வானைப் பிரியும் மேகம்போல பிரியம் கொள்!

தம்மத்தின் பதம்-19
வானைப் பிரியும் மேகம்போல பிரியம் கொள்!

பற்று என்னும் குணம் இல்லா மனிதர்கள் இருக்க முடியாது. பற்றுதான் மனித இனத்தின் இயக்கத்திற்கான காரணமாகக்கூட சொல்லலாம் இப்பற்றைக் குறித்த விவாதங்களை பௌத்தம் விரிவாகப் பேசுகிறது. பற்று எப்படி இருக்க வேண்டும் என்பதும் பற்றின் கோட்பாடுகள் எவை என்பது பற்றியும் பௌத்தத்தைப் போல வேறு எதுவும் விரிவாகப் பேசியதில்லை.

அன்பையும் பற்றையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அன்பு என்பது பொதுவானது, பற்று என்பது தனியானது. தனியானது எப்போதும் துன்பம் தரும். ‘இது எனது’ என்று சொல்லும்போது அதன்மீதான அதிகாரம் உருவாகிவிடுகிறது. அந்த அதிகாரமே துன்பத்தைத் தரக்கூடிய ஒன்றாகி விடுகிறது. அதிகாரத்தை வைத்திருப்பவருக்கும் துன்பம், அதிகாரத்திற்குள் இருப்பவருக்கும் துன்பம்.

விலக்க வேண்டியவைகளிடம்

விருப்பம் கொண்டு

விருப்பம் கொள்ள வேண்டியவையை

விலக்கி

நன்னடத்தையை விட்டு

இன்பத்தின் பின் செல்பவர்கள்

வெற்றியாளரின் நற்செயல்களை

பொறாமைக் கொள்வார்கள் (தம்மபதம் 209 )

இன்பத்தைப் பின்தொடராமல் நல்ல வழியைப் பின்பற்றினால் துன்பங்கள் இல்லா வாழ்வு கிட்டும். இன்பத்தின்மீது பற்றுக் கொண்டால் துன்பம்தான் மிஞ்சும். ஐந்து ஒழுக்கங்களில் "மதியினை மயக்கிடும் மதுவினைக் குடிக்க மாட்டேன்" என்று ஒரு விதி உண்டு. மது இன்பம் தரும் என்று தவறாக நினைத்து அதைத் தொடர்பவர்கள் துன்பம் அடைவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லா தீயவழி இன்பங்களும் முதலில் இனிமையானதாகத்தான் தோற்றம் தரும். ஆனால், அதன் முடிவு மாபெரும் துயரில் முடியும்.

பிரியமானதோடும்

பிரியமற்றதோடும்

இணையாதே

பிரியம்

பிரியமின்மை

இரண்டுமே துக்கம் தரும் (தம்மபதம் 210)

பிரியங்கள் பிரியப்படுகையில் துன்பத்தைத் தருகின்றன. பற்றற்று இருத்தல் நலம். பிரிவுகளின் பலன்கள் என்ன? அவை எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நாடுகள் பிரிவதும், நகரங்கள் பிரிவதும், உறவுகள் பிரிவதும் எது பிரிவதாயினும் இங்கே துன்பம்தான்.

ஆனால், பற்றற்றவைகள் பிரியும்போது நன்மைகள் விளைகின்றன. வானில் மேகங்கள் இருக்கின்றன. மேகங்கள் வானை விட்டு வரமாட்டேன் என்று சொன்னால் மழையில்லை. வானைப் பிரியும் மேகம்தான் வளம் தரும். கிளையைப் பிரியும் கனிதான் பசியாற்றும். இத்தகைய பிரிவுகள் பற்றற்றவை. அவை பிரிவதற்காகவே இணைந்தவை. ஆனால், ஆசை அதிகம் கொண்ட மனிதப் பற்றுகள், சேர்ந்திருந்தாலும் இன்னல்தான் பிரிந்தாலும் இன்னல்தான்.

பிரியத்திலிருந்துத் துன்பம்

பிரியத்திலிருந்து பயம்

பிரியத்திலிருந்து விலகியவர்களுக்கு

துன்பம் ஏதுமில்லை

அச்சம் இல்லவே இல்லை (தம்மபதம் 212)

இந்தப் பிரியம் என்பது ஒன்றின்மேல் எங்கிருந்து வருகிறது?

ஆசையிலிருந்து, விடாப்பிடியான பற்றாசையிலிருந்து, இச்சையிலிருந்து. இம்மூன்றையும் விலக்கினால் யாருக்கும் அச்சம் இல்லை. உலக வரலாற்றில் அன்றிலிருந்து இன்றுவரை போர் என்னும் துன்பம் மானுடத்தைப் பிடித்து உலுக்குகிறது. இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நொடியில் உக்ரைனில் எத்தனைப்பேர் படுகொலை செய்யப்பட்டிருபார்கள் என்று தெரியாது. போர் அத்தனை கொடியது என்று அறிந்தோர் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள், ஆட்சியாளர்கள், அப்படியிருக்கப் போர் ஏன் நடத்தப்படுகிறது? மக்களைக் கொல்வதற்கான புதுவகை ஆயுதங்களை வகைவகையாய் ஏன் செய்யப்படுகின்றன? ஆசை. பற்றாசை, இச்சை. தனது என்று சொல்லும் பிரியம். பிரியங்களற்ற எல்லாருக்குமான பொது என்னும், அம்சத்தை மிக எளிதாகப் பௌத்தம் சொல்லிவிடுகிறது.

அப்படியானால் மானுடம் என்ன செய்ய வேண்டும்?

புத்தர் கூறுகிறார், அன்பாய் இருங்கள், அன்பு ஒன்றுதான் எல்லாவற்றையும் தரும். தரும்போது யாருக்கும் எதுவும் சொந்தமாயிருக்காது. ஊருணி எனச்சொல்லப்படும் கிணற்றின் நீர் எப்படி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அன்புடையவர் அப்படித்தான் எல்லோருக்கும் பயனாவார்

ஒழுக்கங்களில் நிறைவும்

நல்லுணர்வும்

தம்மமும்

உண்மையும்

கடமையும்

கொண்டவர்களை அனைவரும் நேசிப்பர் (தம்மபதம் 217)

இத்தகைய குணம் இருப்பவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குணங்கள் இல்லாதவர் அந்தக் குணங்களைப் பெறுவதற்கு முயன்று அவற்றைப் பெறல் வேண்டும். அப்போது அவர்கள் உயர்வு நிலையை அடைவார்கள். மீண்டும் தன்னிலையிலிருந்து தாழ மாட்டார்கள். அவர்கள் நிப்பாணம் அடைதலை நாடியிருப்பார்கள். சிற்றின்பங்களை வெறுத்துத் துரத்தி இருப்பார்கள்.

பற்றற்ற அன்பும் எல்லா உயிர்கள்மீது கனிவும், மற்றவர்மீது கரிசனமும் கொண்ட மக்கள் பிறருக்கு மகிழ்வைத் தந்துத் தாங்களும் மகிழ்ந்திருப்பார்கள். அவர்களால் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமும் நலம் பெறும். அத்தகையவர்களால் பிரியங்களற்று இருக்க முடியும்.

ஆசையிலிருந்துத் துன்பம்

ஆசையிலிருந்து பயம்

ஆசையை விலக்கியவர்களுக்கு

துன்பங்கள் ஏதும் இல்லை

அச்சம் இல்லவே இல்லை (தம்மபதம் 213)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
வானைப் பிரியும் மேகம்போல பிரியம் கொள்!
புத்தர் ஜாதக கதையின் காகம்!

Related Stories

No stories found.