அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றின் அபாயம்!

அவள் நம்பிக்கைகள்-22
அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றின் அபாயம்!

கடந்த சில அத்தியாயங்களில் தடுப்பூசிகள் பற்றி ஓரளவு தெரிந்து கொண்ட நாம், இனி கர்ப்பகாலத்தில் வரும் மற்ற பாதிப்புகளைத் தெரிந்து கொள்வோம். முதல்படியாக கர்ப்பகால சிறுநீர்த் தொற்றின் அபாயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே பெண்களை சற்று அதிகம் பாதிக்கும் சிறுநீர்த்தொற்று, கோடைக்காலத்தில் இன்னும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிலும் கர்ப்பகாலமும் இத்துடன் சேர்ந்துவிட்டால் இன்னமும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கும் மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பகாலத்தில் அதிக விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள்.

மனித உடலின் இரண்டு பக்கமும் இருக்கும் சிறுநீரகங்கள் உள்ளன. இவை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டிய சிறுநீரை இருபக்கமிருந்தும் சிறுநீர்க்குழாய்கள் (ureters) வழியாக சிறுநீர்ப்பைக்கு (urinary bladder) அனுப்பும். பின்னர் urethra எனப்படும் சிறுநீர்ப் பாதை வழியாக வெளியேற்றும். இதில் ஆண், பெண் இருவருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லையென்றாலும், ’யூரித்ரா’ எனும் சிறுநீர் வெளியேற்றப் பாதையின் நீள அளவும், அதனை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களும் இருபாலருக்கும் ஒரே போல் இருப்பதில்லை.

உண்மையில் இந்த யூரித்ராவின் மொத்த நீளம், ஆண்களுக்கு 20 செ.மீ. என்றால், பெண்களுக்கு 4 செ.மீ. மட்டுமே இருக்கும். மேலும் பெண்களின் பிறப்பு உறுப்பு, மலத்துவாரம் மற்றும் சிறுநீர் துவாரம் இந்த மூன்றுமே அருகருகே இருப்பதால், இயல்பாகவே சிறுநீர்த் தொற்று எளிதாக ஏற்படும் வாய்ப்பு பெண்களுக்கு உருவாகிறது.

இந்நிலையில் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், வளரும் கருவால் ஏற்படும் கருப்பை அழுத்தம் அருகாமை உறுப்புகளான சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் மீது ஏற்படும்போது முதல் மூன்று மாதங்கள் சிறுநீர் உபாதைகள் அல்லது மலச்சிக்கல் போன்றவை அதிகமாக ஏற்பட வாய்ப்பாகிறது. இதேபோல் எட்டாவது மாதத்திலிருந்து குழந்தையின் தலை அழுத்தும்போதும் இந்த வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இத்துடன், கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் மசக்கை மற்றும் பசியின்மை காரணமாக உட்கொள்ளும் நீரின் அளவு குறைவதுடன், உண்டாகும் அதிக வாந்தியில் உடலின் நீரும் வற்றிவிடும் (dehydration). இதனால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிறுநீரின் அளவு குறைந்து, அதன் அடர்த்தி கூடுகிறது. கூடவே இவற்றுடன் கர்ப்பகால ஹார்மோன்களான ப்ரொஜஸ்டிரான்கள் சிறுநீரகப் பாதையை விரிவடையச் செய்து, அவற்றின் குறுக்குத் தசைகளின் வலிமையையும் குறைப்பதால் சிறுநீர்ப்பையில் நீண்டநேரம் சிறுநீர் தேங்கி நிற்கவும் இது வழிவகுக்கிறது.

ஆக, ஒருபக்கம் அதிக அழுத்தமும், அடர்த்தியான சிறுநீரும், கர்ப்பிணி பெண்களுக்குச் சிறுநீர் உபாதைகளை ஏற்படுத்தி சிறுநீர்த்தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. மறுபக்கம் தேங்கிய சிறுநீரும், விரிவடைந்த சிறுநீர்ப்பை தசைகளும், அறிகுறிகள் எதையும் வெளிக்காட்டாமலேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

அப்படி கண்டறியப்படாத சிறுநீர்த்தொற்றின் நோய்க்கிருமிகள் கர்ப்பகாலத்தில் எளிதாக மேலே பரவி, சிறுநீரகங்களை அதிகம் பாதிப்பதுடன் (Acute Pyelonephritis), ரத்த அழுத்தம், chorio amnionitis எனப்படும் கருப்பைத் தொற்று, recurrent UTI எனப்படும் திரும்ப நிகழும் சிறுநீர்த்தொற்று, நாட்பட்ட சிறுநீரக நோய், சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு அல்லது Septicemia எனும் ஆபத்தான சூழல் வரை உருவாக்கக் கூடும். அத்துடன் வளரும் கருவையும் பாதிக்கும் இந்த சிறுநீர்த்தொற்று, கருச்சிதைவு முதல், பனிக்குட நீர் உடைதல், குறைப்பிரசவம், குறைந்த எடைக் குழந்தை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிறந்த குழந்தைக்கும் neonatal sepsis எனப்படும் நோய்த்தொற்றையும் ஏற்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, குணப்படுத்தாத சிறுநீர்த்தொற்றுகள் அடுத்து வரும் கர்ப்பங்களையும் பாதிக்கும் வரை செல்லலாம். இதனால் இந்த தொற்று குறித்து எச்சரிக்கும் மகப்பேறு மருத்துவர்கள், பாதிப்புகள் ஏற்படும் முன்னரே அதற்கான பரிசோதனையை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர்.

கர்ப்பகால சிறுநீர்த்தொற்று, அதிலும் அறிகுறிகளற்ற தொற்றுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது, E.coli, Proteus, Klebsiella போன்ற பாக்டீரியா கிருமிகளே. இதனால் அதற்கான எளிய பரிசோதனையான சிறுநீர் பரிசோதனை மற்றும் culture & sensitivity எனும் முக்கியப் பரிசோதனையை மூன்றாவது மாதத்தில் கட்டாயம் மேற்கொள்ள

வலியுறுத்தப்படுகிறது. இந்த எளிய பரிசோதனையால் 20 முதல் 35 சதவீதம் வரையிலான கர்ப்பிணிப் பெண்களின் அறிகுறிகளற்ற நீர்த்தொற்று கண்டறியப்படுவதுடன், தகுந்த சிகிச்சைகளால் தாய்-சேய் பாதிப்புகள் முற்றிலும் தடுக்கப்படுகின்றன.

தக்க சிகிச்சை என்பது, கர்ப்பகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பான ஆண்டிபயாடிக்குகள். இவற்றுடன் பிறப்புறுப்பின் இயல்பான அமிலத்தன்மையைக் காக்க உதவும் Lactobacillus உள்ளிட்ட ப்ரோபயாடிக் மாத்திரைகள் மற்றும் லோஷன்கள், சிறுநீர்ப் பெருக்கை ஏற்படுத்தும் க்ரான்பெர்ரி தயாரிப்புகள் மற்றும் ஆல்கலைசர்கள், Methenamine உள்ளிட்ட ஆண்டிசெப்டிக் மருந்துகள் ஆகியன சிறுநீர்த்தொற்றுக்கு நன்கு பலனளிக்கின்றன என்பதால் மருத்துவரின் பரிந்துரையுடன் இவற்றைப் பயன்படுத்தலாம்.

இவையனைத்திற்கும் மேலாக, வருமுன் காக்கும் வழிகளான தேவைக்கான நீரைத் தவறாமல் பருகுவது (3 லிட்டருக்கும் மேல்), இளநீர், தர்ப்பூசணி, எலுமிச்சை ஜூஸ், கம்பங்கூழ் ஆகியவற்றை உட்கொள்வது, அதிக நேரம் அடக்கிவைக்காமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது (குறிப்பாக முதல் மூன்று மாதங்கள் மற்றும் எட்டாவது மாதம் முதல்), பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது, தளர்வான பருத்தி உள்ளாடைகளை உடுத்துவது, வாசனை ஸ்ப்ரே மற்றும் பவுடர் ஆகியவற்றை உறுப்புகளில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற பொதுவான வழிமுறைகள், இந்த சிறுநீர்த்தொற்று கர்ப்பகாலத்தில் வராமல் தடுக்க உதவுகின்றன.

சிறுநீர் சோதனை என்னவோ எளியதொரு பரிசோதனைதான். ஆனால், தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படும் போது, அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றையும், அதன் ஆபத்துகளையும் தவிர்க்க அது பெரிதும் உதவுகிறது என்ற புரிதலுடன் அவள் நம்பிக்கைகள் தொடரும்...

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
அறிகுறிகளற்ற சிறுநீர்த்தொற்றின் அபாயம்!
கர்ப்பகாலத்தில் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா?

Related Stories

No stories found.