தடுக்கி விழுந்தால் கருச்சிதைவு ஏற்பட்டுவிடாது!

அவள் நம்பிக்கைகள்-25
தடுக்கி விழுந்தால் கருச்சிதைவு ஏற்பட்டுவிடாது!

'கருச்சிதைவு..!' தமிழில் பெண்களுக்குப் பிடிக்காத வார்த்தை இது என்றே சொல்லலாம். அதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு என்றால், சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு பயமும் வெறுப்பும் இருக்கிறது 'அபார்ஷன்' எனும் கருச்சிதைவின் மீது.

அடிவயிற்றில் அதிக வலி, திடீர் ரத்தக்கசிவு அல்லது நீர்க்கசிவு, சதையுடன் கூடிய ரத்தக்கட்டி வெளியேறுதல், என கருத்தரித்த எந்தவொரு பெண்ணுக்கும் பெருமளவு அச்சத்தையும் கலக்கத்தையும் உண்டாக்குவது கருச்சிதைவு. இதற்கான அறிகுறிகள் ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், எதிலெல்லாம் இது ஏற்படுவதில்லை என்ற தெளிவு முதலில் நமக்கு அவசியமாகிறது.

மாடிப்படி ஏறி இறங்கியதால், அதிக தூரம் பயணம் செய்ததால், தடுக்கி கீழே விழுந்ததால், அதிகமாக வேலை செய்ததால், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டதால், உடலுறவால், மன உளைச்சலால், கிரகணத்தின்போது வெளியே சென்றதால் என்று பல காரணங்களைக் கூறினாலும், இவை எதுவும் கருச்சிதைவுக்குக் காரணம் இல்லை என்பதே உண்மை. பிறகு கருச்சிதைவு நிகழ்வது ஏன், இதற்கான சிகிச்சை முறைகள் என்ன, இதைத் தடுப்பதற்கு வழிமுறைகள் எதுவும் உள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடையை தேடுவோம் வாருங்கள்.

கருத்தரித்த பல பெண்களில் தன்னிச்சையாக நிகழும் ஒரு நிகழ்வுதான் அபார்ஷன் எனும் கருச்சிதைவு. பொதுவாகக் கருத்தரித்த பெண்களில் 10-20 சதவீதம்வரை ஒரு விபத்துபோல நிகழும் இந்த கருச்சிதைவு, முதல் கர்ப்பத்தில் சற்று அதிகம் காணப்படுகிறது. உண்மையில் ஒரு பெண் அவள் கருத்தரித்திருக்கிறார் என்பதை அறியும் முன்னரே பலருக்கு (50 சதவீதம் வரை) கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது. அதையும் மீறி வெளியே தெரியும் இந்த கருச்சிதைவுகள், பெரும்பாலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்குள், குறிப்பாக முதல் பத்து வாரங்களுக்குள் ஏற்படுகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இவ்வாறு தன்னிச்சையாக நிகழும் கருச்சிதைவுக்கு உருவான கருவிடமோ அல்லது கரு வளரும் தாயிடமோ காரணம் இருக்கலாம், சில நேரம் தந்தையும் காரணமாக இருக்கலாம். முதலாவதாக, உருவான கருவில் அல்லது வளரும் கருவின் க்ரோமோசோம்களில் ஏற்படும் பிறழ்வுகள் தான் கருச்சிதைவுக்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் ஒன்றிணைந்து கருவாக உருப்பெறும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றின் க்ரோமோசோம்களின் எண்ணிக்கையில் குறைபாடு இருக்குமேயானால், அது உருவாகும் கருவிலும் அப்படியே பிரதிபலிக்கும். கருத்தரித்த முதல் மூன்று மாதத்திற்குள், இது கருச்சிதைவை ஏற்படுத்திவிடுகிறது என்று கூறுகிறார்கள். அவ்வாறு கூடுதலாக அல்லது குறைவாகக் க்ரோமோசோம்கள் காணப்படும் ட்ரைசோமி, மோனோசோமி, பாலிப்பளாய்டி எனும் குறைபாடுகளுடன் உருவாகும் கருவை, 'aneuploidy' என்றும் அழைக்கிறார்கள்.

கருச்சிதைவின் அடுத்த முக்கியக் காரணமாகத் திகழ்வது தாயிடம் உள்ள குறைபாடுகள். கருப்பையின் பிறவிக் குறைபாடுகளான septate uterus, bicornuate uterus ஆகியவற்றிலும், கருப்பைக் கட்டிகள் அல்லது திசுக்கள் (fibroids/polyps), கருப்பை வாய் திறமின்மை (incompetent cervix) போன்ற கருப்பை சார்ந்த காரணங்களாலும், தாயின் அதிக வயது, தாய்க்கு ஏற்படும் தைராய்டு நோய், பிசிஓடி, சர்க்கரை நோய், இருதய நோய், டார்ச் வகை கிருமித்தொற்று, ரத்த உறைதலில் ஏற்படும் பாதிப்புகள், நெகடிவ் ரத்த வகை பாதிப்புகள் போன்ற இன்னபிற காரணங்களாலும் கருச்சிதைவு ஏற்படலாம். பெரும்பாலான இந்த வகை கருச்சிதைவுகள், மூன்று மாதங்கள் தாண்டியே நிகழ்கின்றன. மேலும், தாய் உட்கொள்ளும் சில மருந்துகளும் தாய்க்கு, மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தாலும் கருச்சிதைவு நிகழக் கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாயின் வயதைப் போலவே தந்தையின் அதிக வயது, போதை மருந்து மற்றும் புகைப்பழக்கம் போன்ற தந்தையின் காரணங்களாலும் சிலருக்குக் கருச்சிதைவு நிகழக்கூடும்.

இப்படி கருச்சிதைவுக்கான காரணங்கள் சேயிடம், தாயிடம், தந்தையிடம் என காரணம் யாரிடம் இருந்தாலும், காரணம் எதுவென்றாலும், அதற்கான பரிசோதனைகளும், சிகிச்சை முறைகளும் ஒரே போன்றவைதான். அது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தடுக்கி விழுந்தால் கருச்சிதைவு ஏற்பட்டுவிடாது!
இந்த நேரத்தில் கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவது நல்லது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in