ஒரு பழம் கருவை கலைத்துவிடாது!

அவள் நம்பிக்கைகள்-26
ஒரு பழம் கருவை கலைத்துவிடாது!

தன்னிச்சையாக நிகழும் கருச்சிதைவுகளில், 'Threatened Abortion' என அழைக்கப்படும் ஆரம்பக்கட்ட ரத்தக்கசிவு, முழுமையான கருச்சிதைவை பொதுவாக ஏற்படுத்துவதில்லை. இதில் வளரும் கருவிற்கு ஆபத்து எதுவும் இருப்பதில்லை. நல்ல ஓய்வும், ஃபோலிக் அமில சத்து மருந்துகளும், தொடர் கண்காணிப்பும் மட்டுமே இவர்களுக்குப் போதுமானது.

ஆனால் அதுவே, 'Incomplete abortion' எனப்படும் முழுமை பெறாத கருச்சிதைவோ, அல்லது 'Complete abortion' எனப்படும் முழுமையான கருச்சிதைவோ, அல்லது 'Missed abortion' எனப்படும் இறந்த கரு உள்ளேயே இருந்து கண்டறியப்படாமல் இருக்கும் நிலையோ, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும்போது அதில் கரு தொடர்ந்து வளர வாய்ப்புகள் இல்லை. கருச்சிதைவு ஏற்பட்ட வாரங்களைப் பொறுத்து, இவர்களுக்கு மருந்துகள் (Mifeprin + Misoprostol) மூலமாகவோ அல்லது டி.என்.சி. (D&C) எனும் சிறு அறுவைசிகிச்சை மூலமாகவோ, உள்ளே தங்கியிருக்கும் கருவை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.. இதுவே அடுத்தடுத்து மூன்று முறை அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு தொடர்ந்து நிகழுமானால் (Recurrent abortion), அகற்றப்பட்ட கருவை மரபியல் பரிசோதனை செய்வதும் அவசியமாகிறது.

ஆனால், கருச்சிதைவு நிகழக் காரணம் எதுவாக இருந்தாலும், கருத்தரித்த பெண் அதைத் தனது குற்றமாகக் கருதி குற்றவுணர்ச்சியில் உழலும் உளவியல் இங்குப் பெரும்பங்கு வகிக்கிறது என்பதே உண்மை. உண்மையில், பனிக்குட நீர், அதன் உறைகள், உறுதியான கருப்பை, திடமான கருப்பைவாய், இவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் என பல அடுக்கு பாதுகாப்புடன்தான் கரு வளர்கிறது. அதனை அவ்வளவு எளிதாக ஒரு பழமோ அல்லது கடினமான ஒரு வேலையோ கலைத்துவிட முடியாது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஆனால், அதுவே இயல்புக்கு மாறாக ஒரு aneuploidyயுடன் ஒரு கரு உருவாகும்போது, அதை வெளியேற்றும் இயற்கை நிகழ்வாகக் கருச்சிதைவு திகழ்கிறது என்பதே உண்மை. இந்த இயற்கை நிகழ்வை நம்மால் தடுக்கமுடியாது என்றாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்தமுறை இயல்பாகக் கருத்தரிப்பதுடன், முழுமையாகக் கர்ப்பம் தாங்கி, குழந்தைப்பேறு பெறுகின்றனர் என்பதும் உண்மை. வெகு குறைவானவர்களுக்கு மட்டுமே, அடுத்தடுத்து கருச்சிதைவு நிகழும்போது அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, மீண்டும் கருச்சிதைவு நிகழாமல் இருக்கும் தொடர் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆக, தன்னிச்சையாக நிகழும் கருச்சிதைவு என்பது எந்தவொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும், அவளது குடும்பத்திற்கும் பேரிழப்புதான் என்றாலும், நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கும் பெண்களுக்கு நலமே விளையும் என்ற நம்பிக்கையுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடரும்.

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
ஒரு பழம் கருவை கலைத்துவிடாது!
தடுக்கி விழுந்தால் கருச்சிதைவு ஏற்பட்டுவிடாது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in