இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமா?

அவள் நம்பிக்கைகள்-14
தொட்டில் குழந்தை
தொட்டில் குழந்தை

இரும்புச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும், எந்த உணவு பண்டங்களில் இரும்புச்சத்துக்கு அதிகம் உள்ளது என்பது குறித்தும் கடந்த வாரம் பேசினோம். அவ்வளவு அத்தியாவசியமான இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது 'அயர்ன் டிஃபீசியன்சி அனீமியா’ (ரத்தசோகை) என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் இந்த ’அயர்ன் டிஃபீசியன்சி அனீமியா’ ஏற்பட்டால் கருத்தரித்த பெண்ணுக்கு உடல் சோர்வு, படபடப்பு, முகம் மற்றும் கால்கள் வீக்கம், வெளுத்த தோற்றம், மூச்சுத்திணறல், இருதய பாதிப்புகள் ஆகியவை ஏற்படும். அதுமட்டுமின்றி கருவில் வளரும் குழந்தையையும் பாதிப்பதால் குறைந்த எடைக் குழந்தை, குறைப்பிரசவம் மற்றும் பிறந்தக் குழந்தைக்கு ரத்தசோகை, எளிதில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தாய்ப்பால் சுரப்பின்மை என பல்வேறு பாதிப்புகளுடன், சமயங்களில் தாய்-சேய் உயிரிழப்புவரைகூட கொண்டு செல்லும்.

இன்றைய நிலையில் இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது. தமிழகத்தில் பத்தில் மூன்று பெண்கள் ரத்தசோகையுடன் காணப்படுகின்றனர் என்பதுடன், இதுதான் இன்றுவரை மகப்பேறு மரணங்களுக்கு முக்கியக் காரணம். இவற்றையெல்லாம் தவிர்க்கும் பொருட்டே, அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும், கர்ப்பகாலம் முழுவதும் அயர்ன் ஃபோலிக் மாத்திரைகள், அயர்ன் டானிக், ப்ரோடீன் பவுடர் மற்றும் பூச்சி மாத்திரைகளைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் வழங்கி வருகிறது தமிழக அரசு.

இந்த இரும்புச்சத்து மருந்துகளின் elemental iron எனப்படும் மூலக இரும்புச்சத்தைப் பற்றி அறிவதும் அவசியமாகிறது. பொதுவாக ஒரு இரும்புச்சத்து மாத்திரையில் 325மில்லிகிராம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் மூலக இரும்பின் அளவைத் தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் உட்கொண்ட பிறகு, இந்த சத்து மருந்துகளின் மூலக இரும்புச்சத்தின் ஒரு பங்கு மட்டுமே செரிமானமடைந்து ரத்த விருத்திக்கு உதவுகிறது.

அதாவது, கர்ப்பகாலத்தில் தேவைப்படும் 60 மில்லிகிராம் இரும்புச்சத்தைப் பெறுவதற்கு, 325 மில்லிகிராம் அளவுள்ள இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகிறது. அதுவே ரத்த சோகையுடன் இருப்பவர்களுக்கு, இரண்டு அல்லது அதற்கும் மேலாக பரிந்துரைக்கப்படுகிறது. அதனால்தான், Ferrous Sulphate, Ferrous Fumarate, Ferrous Gluconate, Ferrous Glycine என பலபெயர்களில் இந்தச் சத்து மருந்துகள் உள்ளன. அதிலும் அவற்றின் elemental iron அளவு மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் தேவையைப் பொறுத்தே இந்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த மருந்துகளின் செரிமானத்தை உணவு மிகவும் குறைத்துவிடும் என்பதால் காலை உணவிற்கு முன்பாகவோ, இரவு உணவு முடிந்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பின்பாகவோ, இவற்றை உட்கொள்வது நல்லது.

என்றாலும், ஒருசிலரில் இரும்புச்சத்து மருந்துகள் ஏற்படுத்தும் வயிற்று அழற்சி, வாந்தி, செரிமானமின்மை, மலச்சிக்கல் அல்லது தொடர் வயிற்றுப்போக்கு போன்றவற்றால் எளிதாக இம்மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்ப்பதும் நிகழ்கிறது. இவ்வாறு வாய்வழியாக உட்கொள்ள முடியாத நிலையில், ஊசி மருந்தாகவும் இது வழங்கப்படுகிறது. அதேசமயம், இரும்புச்சத்து டானிக்கை உட்கொள்ளும்போது நாக்கு கருப்பாவதும், மலம் கருமையாக வெளியேறுவதும் உண்மைதான் என்றாலும், இது குழந்தையின் நிறத்தை மாற்றிவிடும் என்பது கட்டுக்கதை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, இரும்புச்சத்து மருந்துகள் என்பது ’ஹீ-மோக்ளோபின்’ எனும் ரத்த அளவை விருத்தி செய்யும் வெறும் மருந்துகள் அல்ல. அது பெண்ணையும் அவள் சந்ததியையும் வலிமையாக்கும் ’ஷீ-மோக்ளோபின்’ என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தொட்டில் குழந்தை
இரும்புச்சத்து மாத்திரை தேவைதானா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in