அமெரிக்க அழகிகளை தேர்வு செய்யும் அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, மிஸ் அமெரிக்கா மற்றும் மிஸ் டீன் அமெரிக்கா என நடப்பு அமெரிக்க அழகிகள் இருவர் தங்கள் பட்டங்களை அடுத்தடுத்து துறந்துள்ளனர். இருவரில் மிஸ் டீன் அமெரிக்கா அழகியான உமாசோபியா ஸ்ரீவஸ்தவா, இந்திய வம்சாவளியை சார்ந்தவர்.
உலகளவில் அழகிகளுக்கான பகிரங்க போட்டி கலாச்சாரத்தை தொடங்கி வைத்த பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. எந்த நாட்டு அழகியானாலும் ஹாலிவுட் அங்கீகாரம் மூலமாக அந்த அழகிகளின் கிரீடத்துக்கு அமெரிக்கா அங்கீகாரம் சேர்த்ததும் உண்டு. அத்தகைய அமெரிக்காவில் மிஸ் அமெரிக்கா மற்றும் மிஸ் டீன் அமெரிக்கா என இரு அழகிகள் தங்கள் அழகிப் பட்டத்தை ராஜினாமா செய்திருப்பது அழகிப் போட்டி உலகத்துக்கு அப்பாலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிஸ் அமெரிக்கா(மிஸ் யுஎஸ்ஏ) அழகிப் போட்டியின் 72 வருட வரலாற்றில் இல்லாத அவலமாக, அழகிகளாக தேர்வானோர் அதிருப்தி பொங்க தங்கள் கிரீடங்களை வலிய துறந்துள்ளனர். மிஸ் யுஎஸ்ஏ நோலியா வோய்ட் மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ உமா சோபியா ஸ்ரீவஸ்தவா என ஆகிய இருவரும் அடுத்தடுத்து ராஜினாமாக்களை அறிவித்து அழகிப் போட்டி உலகத்துக்கு அதிர்ச்சி தந்துள்ளனர். மனநல கவலைகளை முன்னுரிமையாகக் குறிப்பிட்டு, வொய்க்ட் தனது கிரீடத்தின் ஆயுள் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அதனை துறந்தார். இந்த வகையில் அமெரிக்க அழகிப் போட்டி வரலாற்றில் இதுவரை இல்லாததாக மிஸ் யுஎஸ்ஏ-வாக தேர்வான ஒருவர் தனது பட்டத்தையும், கிரீடத்தையும் துறந்துள்ளார்.
மிஸ் அமெரிக்கா அழகியாக, நோலியா வொய்ட் தனது 24 வயதில் பட்டம் சூடினார். இவரது ராஜினாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய வம்சாவளியான உமா சோபியாயும் தனது மிஸ் டீன் அமெரிக்கா அழகி பட்டத்தை துறந்தார். உமா சோபியாவின் துணிச்சலை வொய்ட் பாராட்டியிருப்பதோடு, அவரது எதிர்காலம் குறித்தான கவலைகளையும் எழுப்பியுள்ளார். நியூ ஜெர்சியை சேர்ந்த மெக்சிகன்-இந்திய அமெரிக்கர் என்ற விநோத கலவையில் வளர்ந்த உமா சோபியா 17 வயதில் தன்னை அலங்கரித்த மிஸ் டீன் அமெரிக்கா பட்டம் மற்றும் கிரீடத்தையும் துறந்திருப்பது, அமெரிக்க அழகிப்போட்டி அமைப்பினர் மீது புரையோடிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த கிரீடம் துறப்புக்கு பின்னணியில் அழகிகள் இருவரும் தங்கள் மனத்தாங்கலை வெளிப்படையாக முன்வைக்காதபோதும், மிஸ் அமெரிக்கா அமைப்பின் தவறான நிர்வாகம், நச்சு வேலை கலாச்சாரம் மற்றும் அழகிப் போட்டியாளர்களுக்கு திணிக்கப்படும் மன அழுத்தம் ஆகியவை தொடர் கேள்விகளை எழுப்பி உள்ளன. மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் நிர்வாகங்களில் ஊழல் மற்றும் ஊழியர்களை மோசமாக நடத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இது தவிர்த்து மிஸ் யுனிவர்ஸின் உரிமையாளராக இருந்த டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ குற்றவாளிகள் மற்றும் பாலியல் பலாத்கார நபர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாகக் குற்றம் சாட்டிய சர்ச்சையில் என்பிசி யுனிவர்சல் அமைப்பு போட்டியாளர்களுடனான உறவை முறித்துக் கொண்டதும் நடந்தது.
மேலும் மிஸ் அமெரிக்கா நிர்வாகிகள் பலருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிளாடியா மிச்செல் போன்றவர்கள் இதனை பகிரங்கமாக எழுப்பியுள்ளனர். இந்த அதிருப்திகளுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையிலும் தார்மீக ஆதரவை வழங்கும் பொருட்டும் உமாசோபியா தனது எதிர்காலத்தை இழந்திருப்பதாக அழகிப் போட்டி உலகம் கவலை தெரிவித்துள்ளது. வேர்களை மறக்காக உமா சோபியா இந்தியாவின் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி, சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பெற உதவுவதற்கான ’லோட்டஸ் பெட்டல்’ என்ற அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த வகையில் அவரது முடிவு இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!
பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!
ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!
16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!