புதிய வால்வோ சொகுசு பேருந்துகள்.... முதல் பயணத்தை தொடங்கிய மாற்றுத்திறனாளிகள்- வழியனுப்பி வைத்த முதல்வர்!

புதிய வால்வோ சொகுசு பேருந்துகள்.... முதல் பயணத்தை தொடங்கிய மாற்றுத்திறனாளிகள்- வழியனுப்பி வைத்த முதல்வர்!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971ம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள், என மொத்தம் 14 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சுற்றுலாக்கள் குறித்த தகவல்கள், முன்பதிவு ஆகியவற்றை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கவும் மற்றும் சுற்றுலாவின்போது ஏற்படும் குறைகளை களையவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் (24 X 7) செயல்படும் சுற்றுலா உதவி மையம் (Tourism Help Desk) மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது.

2023–24ம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, பூவிருந்தவல்லி - பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம்- செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சொகுசு சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in