நல்ல நீதிபதிகள் தம்மத்தை பின்பற்றுகிறார்கள்!

தம்மத்தின் பதம்-20
நல்ல நீதிபதிகள் தம்மத்தை பின்பற்றுகிறார்கள்!

நீதியற்ற சமூகம் வாழ்விற்குக் கேடு. எல்லோருக்குமான நீதி வாய்க்கும் இடம்தான் சமத்துவத்தின், சகோதரத்துவத்தின் தொழிற்படு இடமாக இருக்கும். நீதி மறுக்கப்படும் சமூக அமைப்பில் அமைதி இருக்காது. துன்பம் மலிந்து இருக்கும். சுரண்டலும் அதற்கெதிரானப் போரும் இருக்கும். நீதியின்மை ஒரு சமூகத்தின் கேடு. நீதி மறுக்கப்படும் மக்கள் குரலற்றவர்களாகிவிடுகிறார்கள். அவர்களின் குரல் கேட்கப்படாமல் போகுமெனில் அங்கே ஜனநாயகத்திற்கான உரையாடல் இல்லாமல் போகும். உரையாடல் இல்லாத ஜனநாயகம் கண்டிப்பாக உண்மையானதாக இருக்காது. அங்கே மனிதர்கள் ஒருவரையொருவர் மாண்புடன் நடத்தமாட்டார்கள்

உலகை நீதியரசாக்குதல் என்னும் தலைப்பில் புத்தமும் அவர் தம்மமும் நூலில் அம்பேத்கர், “நீதியின் அரசாட்சி நிலவுலகிலேயே இருக்கின்றதெனவும், அதை மனிதன் நீதியான நடத்தையாலேயே அடைய முடியுமென்றும்” கூறினார். இதுதான் புத்தரின் அடிப்படை போதனை. ஒவ்வொரு தனிமனிதரும் நீதியின் நடத்தை உடையவராக மாறிவிட்டால் பிறரை எதை முன்வைத்தும் சுரண்ட முடியாது. அப்போது சமூகத்துயரம் இல்லாமல் ஆகிவிடும்.

தன் விருப்பம்போல்

தீர்ப்பொன்றைத் தருவதாலே

ஒருவர்

நீதிபதியாக முடியாது

சரி தவறு இரண்டையும்

உணர்ந்த பின்னரே

அறிவர் முடிவாற்றுவார் (தம்மபதம் 256)

நடுநிலைமை என்று சொல்லித் தவறிழைத்தவரையும் இழைக்கப்பட்டவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பொதுவாக தீர்ப்புரைக்காமல் நீதியின் பக்கம் மட்டும் இருப்பவர்தான் நீதிபதி. தன் விருப்பப்படி நீதியாற்றாமல் சட்டத்தின்படி சட்டத்தைக் காக்கிறவராக நீதிமான்கள் இருக்க வேண்டும். அப்படி நீதி பரிபாலனம் செய்பவர்கள் தம்மத்தை ஒத்திருப்பவராகக் கருதப்படுவார்கள் என்பது புத்தரின் வாக்கு.

அதிகம் பேசுவதாலேயே ஒருவர் அறிவாளியாக முடியாது. அதிகம் பேசாமல், அமைதியாக இருந்து பகைவர்களிடமிருந்து விலகி, பிறருக்குத் தீங்கு விளைக்காமல் இருப்பவரே அறிவாளிகள். அவரால்தான் நீதியின் தன்மையுடன் திகழமுடியும். அதேபோல்தான் அதிகம் பேசுவதாலேயே ஒருவர் தம்மத்தில் தோய்ந்தவராகக் கருதலாகாது. குறைவாகப் பேசி, அகக்கண்களால் தம்மத்தைக் கண்டுணர்ந்து அதன்வழி விலகாமல் நடப்பவர்தான் தம்மத்தில் தோய்ந்தவர்.

காலத்தின் பல நகர்வுகளைக் கண்டவர், பல ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறவர், உடல் சுருக்கமும், நரைமுடியும் கொண்டவர் என்பதாலே ஒருவர் தீர்ப்பெழுதும் அறிவாளிகளாக ஆகிவிட முடியாது. அவர்கள் வெறும் வயது அதிகரித்து வீணாக வளர்ந்தவர்கள்தான். ஆனால், நான்கு உண்மைகளை உணர்ந்து ஐந்து சீலங்களை அறிந்து அவற்றைக் கடைப்பிடித்து எண் மார்க்கங்களின் வழி நடந்து தீங்கற்றவர்களாகப் பிறருக்குத் துன்பம் தராதவர்களாக மேன்மையுற்றவர்களாக புலன்களடக்கிப் பற்றற்றவர்களாக வாழ்பவர்களே அறிவர்கள். அவர்களே நீதியை வழங்குபவர்களாக இருக்க முடியும். அப்படிப்பட்டவர்கள்தான் சரியான நீதியை வழங்க முடியும் என்பது தம்மத்தின் பதம்.

தேன் குழைத்த பேச்சு

அழகியத் தோற்றம்

இவற்றாலே ஒருவர்

நல்லுள்ளம் பெற்றவரில்லை

பொறாமை சுயநலம் ஏமாற்று

ஆகியன அவருள் இருக்கையில் (தம்மபதம் 262)

பொறாமை சுயநலம் பற்று ஏமாற்று ஆகியவற்றை யார் துறந்து தூய மனம் கொள்கின்றனரோ அவரே நல்ல மனம் படைத்தவர்கள். அவர்களின் நற்சிந்தனையிலிருந்து நற்சொற்கள் பிறக்கும். நற்சொற்களின் அடிப்படையில் நற்செயல்கள் நடக்கும், நற்செயல்களால் நல்வாழ்வு கிடைக்கும். அந்த வாழ்வு துன்பம் இல்லாமல் இந்த உலகிலேயே இருக்கும். மறுபிறப்போ சொர்க்கமோ நரகமோ இல்லை. இவ்வாழ்விலேதான் துன்பம் அதன் மூலமும் அதனைப் போக்கும் வழிகளும் நமக்குக் கிடைக்கும்.

தீமைகளுக்கு அளவு என்பது இல்லை. எவ்வளவு சிறியதாயினும் சரி அல்லது எவ்வளவு பெரியதாயினும் சரி தீமை என்பது தீமைதான். இதை உணர்ந்து அவற்றை விட்டு விலக வேண்டும். சிறிய தீமைதானே பரவாயில்லை என்று அதைப் பிடித்துக்கொள்வது ஆகாது. அவர்கள் நீதியின்பால் இருக்க முடியாது.

நன்மை தீமை

இரண்டினையுமே விடுத்து

தூய வாழ்வினை நடத்தி

உலகினைப் புரிந்தவரே துறவி (தம்மபதம் 267)

இத்தகு துறவிகள் அல்லது துறவு மனம் கொண்டவர்கள்தான் நீதியினை நிலைநாட்டும் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். பொருளுக்கும் பிறவற்றுக்கும் ஆசைப்படுபவர்கள் நீதியை வழங்க முடியாது.

பொலிவற்றும்

அறியாமைப் பெற்றும்

இருப்பவர்

அமைதியாய் இருப்பதாலேயே

துறவி அல்லர்

தராசினைத் தூக்கிப் பார்த்து

நன்மையை ஏற்று

தீமையை வெறுத்தவரே துறவி ( தம்மபதம் 268)

நீதியின் தராசினைத் தூக்கிப் பார்த்து நன்மையை ஏற்று, நன்மைக்கானத் தீர்ப்பையும் தீமைக்கான வெறுப்பையும் உமிழ்பவரே நன்னெறியாளர் என்பது புத்தரின் ஆழமான போதனை. உயிர்களுக்குத் துன்பம் இழைக்காமல் வாழ்வதே உயர்வுற்ற வாழ்க்கை.

அதுதான் சரியான நீதி.

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
நல்ல நீதிபதிகள் தம்மத்தை பின்பற்றுகிறார்கள்!
வானைப் பிரியும் மேகம்போல பிரியம் கொள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in