தாயின் க்ரோமோசோம் இல்லாதுபோனால் முத்துமுத்தாக கர்ப்பம்!

அவள் நம்பிக்கைகள்-23
தாயின் க்ரோமோசோம் இல்லாதுபோனால் முத்துமுத்தாக கர்ப்பம்!

திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே மைதிலிக்கு மாதவிடாய் தள்ளிப்போனது. வீட்டிலேயே சிறுநீர்ப் பரிசோதனை செய்யுமாறு மைதிலியின் நாத்தனார் அறிவுறுத்த, அதன்படி மேற்கொண்ட அவளது கார்ட் டெஸ்ட், இரண்டு அழுத்தமான சிவப்புக்கோடுகளுடன் ’பாசிடிவ்’ என்றது...

அனைவரது மகிழ்ச்சிக்கிடையே இடையறாது வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மைதிலி. "தலைச்சன் பிள்ளை அதான் மைதிலிக்கு மசக்கை அதிகம்" என்று அவளை சமாதானப்படுத்தி, மூன்று மாதங்கள் கழித்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் அவளது மாமியார்.

மைதிலியை பரிசோதனை செய்த மருத்துவர், மூன்று மாதங்களிலேயே ஐந்து மாதத்திற்கான வயிறு வளர்ச்சி இருப்பதைக் கண்டு, ஸ்கேனிங் பரிசோதனையை உடனடியாக செய்யுமாறு பரிந்துரைக்க, அதற்குப்பின் தான் பேரதிர்ச்சி காத்திருந்தது மைதிலியின் குடும்பத்திற்கு. 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்ற ஸ்கேனிங் ரிப்போர்ட்டுடன்.

"என்ன டாக்டர் சொல்றீங்க? மைதிலி கர்ப்பம் தரிச்சிருக்கா... ஆனா அதுல குழந்தை இல்ல முத்துப்பிள்ளைன்னு சொல்றீங்க புரியல டாக்டர்" என்று குழப்பத்துடன் மைதிலியின் கணவர் கேட்க, அதற்கடுத்து மருத்துவர் சொன்ன பதில் இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவளது குடும்பத்திற்கு.

"இந்த முத்துப்பிள்ளை கர்ப்பம் ஒருசிலருக்கு புற்றுநோயாக மாறும் வாய்ப்பும் உண்டு" என்றார் மகப்பேறு மருத்துவர்.

திருமண பந்தத்திற்குப் பின், தனக்கென முத்தான பிள்ளைகள் ஒன்றோ இரண்டோ பிறக்கவேண்டும் என ஒவ்வொரு தம்பதியினருக்கும் ஆசை இருப்பது நியாயம். ஆனால்,

மைதிலி போன்ற ஒருசில பெண்களில் மட்டும் கர்ப்பத்தில் குழந்தைக்குப் பதில் சிறுசிறு முத்துக்கள் போன்ற திசுக்கள் மட்டுமே உருவாகுமா? அது ஏன் நிகழ்கிறது? அதற்கான தீர்வு என்ன? இவர்களுக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிட்டுமா? போன்ற கேள்விகளான பதிலை தேடுவோம் வாருங்கள்.

பொதுவாக, ஆணின் 23 க்ரோமோசோம்களும், பெண்ணின் 23 க்ரோமோசோம்களும் இணைந்து உருவாகும் கரு தான் இயல்பானது. அதுதான் கருப்பையில் குழந்தையாக வளர்கிறது என்பதையும் அறிவோம். இதில் ஒருசிலரில் ஆணின் 23 க்ரோமோசோம்கள், பெண்ணின் க்ரோமோசோம்கள் இல்லாத வெறுமையான கருமுட்டையுடன் இணைந்து, தன்னைத்தானே இரட்டிப்பு செய்து கொண்டு, கருவாக உருவாகிறது. அதாவது, இந்த வகைக் கருவில் 46 க்ரோமோசோம்களும் தாயின் பங்களிப்பு எதுவுமின்றி தந்தையிடமிருந்து மட்டுமே பெறப்பட்டவை. இவ்வாறு இயற்கைக்கு மாறாக, பிறழ்வுடன் அது கருவாக முயலும்போது, அதில் கருவோ, கரு வளரும் பையோ அல்லது நஞ்சுத் திசுக்களோ இல்லாமல், நஞ்சு மட்டுமே திராட்சைக் கொத்து போல வளரும் நிலையைத்தான், 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' (molar pregnancy) என அழைக்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்பம் தரிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 2 சதவீதம் பேருக்குக் காணப்படும் இந்த வகைக் கர்ப்பங்கள், மாதவிலக்கு தள்ளிப்போவது, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம், வயிறு பெருத்தல் என ஒரு சாதாரண கர்ப்பத்துக்கான அறிகுறிகளுடன்தான் காணப்படுகிறது.

பொதுவாக, பதின்பருவத்தில் கருத்தரிக்கும்போதும் தாமதமாக முப்பதுகளுக்குப் பின் கருத்தரிக்கும்போதும் ஏற்படும் இந்த முத்துப்பிள்ளை கர்ப்பம், இந்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்ட ஆசியப் பெண்களிடையே அதிகம் (1:160) காணப்படுகிறது. வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் குறைபாடு உள்ளவர்களுக்கும் அதிகம் காணப்படுகிறது. இவர்களில் 10 முதல் 15 சதவீதத்தினருக்குப் புற்றுநோய் அபாயமும் இருக்கிறது என்றுகூறும் மருத்துவர்கள், அத்துடன் இவர்களுக்கு அதிக தைராய்டு சுரப்பு, ரத்த அழுத்தம், கருச்சிதைவின் காரணமாக அதிக ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் ஆகியனவும் ஏற்படலாம் என்கிறார்கள்.

பெரும்பாலும் சாதாரண கர்ப்பம் போலவே அறிகுறிகளைக் காட்டினாலும் பிறழ்வுடன் கூடிய கரு என்பதால், குழந்தைக்குப் பதிலாக முத்துகள் போன்ற திசுக்களாக இவை உருப்பெறுவதுண்டு. கர்ப்பகாலத்தில் சுரக்கும் ஹெச்.சி.ஜி. ஹார்மோனின் அளவும் இங்குப் பெருமளவு அதிகரிக்கிறது. இதனால்தான், ’முத்துப்பிள்ளை கர்ப்பம்’ தரித்த பெண்களுக்கு வாந்தியும் மயக்கமும் சற்று அதிகம் காணப்படுவதுடன் கருப்பையின் வளர்ச்சியும் இதில் அதிகம் என்பதால் இவர்களுக்கு மூன்று மாதங்களிலேயே ஐந்து மாதத்திற்கான வளர்ச்சியும் காணப்படுகிறது.

மாதவிலக்கு தள்ளிப் போனதிலிருந்து கணக்கிட்டுப் பார்க்கும்போது கர்ப்பப்பை அளவில் பெரிதாக இருப்பதை வைத்து இதைக் கணித்துவிடும் மருத்துவர்கள், பிறகு ரத்தப் பரிசோதனையில் ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரிப்பு அளவை வைத்தும் ஸ்கேன் மூலமாகவும் இதை உறுதி செய்கிறார்கள். ஸ்கேனிங் பரிசோதனை இதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், கருப்பையில் கருவிற்குப் பதிலாக பனிப்புயல் (snowstorm appearance) போல திசுக்கள் தோற்றமளிப்பதைக் கொண்டு முத்துப்பிள்ளை கர்ப்பத்தை உறுதிசெய்கிறார்கள். அத்துடன், உருவான கர்ப்பம் வெறும் முத்துப்பிள்ளை கர்ப்பமா (complete mole) அல்லது உண்மையான கருவும், முத்துப்பிள்ளையும் சேர்ந்த கர்ப்பமா (partial mole) என்பதையும், மேலும் இதனுடன் காணப்படும் சினைப்பை கட்டிகள் அல்லது கல்லீரல் கட்டிகளையும், மற்ற மருத்துவ காரணங்களுக்காக ஸ்கேனிங் மூலமாக உறுதி செய்து கொள்கிறார்கள்.

அது, முழுமையோ, பகுதி கர்ப்பமோ எதுவாக இருந்தாலும் முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால், கருக்கலைப்பு மேற்கொள்வதுதான் இதற்கான சிகிச்சைமுறை என்று கூறும் மருத்துவர்கள், மற்ற கருச்சிதைவு போல அல்லாமல் முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது என்றும் கூறுகின்றனர். அவற்றை குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தாயின் க்ரோமோசோம் இல்லாதுபோனால் முத்துமுத்தாக கர்ப்பம்!
அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றின் அபாயம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in