’டேட்டிங் ஸ்கேன்’ தேவையா?

அவள் நம்பிக்கைகள்-3
’டேட்டிங் ஸ்கேன்’ தேவையா?

கர்ப்பத்தை சிறுநீர் பரிசோதனையின் மூலம் உறுதி செய்தாகிவிட்டது. மருத்துவரை சந்தித்து, கடைசி மாதவிலக்கு நின்ற நாளைக் கொண்டு, எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியையும் குறித்தாகிவிட்டது. கருவின் தோழியான ஃபோலிக் அமில மருந்துகளையும் உட்கொள்ளத் தொடங்கியாயிற்று.

இதற்குப் பிறகு ஸ்கேனிங் எதற்கு? அதுவும் அடிக்கடி ஸ்கேன் செய்யச் சொல்கிறார்களே. உண்மையிலேயே இந்த ஸ்கேனிங் பரிசோதனை தேவைதானா? இதில் கதிரியக்கம் எதுவும் உள்ளதா? இந்த ஸ்கேன் பரிசோதனையால் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படுமா? என குழந்தை பிறக்கும் முன், எத்தனை எத்தனை சந்தேகங்கள் நம் மனதில் பிறக்கிறது பாருங்கள்.

இரட்டையரானு கண்டுபிடிக்க...

உண்மையில், ஒரு பெண் கருத்தரித்ததை சிறுநீர் பரிசோதனையின் மூலம் உறுதி செய்தாலும், அதை முழுமையாக உறுதி செய்வதற்காக முதன்முதலாகச் செய்யும் ஸ்கேனிங்கின் பெயர்தான் டேட்டிங் ஸ்கேன்.

கர்ப்பம் தரித்த 7-8 வாரங்களில், அதாவது முதல் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஸ்கேனிங் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது மாதவிலக்கு தள்ளியிருப்பதன் காரணம் கர்ப்பம்தானா என்பதை உறுதி செய்வதோடு, இன்னும் பல முக்கியத் தெளிவுகளையும் தருகிறது.

முதலாவதாக, கருப்பைக்குள்தான் கரு தங்கியுள்ளதா என்பதையும், தங்கிய கரு ஒற்றையா அல்லது இரட்டைக் கர்ப்பமா என்பதையும் இது காட்டிவிடும். வளரும் கருவின் துடிப்பையும், வாரங்களுக்கேற்ப கருவின் வளர்ச்சி உள்ளதா (dating scan) என்பதையும் உறுதி செய்து கொள்ள இந்த ஆரம்பகால ஸ்கேன் உதவுகிறது.

பிரசவ தேதியை கணக்கிட

பொதுவாக, ஒரு பெண்ணின் ஒன்பது மாத கர்ப்பம் என்பது நாற்பது வாரங்கள் அல்லது 280 நாட்களைக் குறிப்பதாகும். கடைசி மாதவிலக்கு நாளைக் கொண்டு கருவின் வயதை மருத்துவர்கள் கணக்கிடுவர். ஆனால், ஒழுங்கற்ற மற்றும் நீடித்த மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு, ovulation என்ற அண்டவிடுப்பு தாமதிப்பதால், கரு உருவாகும் காலமும் மாறுபடுகிறது.

உதாரணத்துக்கு, உண்மையில் மாதவிடாய் நின்று எட்டு வாரம் ஆகியிருந்தாலும், நீடித்த மாதவிலக்கு உள்ள இப்பெண்களுக்கு, கருவின் வளர்ச்சி ஆறு வாரங்களையோ, அதற்கும் குறைவாகவோ காட்டக் கூடும். அதன்படி எதிர்பார்க்கப்படும் பிரசவத் தேதியும் தாமதமாகும். ஆகையால் இதுபோன்ற நிலைகளில், கருவுற்ற பெண்ணுக்கு உத்தேச பிரசவ தேதியை (Corrected EDD) முடிவுசெய்ய இந்த டேட்டிங் ஸ்கேன் பெரிதும் உதவுகிறது.

இப்படி, கருவின் வளர்ச்சி மூலம் சரியான பிரசவ தேதியை உறுதி செய்யவும், தேவைப்படும்போது அந்தத் தேதியை மாற்றியமைக்கவும் இந்த ஸ்கேனிங் உதவுவதால்தான், டேட்டிங் ஸ்கேன் முக்கியத்துவம் அடைகிறது.

மேலும், கரு உருவாகி வளரும் இடத்தில் ஏதேனும் ரத்தக்கசிவு (subchorionic bleed) இருந்தாலோ, கருப்பையில் ஃபைப்ராய்டு போன்ற கட்டிகள் இருந்தாலோ, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தாலோ அவற்றை கணிக்க உதவும். தேவைப்பட்டால் அவற்றுக்கான தனிசிகிச்சை எடுக்க முடிவு செய்வதற்கும் இந்த ஸ்கேனிங் உதவுகிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
’டேட்டிங் ஸ்கேன்’ தேவையா?
பிறவி ஊனங்களை தடுக்கக்கூடிய ஒரே மாத்திரை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in