அல்லது வீரியம் மிக்கவையா என்பதை, அந்த மருந்துகளை Category A, B, C, D, X என வகைப்படுத்துவதன் மூலம் தரம் பிரிக்கிறார்கள். மருந்துகளில் A மற்றும் B வகைகள் பாதுகாப்பானவை, C மற்றும் D வகைகள் ஆராய்ந்து வழங்கப்பட வேண்டியவை, X வகையறா முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதுதான் இதன் பொருள்.

ஆனால், ஒரு மருந்து கர்ப்பகாலத்தில் அது தாய்க்கும் சேய்க்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை வைத்துத்தான் மருந்துகளை இப்படி வகைப்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக சிறு காய்ச்சல், லேசான தலைவலி, அசிடிட்டி போன்ற சின்னஞ்சிறு உபாதைகளுக்கு, பி வகையைச் சார்ந்த பாரசிட்டமால், ஜெலூசில் போன்ற மாத்திரைகள் போதும். இருந்தாலும் இவை அளவுக்கு அதிகமாகும்போது, சிலருக்குக் கல்லீரல் பாதிப்புகள்வரைக் கொண்டு செல்லும்.

அதிலும் கர்ப்பகாலத்தில், எவ்வளவு முறை, எவ்வளவு நாட்கள், ஆகாரத்துக்கு முன்பா அல்லது பின்பா, ஏற்கெனவே உண்ணும் வேறு மருந்துகளுடன் இவற்றை உட்கொள்ளலாமா கூடாதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல், இதே பாரசிட்டமால், ஜெலூசில் போன்றவற்றை எடுத்துக்கொள்வது இன்னும் ஆபத்தானது. பரிந்துரையின்றி எந்த மருந்தையும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதுதான் நல்லது.

"மிகினும் குறையினும் நோய்செய்யும்" என குறள் சுட்டுவதுபோல், அளவு அதிகமானாலும் குறைந்தாலும் நமக்குத் தொல்லை கொடுக்கும் என்பது மருந்துகளுக்கும் சேர்த்தேதான்!

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கர்ப்பகாலத்தில் சுய மருத்துவம் செய்வதா?: அவ(ள்) நம்பிக்கைகள்-31
கிரகணங்களும், கர்ப்ப காலமும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-30

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in