பிறவி ஊனங்களை தடுக்கக்கூடிய ஒரே மாத்திரை!

அவள் நம்பிக்கைகள்-2
பிறவி ஊனங்களை தடுக்கக்கூடிய ஒரே மாத்திரை!

கர்ப்பம் தரித்தவுடன், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் மருந்தைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளும் முன்னர், முக்கியமான ஒரு தகவலைத் தெரிந்து கொள்வோமா?

கருவின் தோழி!

தமிழகத்தில் மருத்துவமனைகளில் மட்டும், ஆண்டுதோறும் 15 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். இவர்களில், ஆயிரம் குழந்தைகளில், 65 குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் (6.5%) பிறக்கின்றனர். அதிலும் பெரும்பான்மையினர், மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக் குறைபாடுகளுடன் (4.5%) பிறக்கின்றனர். மரபியல், சுற்றுச்சூழல், கதிரியக்கம் போன்ற காரணங்களால் இதுபோன்ற பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம்.

மறுபுறம் இதில் அதிகளவில் காணப்படும் Neural Tube Defects எனும் மூளை மற்றும் தண்டுவட எலும்பு மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடுதான். இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒரு சாதாரண மாத்திரையால், அதாவது கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் ஒரு மாத்திரையால் தடுத்துவிட முடியும்.

ஆம்! கர்ப்பம் தரித்தவுடன், கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் மருந்தான ஃபோலிக் அமிலம் எனும் வைட்டமின் மாத்திரை தான் அது. ‘கருவின் தோழி’ என்று மருத்துவர்களால் கொண்டாடப்படும் இந்த ஃபோலிக் அமில மருந்துகளைக் கர்ப்ப காலத்தில் ஏன், எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

அனைத்து உறுப்புகளுக்கும் துணை!

நீரில் கரையும் பி வகை (B-9) வைட்டமின்களில் ஒன்று ஃபோலிக் அமிலம். இது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் அவசியமானது. நமது செல்களின் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ வளர்ச்சிக்கு இது உறுதுணையாக உள்ளது. உடலின் உறுப்புகள் அனைத்துக்கும், அதிலும் முக்கியமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள இது முக்கியம்.

மூளையின் செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், மனஅழுத்தத்தில் இருந்து நம்மை விடுபடவும், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் நம் பக்கத்திலேயே வராமல் இருக்கவும் இது உதவுகிறது. அதேபோல, மற்ற அனைத்து உறுப்புகளின் இயக்கத்துக்கும் ஃபோலிக் அமிலம் துணை நிற்கிறது.

இந்தப் பொதுப் பலன்களைத் தாண்டி, கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கக்கூடிய கருச்சிதைவு, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை போன்ற பல்வேறு சிக்கல்களையும், இந்த ஃபோலிக் அமிலம் தவிர்க்கிறது. அதாவது, கர்ப்பிணிப் பெண் கருத்தரித்த நாள் முதல், கருவின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் ஃபோலிக் அமிலம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

முதல் 3 மாதங்கள்

அதிலும் முக்கியமாக, கருவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் முதல் மூன்று மாதங்களில் (First Trimester) செல்கள் உருவாவதற்கும், பெருகுவதற்கும், அதன் மூலம் உறுப்புகள் உருவாவதற்கும் ஃபோலிக் அமிலம் அவசியம். அவற்றுள் முக்கியமாக, நம் நரம்பு மண்டலமான மூளை, முதுகுத் தண்டுவடம் ஆகியன சரியாக உருவாவதற்கும் தேவை. அத்துடன் அவற்றைப் பாதுகாக்கும் மண்டை ஓடு மற்றும் தண்டுவட எலும்புகள் கூடுவதற்கும் ஃபோலிக் அமிலம் இன்றியமையாதது. ஆக, தாயின் வயிற்றில் வளரும் கருவிற்கு எல்லா வகையிலும் துணை நிற்கிறது.

போதாமையின் விளைவு!

எப்படி இந்த வைட்டமின் தேவையான அளவில் இருக்கும்போது கரு வளர உதவுகிறதோ, அதேபோல, அதன் பற்றாக்குறை ஏற்படும்போது விளையும் பாதிப்பு அதிகம். ஃபோலிக் அமிலத்தின் போதாமை வளரும் கருவில்

Neural Tube Defects எனும் நரம்பு மண்டல பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதிலும் முக்கியமாக மூளையைச் சுற்றி மண்டை ஓடு இல்லாத Anencephaly எனும் நிலை, தண்டுவடத்தைச் சுற்றி அதன் எலும்புகள் கூடாத Spina bifida, அதில் நரம்புகள் வெளியே பிதுங்கி நிற்கும் Meningo Myelocele போன்ற நரம்பு மண்டலம் சார்ந்த, அதிபயங்கரமான பிறவிக் குறைபாடுகளை இதன் பற்றாக்குறை ஏற்படுத்துகிறது. மேலும் இதய, சிறுநீரக மற்றும் செரிமான உறுப்புகளில் குறைபாடுகளையும், ரத்த சோகை, சமயத்தில் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஆகியவற்றையும் இந்த ஃபோலிக் அமிலப் பற்றாக்குறை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் முறையாக ஃபோலிக் அமிலம் மருந்துகளை உட்கொள்ளுதல் குழந்தையின் பிறவி ஊனங்களை 70-75% வரை தடுக்கிறது. ஆகையால், கருத்தரித்த உடனேயோ அல்லது கருத்தரிக்கத் திட்டமிடும் போதே, ஃபோலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ள மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன், கர்ப்ப காலம் முழுவதும், இரும்புச்சத்துடன் கூடிய ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்வது ரத்த சோகை, கர்ப்ப கால ரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய், வலிப்பு நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும். பிரசவத்திற்குப் பின் பால் சுரப்பையும் கூட்டுகிறது.

அதனால்தான், அயர்ன், ஃபோலிக் மாத்திரைகளை நமது அரசாங்கம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ காலப் பெண்களுக்கும் இலவசமாக வழங்கியும் வருகிறது.

உணவில் இல்லையா?

ஏன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், இயற்கை உணவுகளில் இந்த ஊட்டச்சத்து இல்லையா என்பதற்கு பதிலளிக்கிறது மருத்துவம். உண்மையில், ஃபோலிக் என்ற பெயர் வந்ததே, 'ஃபோலியம்' அதாவது இலை என்ற சொல்லிலிருந்துதான் என்கிறது மருத்துவ அறிவியல். இந்த ஃபோலிக் அமிலம் நாம் அன்றாடம் உட்கொள்ளும் பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு மற்றும் கொட்டை வகைகள், சிறுதானியங்கள் போன்ற அனைத்து உணவுகளிலும் இயற்கையாகவே கிடைக்கிறது. சுலபமாக நீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின், சமைக்கும்போது எளிதாக சிதைந்துவிடுகிறது. ஆகையால் இயற்கை உணவு மட்டுமே போதாது என்று உணவுடன் ஃபோலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும்

பொதுவாக, கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணுக்கு குறைந்தது 500 மைக்ரோ கிராம் அளவு ஃபோலிக் அமிலம் (400-600 mcg) தேவைப்படும். அதேசமயம் முந்தைய கருவில் நரம்பு மண்டலக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், சற்றுக் கூடுதலாக 5 மில்லிகிராம் அளவு தேவைப்படலாம். கர்ப்ப கால ஆரம்பத்தில் மட்டுமில்லாமல், கருத்தரிப்பதற்கு முன்பே, ஏன் இன்னும் சொல்லப்போனால் திருமண வயதை அடையும்போதே ரத்த அளவைப் பரிசோதித்துக் கொண்டு, ஃபோலிக் அமிலம் மருந்துகளை உட்கொள்வதும் பெண்களுக்கு நல்லது.

கருத்தரிப்பு மற்றும் பேறுகாலத்திற்குப் பின்னும், ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காப்பு அளிக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வுகள். மிகவும் குறைந்த விலையில், மிக எளிதாகக் கிடைக்கும் இந்த ஃபோலிக் அமில மாத்திரைகளில், L மிதைல் ஃபோலேட் வகை மருந்துகள், குறைந்த அளவில் அதிகத் திறனுடன் செயல்படுவதால் இப்போது இதுவும் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆக, கருத்தரித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தோழியாக விளங்கும் இந்த ஃபோலிக் அமிலம் எனும் முதல் மருந்து, தாய் சேய் இருவருடைய நலத்தையும் ஒருங்கே வழிநடத்தும் முக்கிய மருந்தாகவும் இருக்கிறது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
பிறவி ஊனங்களை தடுக்கக்கூடிய ஒரே மாத்திரை!
கர்ப்பப் பரிசோதனை எப்போது செய்யலாம்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in