குழந்தையை வெயிலில் காட்டினால் காமாலை குணமாகும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-26

குழந்தையை வெயிலில் காட்டினால் காமாலை குணமாகும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-26

நம்பிக்கை:

"பிறந்த குழந்தைக்கு காமாலை ஏற்படலாம். அப்போது வெயிலில் காட்டினால் போதும் குணமாகிவிடும்!"

உண்மை:

பிறந்த குழந்தையின் ஹீமோகுளோபின் மாற்றம் அடைவதும், அதற்கேற்ப குழந்தையின் ரத்த அணுக்கள் சிதைவதும் இயற்கையாகவே குழந்தை பிறந்த 2 வாரங்கள்வரை நிகழும் நிகழ்வாகும்.

இந்த சமயத்தில், ஒருபுறம் குழந்தையின் மலம் கருமையிலிருந்து படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறுவதைப் போலவே, மறுபுறம் சருமத்தின் நிறமும் சற்று மஞ்சள் நிறத்துடன் காணப்படுவதும் நிகழ்கிறது. மருத்துவர்கள் இதை உடலியல் காமாலை (Physiological Jaundice) என்று அழைக்கின்றனர். காமாலை என்றாலும், பொதுவான மஞ்சள் காமாலையைப்போல இதற்குப் பயப்படத் தேவையில்லை.

இந்த வகையான மஞ்சள் காமாலை, பெரும்பாலான குழந்தைகளுக்கு வரும் இயல்பான ஒன்றுதான். இருப்பினும் இதற்கான சிகிச்சை என்பது நிச்சயமாக சூரிய ஒளியில் குழந்தையைக் காட்டுவது அல்ல. லேசான அளவில் காமாலை இருந்தால் சிக்கல் இல்லை. ஆனால், சருமத்திலும் மற்ற திசுக்களிலும் அதிக அளவில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் தேங்கி இருந்தால், மருத்துவமனையில் ஃபோட்டோதெரபி எனும் புற ஊதாக் கதிர்கள் கொண்டு பிலிரூபினை வெளியேற்றுவதுதான் இதற்கான முறையான சிகிச்சையாகும்.

ஒருவேளை, கிருமித் தொற்றின் காரணமாக ஏற்படும் காமாலை மற்றும் கல்லீரல் நோயால் ஏற்படும் காமாலையாக இருக்கும் பட்சத்தில், குழந்தைக்குப் பாதிப்புகள் அதிகரித்து சிகிச்சையும் அதிகமாகலாம். எனவே, நாமே ஒரு முடிவெடுக்காமல் மருத்துவரை அணுகுவது இதில் முக்கியமாகிறது.

ஆக, பெற்றோர்களோ குடும்பத்தினரோ அதிகாலை சூரிய ஒளி தோலின் வைட்டமின் டி அளவைக் கூட்டப் பயன்படுகிறது என்பதைத் தாண்டி அதை, குழந்தையின் மஞ்சள் காமாலைக்கான சிகிச்சையாக முடிவெடுத்துவிடக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் நலம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
குழந்தையை வெயிலில் காட்டினால் காமாலை குணமாகும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்-26
திருஷ்டி போக்க குழந்தைக்கு கண்ணாடி வளையல் போடணும்!: அவ(ள்) நம்பிக்கைகள்-25

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in