கர்ப்பப் பரிசோதனை எப்போது செய்யலாம்?

அவள் நம்பிக்கைகள்!-1
கர்ப்பப் பரிசோதனை எப்போது செய்யலாம்?

இதுவரை, 'அவ(ள்) நம்பிக்கைகள்' என்ற தலைப்பில், கர்ப்ப காலத்தில் நிலவி வரும் பல்வேறு மூடநம்பிக்கைகளையும், அவற்றின் அறிவியல் உண்மைகளையும் தெரிந்து கொண்டோம். இனி தொடர்ந்து, அவளுக்கு நம்பிக்கை அளிக்கும், அதாவது கர்ப்ப காலத்தில், தெரிந்து கொள்ள வேண்டிய, மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்.

’கார்ட் டெஸ்ட்’ செய்யலாமா?

தனக்குள்ளே ஓர் உயிர் வளர்கிறது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அற்புத அனுபவம். அதன் அசைவை, துடிப்பை, தானே உணர்வது இன்னும் பெரிய ஆச்சரியம் ஆகும்.

ஆனால், தனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்பதை உறுதி செய்து கொள்வது முதலில் ஒரு பெண்ணுக்கு அவசியமாய் இருக்கிறதல்லவா. அப்படி உறுதி செய்யும் பரிசோதனை முறைகளைப் பார்ப்போம்.

முதலில் இருப்பதிலேயே எளிதான, தானாக வீட்டில் செய்து பார்த்துக் கொள்ளக்கூடிய கார்ட் டெஸ்ட் குறித்து தெரிந்துகொள்வோம். திருமணம் முடிந்து, குழந்தைப்பேறுக்குக் காத்திருக்கும் பெண்களின் முதல் கேள்வியே, "மாதவிலக்கு தள்ளிய எத்தனை நாட்களில் இந்தப் பரிசோதனையைச் செய்து பார்க்கலாம்?" என்பதுதான்.

உண்மையில், மாதவிலக்கு தள்ளிய ஓரிரு நாட்களிலேயே, இந்த கார்ட் டெஸ்ட் எனப்படும் ஓர் எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.

Urine Pregnancy cards எனப்படும் சிறுநீர் பரிசோதனை அட்டைகள், கர்ப்ப காலத்தில் அதிகளவில் சுரக்கும் ஹெச்.சி.ஜி. என்ற ஹார்மோனை வைத்து முடிவைச் சொல்வதாகும். இந்த விலை குறைவான அட்டைகளை வைத்து, மிக எளிமையான இந்தப் பரிசோதனையைச் செய்வதால் வீட்டிலேயே நம்மால் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.

எப்போது சோதனை செய்யலாம்?

மேலும், முன்னர் நம்பப்பட்டதுபோல், காலையில், முதல் சிறுநீரை எடுத்துத்தான் பரிசோதனை செய்யவேண்டும் என்பதில்லை. உண்மையில் இப்பரிசோதனைக்குக் கால வரைமுறைகள் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மாதவிலக்கு தள்ளிப்போன பெண்ணின் சிறுநீரை எடுத்து, ’ப்ரெக்னென்சி’ பரிசோதனைக் கார்டில் குறிக்கப்பட்ட இடத்தில் (well) 2-3 சொட்டுகள் விட்டு சற்று பொறுத்திருக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குள் கார்டில் இரண்டு சிவப்புக் கோடுகள் தோன்றினால் கர்ப்பம் உறுதி (positive test). ஒரு கோடு மட்டுமே தோன்றினால், கர்ப்பம் இல்லை (negative test) என்றும் புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில், இரண்டாவது கோடு ஐந்து நிமிடங்கள் தாண்டிய பிறகு தாமதமாகத் தெரிந்தாலோ, அல்லது மிகவும் மங்கலாகத் தெரிந்தாலோ, ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை இதேபோல சோதித்து உறுதி செய்து கொள்வது நல்லது.

இதில் இன்னும் உறுதி செய்தல் அவசியம் என்று தோன்றினாலோ, அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டாலோ, இந்தப் பரிசோதனை அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும், தனியார் பரிசோதனை நிலையங்களிலும் மேற்கொள்ளப்படுவதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தவறாக காட்டவும் வாய்ப்புள்ளதா?

உண்மையில் சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும், அதுவே இறுதியானது என்று சொல்ல முடியாது. (Sensitivity 98%). சமயங்களில் இதில் தவறான முடிவுகள் வரலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

ஒன்று false positive, அதாவது கார்ட் டெஸ்டில் பாசிடிவ், என்றாலும் பெண் கருத்தரிக்காத நிலை. ஹார்மோன் மருந்துகள் (chemical pregnancy) மற்றும் சில மருந்துகளை உட்கொள்ளும் போதும், சமீபத்திய கருச்சிதைவு, சினைகுழாய் கர்ப்பம், கருப்பை கட்டிகள் போன்ற நிலைகளிலும் கருப்பையில் கர்ப்பம் இல்லாமலே கார்ட் டெஸ்ட் பாசிடிவ் என்று காட்டக்கூடும்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

அதேபோல, False negative எனப்படும் கார்ட் டெஸ்டில் நெகடிவ், என்றாலும் பெண் உண்மையிலேயே கருத்தரித்த நிலை என்பது, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே டெஸ்ட் செய்வதாலும், கருத்தரிப்பு தாமதமாக நிகழ்ந்திருந்தாலும் ஏற்படக்கூடும். அதாவது கர்ப்பம் இருந்தாலும் இல்லையென்று இதில் காட்டும்..

இதுபோல், முடிவுகள் false positive/ false negative என சந்தேகமாக இருக்கும்போது, மேலோட்டமான சிறுநீர் பரிசோதனையைத் தாண்டி, மருத்துவரின் பரிந்துரையுடன் ரத்தத்தின் ஹெச்.சி.ஜி. அளவைப் பரிசோதிக்கும் Serum beta hCG levels பரிசோதனை செய்வது பயனளிக்கும். ஆனால், இது கார்ட் டெஸ்ட்டைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும்.

இவ்வாறு சிறுநீர் அல்லது ரத்தப் பரிசோதனை மூலம் கர்ப்பம் உறுதியான பின்னர், மாதவிலக்கு தள்ளிப்போன 6-8 வாரங்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். அதிக வயிற்று வலி, ரத்தக் கசிவு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது முன்னரே மருத்துவரை அணுகுவதும் நல்லது.

இப்போது உங்களது கர்ப்பத்தை, மருத்துவர் உறுதி செய்து விட்டாரா?

வாழ்த்துகள்..!

அதற்குப்பின் மேற்கொள்ள வேண்டியவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.