தமிழக அரசு என்றுமே கர்ப்பிணிப் பெண்கள் மீது காட்டிவரும் அக்கறை தெரியுமா?

அவள் நம்பிக்கைகள்-15
தமிழக அரசு என்றுமே கர்ப்பிணிப் பெண்கள் மீது காட்டிவரும் அக்கறை தெரியுமா?

ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால் யார் யாரெல்லாம் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள்? பெண்ணின் கணவர், பெண்ணின் பெற்றோர், மாமனார் மாமியார், அதற்குப் பின் அவளது மருத்துவர். பொதுவாக இவர்களெல்லாம் பார்த்துக் கொள்வார்கள். அதுதான் நியாயமும் கூட. தமிழகத்தில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கமும் இவர்கள் மீது எல்லாவிதத்திலும் அக்கறை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

ஆம்... அது ஏன், எதற்கு, எப்படி என்பதைத்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஒரு பெண் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தி, தனது மூன்றாவது மாதம் ஸ்கேனிங்கை முடித்தவுடன் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணி ஒன்று உள்ளது. தனது கர்ப்பத்தை அரசாங்கத்தில் முன்பதிவு செய்து கொள்வதுதான் அது.

தனது மாதாந்திர செக்கப் மற்றும் பிரசவத்தை ஒரு கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். ஆனால், தனது கர்ப்பத்தை பிக்மி (PICME - Pregnancy & Infant Cohort Monitoring) என்று அழைக்கப்படும் தாய் சேய் நல முன்பதிவினை மாநில சுகாதாரத்துறையின் அரசு நிலையங்களில் கண்டிப்பாக அந்தப் பெண் பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்த பிக்மி முன்பதிவை மேற்கொள்ள இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், ஆதார் அட்டை அல்லது வேறு புகைப்பட அடையாள அட்டை, கர்ப்பத்தை உறுதி செய்த ஸ்கேனிங் மற்றும் மகப்பேறு மருத்துவரின் பிரிஸ்கிப்ஷன், பாங்க் பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவற்றைக் கொண்டு, கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர சுகாதார செவிலியர் உதவியுடன் இந்த பிக்மி பதிவை செய்வது எளிது. இது தவிர ஆன்லைன் மூலமாகவும், ஈ-சேவா நிலையங்களிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும், 102 எனும் டோல் ஃப்ரீ தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டும் இந்தப் பதிவை மேற்கொள்ளலாம்.

பதிவு செய்தவுடன் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, ஆர்.சி.ஹெச். (RCH -Reproductive & Child Health) 12 இலக்க எண்ணுடன் கூடிய ஐ.டி. ஒன்றை வழங்குகிறது. இந்த ஆர்.சி.ஹெச். ஐ.டி. இல்லாமல், பிரசவத்திற்குப் பின் குழந்தை பிறப்பு சான்றிதழைப் (Birth Certificate) பெறமுடியாது என்பதால் இந்தப் பதிவு கட்டாயமாகிறது.இந்த பிக்மி முன்பதிவை மேற்கொள்ளும் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணின் நலனையும் அரசு கண்காணிப்பதுடன், அப்பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் உதவுகிறது.

முதல் மூன்று மாதங்களுக்குள் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும், ’டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்’ மூலமாக, ரூபாய் 18,000 வரை தவணை முறைகளில் அரசு நிதியாக வழங்கி உதவுகிறது. அத்துடன், இரும்புச் சத்து டானிக், புரதச்சத்து மாவு, கால்சியம் மாத்திரைகள் உள்ளடக்கிய சத்துணவு கிட் இரண்டு அல்லது மூன்று முறை, அப்பெண்ணுக்கு வழங்குகிறது. தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, ரத்த சோகையின்போது பரிந்துரைக்கப்படும் ’அயர்ன் சுக்ரோஸ்’ ஊசிகளையும் இலவசமாக வழங்குகிறது.

மேலும் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் செவிலியர்களின் முழுமையான கண்காணிப்புடன்தான் பிரசவிக்கிறாள் என்பதையும் இது உறுதி செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரசவத்திற்குப் பின்னரும் கூட பிறந்த குழந்தைக்கான போலியோ, ரோட்டா வைரஸ் வேக்சின் உட்பட்ட தடுப்பூசிகளும் இதன்மூலம் இலவசமாக இவர்கள் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்கிறது.

எல்லாம் சரி! ஒரு பெண் பிரசவிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு அக்கறைப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு MMR (Maternal Mortality Rate) எனப்படும் மகப்பேறு இறப்பு விகிதம் பதிவு செய்யப்படுவதன் அவசியத்தைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தமிழக அரசு என்றுமே கர்ப்பிணிப் பெண்கள் மீது காட்டிவரும் அக்கறை தெரியுமா?
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in