16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

நடவுப்பணி
நடவுப்பணி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறை சார்பில் புதிய  இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்று எட்டு மாதத்திற்குள் வட்டி இல்லாமல் கடனை திருப்பி செலுத்துகிறார்கள்.  இது விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான கடன் குறித்த புதிய இலக்கு நிர்ணயித்து தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 'தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்புறுத்தி அதன் நகலை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிர்சாகுபடி செய்யும் பரப்பளவு, சாகுபடி செய்யப்படும் பயிர் வாரியாகவும், பருவ கால வாரியாகவும், காலாண்டு வாரியாகவும், மாத வாரியாகவும், வட்டார வாரியாகவும், சங்க வாரியாகவும் குறியீடு நிர்ணயம் செய்து கொள்ளவேண்டும்.

30 சதவீதம் சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும். 

நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் பட்சத்தில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், மண்டல இணை பதிவாளர்கள் 2024-25ம் ஆண்டிற்குள் பயிர்க்கடன் வழங்குதலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டிட செயல் திட்டம் தயாரித்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

பயிர்க்கடனில் அதிகளவில் தகுதியுள்ள விவசாயிகள் பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதில் எவ்வித புகாரும் இருக்கக் கூடாது. தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி, ஆண்டு குறியீட்டினை முழுமையாக எய்திட தனிக்கவனம் செலுத்த வேண்டும்' என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in