கிரகணங்களும், கர்ப்ப காலமும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-30

கிரகணங்களும், கர்ப்ப காலமும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-30

நம்பிக்கை:

"கிரகணத்தின்போது கர்ப்பிணிப் பெண் வெளியே வந்தால், பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்."

உண்மை:

சமீபத்திய சந்திர கிரகணம், இனி வரவிருக்கும் சூரிய கிரகணம் என கிரகணங்களின் தேதி தெரியும்போதே, கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீட்டில் பலவகையான அறிவுரைகளும் கண்டிப்பாக ஆரம்பித்திருக்கும்.

கிரகணக் கதிர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பட்டால் பிளவுபட்ட உதட்டுடன், காதுகள் இன்றி குழந்தை பிறக்கும், முகத்தில் பல குறைபாடுகள் அல்லது தழும்புகள் ஏற்படக் கூடும் என்று அச்சுறுத்தப்படுகிறது. கிரகணத்தின்போது உணவு மற்றும் தண்ணீர் அருந்தக் கூடாது, எந்தவொரு வேலையும் செய்யக் கூடாது, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும், கிரகணம் முடிந்து, குளித்த பின்னர்தான் உணவை உட்கொள்ள வேண்டும் என கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுரைகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

உண்மையில் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நிகழும் நிழல் விளையாட்டுதான் இந்த கிரகணங்கள். அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான நேர்க்கோட்டில் சந்திரன் கடக்கும்போது, அது சூரிய ஒளியை பூமிக்கு மறைப்பதால் ஏற்படுவது சூரிய கிரகணம். அதுவே சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்க்கோட்டில் பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணமாகும். இந்த இரு இயற்கை நிகழ்வுகளிலும், கர்ப்பிணிப் பெண்கள் உள்பட யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல கிரகணத்தின்போது, உணவருந்தக் கூடாது, தண்ணீர் பருகக் கூடாது, ஓய்வெடுக்க வேண்டும் போன்ற நம்பிக்கைகளில் எந்தவொரு உண்மையும் இல்லை‌.

ஊசி, கத்தி போன்ற கூர்மையான கருவிகளை, கிரகணத்தின்போது மட்டுமல்ல, மற்ற எந்த தருணத்திலும் பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகக் கையாளுதல் நல்லது. கிரகணத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக் கூடாது என்பதிலும் எந்த அறிவியல் உண்மையும் இல்லை.

ஆனால், சூரிய கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடிகள் இல்லாமல் நேரடியாகப் பார்ப்பதை மட்டும் அனைவருமே தவிர்ப்பது நல்லது. அது, பார்வை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கர்ப்பிணிப் பெண்கள் மனதளவில் குழப்பமில்லாமல் இருப்பது எல்லாவற்றையும் விட அவசியம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
கிரகணங்களும், கர்ப்ப காலமும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-30
பிறக்கும்போதே பல் தெரிந்தால் துரதிர்ஷ்டம்!: அவ(ள்) நம்பிக்கைகள்-29

Related Stories

No stories found.