தம்மத்தின் பதம் - 3: விழிப்பு மட்டுமே போற்றப்படும்!

தம்மத்தின் பதம் - 3: விழிப்பு மட்டுமே போற்றப்படும்!
ஓவியம்: ஸ்ரீரசா

அறிவுள்ளோர் செய்வர்

வெள்ளத்தில் மூழ்காத தீவொன்றை

கடும் முயற்சியினாலும்

தாளாண்மையாலும்

ஒழுக்கத்தினாலும்

கட்டுப்பாட்டாலும் (தம்மபதம் 25)

புத்தரிடம் பெண் ஒருவர் கேள்வி ஒன்றைத் தொடுத்தார், “புத்தரே! அந்தக் காட்டில் இருக்கும் மரங்கள் மட்டும் ஏன் கம்பீரமாக, பசுமையாக இருக்கின்றன?”

புத்தர் சொன்னார், ”நேற்று பற்றியக் கவலை அந்த மரங்களுக்கு இல்லை. நாளையைப் பற்றியும் அவற்றுக்குக் கவலை இல்லை, இந்த நொடியில் வாழ்கின்றன. ஆகையால், அவை கம்பீரமாகவும் செழிப்பாகவும் இருக்கின்றன”.

விழிப்பு என்பது ஏதோ தூக்கத்திலிருந்து கண்விழிப்பதல்ல. விழிப்புற்று இருத்தல். எதையெதையோ எண்ணி மனம் கலங்கி வாழும் மக்கள்தான் இங்கு அதிகம். ஆனால், விழிப்புடன் இருந்தால் இந்த வாழ்வு மகிழ்வானதாக இருக்கும் என்பதே பௌத்தம்.

தனக்கு என்ன நிகழ்கிறது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுதல் விழிப்பாயிருத்தல் ஆகும். அப்படி விழிப்பாய் இருக்கும் மனிதர் எது நன்மை, எது தீமை என்று ஆராய்ந்தறியும் பகுத்தறிவோடு இந்த வாழ்வை அணுகுவார்.

சாலையில் பயணம் செய்யும் ஒருவர், தன்னைச் சுற்றிப் பயணிக்கும் எல்லாவற்றின் மீதும் ஒருகண் வைத்து விழிப்போடு தன் வாகனத்தைச் செலுத்துவாராயின் அவருடையப் பயணம் பாதுகாப்பானது, மகிழ்வானது. அப்படி இல்லாமல் அந்தப் பயணம் இருக்குமாயின் அது ஆபத்தானது. பலர் தங்களது வாழ்வை ஆபத்தான பயணமாகவே நடத்துகின்றனர்.

மூழ்காத தீவு!

எதையும் யோசிக்காமல், தற்காலச் சிந்தனையில்லாமல், சுற்றி நடப்பவற்றை அறியாமல் இருப்பது விழிப்பற்று இருப்பதாகும். விழிப்பற்று இருப்பவர்களை புத்தர் இறந்தவர் பட்டியலில் வைக்கிறார்.

விழிப்புடனிருத்தல்

சாகாமையின் வழி

விழிப்பற்றிருத்தல்

சாதல்

விழித்திருப்பவர் சாகார்

விழிக்காதிருப்பவர் செத்தார். (தம்மபதம் 21)

கடும் முயற்சியும் குன்றாத பயிற்சியும் உடையவர்கள், அவர்களின் இந்தப் பண்புகளால் தங்களுக்கான சொர்கத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அறிவைப் பயன்படுத்தி அவர்கள் கடலில் மூழ்காத தீவாகி விடுகிறார்கள். பலர் அத்தீவில் வந்து அடைக்கலமாகிறார்கள். தங்களுடைய நன்னடத்தையால் விழிப்புணர்வோடு இருப்பவர்கள் காமம், மூடநம்பிக்கை, நிலைத்தத் தன்மை, அறியாமை ஆகிய கடல்களாலும் மூழ்கடிக்கப்படாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

விழிப்பற்றவர்களுக்கிடையே விழிப்புடனும். சோம்பலாயிருப்பவர்களிடையே உயிர்ப்புடனும் இருக்கும் அறிவுள்ளவர், சண்டிக்குதிரையை ஓடி வென்றுவிடுகிற பந்தயக் குதிரைப்போல அறிவற்றவர்களை வென்றுவிடுகின்றனர்.

எது ’நிப்பாணம்’?

காட்டுக்குத் தியானம் செய்யச் சென்ற 2 பிக்குகளில் ஒருவர், விழிப்புடன் தியானம் செய்கிறார். மற்றொருவர், அப்படி இல்லாமல் தான்தோன்றித் தனமாக இருக்கின்றார். அவர்களில், விழிப்புடன் இருப்பவரே புத்தரால் போற்றப்படுபவராக மாறுகிறார்.

எனவே, விழிப்புடன் இருத்தல் என்பது மலை உச்சியிலிருந்து கீழிருக்கும் சமவெளியைக் காண்பது போல. எல்லாவற்றையும் நம்மால் பார்க்க முடியும். விழிப்பின்மையை நாம் வேரறுத்தால் துன்பமின்மை என்னும் நிலையை அடையலாம். உலகத்தில் உயர்ந்தவர்கள், பிறரால் புகழப்படுபவர்கள் எல்லாம் விழிப்புடனிருந்துத் தங்களை உழைப்பால் உயர்த்திக்கொண்டவர்கள்தான். விழிப்பற்ற நிலையிலிருந்தால் பிறரால் தூற்றப்படும் நிலையே ஏற்படும்.

தனக்கு முன்னால் இருக்கும் எல்லாவற்றையும் எரித்துக்கொண்டு முன்னேறுகிற தீயைப் போல, தனக்கு முன்னால் இருக்கும் உடல்ரீதியான தடைகள், உள்ளப்பூர்வமான தடைகள், துயரங்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தகர்த்தும் எரித்தும் முன் சென்று விழிப்புடன் இருப்பவர்கள் வென்றுவிடுவார்கள்.

’நிப்பாணம்’ எனப்படும் துன்பமற்ற நிலைக்கு விழிப்புடனிருத்தல் மிகவும் அவசியம். துன்பம், துன்ப மூலம், துன்ப நிவாரணம், துக்க நிவாரண வழிகள் இவற்றைப் புரிந்துகொள்ளுதலும், எண்மார்க்கங்களைக் கடைபிடிப்பதும் விழிப்புநிலையில்தான் சாத்தியம்.

சோர்வைக் கைவிடவேண்டும். போர்க்களத்தில் அம்பு தைக்கப்பட்ட வீரன் அவ்வம்பைப் பிடுங்கி எறிவதுபோல, சோர்வைப் பிடுங்கி எறியவேண்டும். அதற்கு கடின முயற்சியும். சுயபரிசோதனையும் இருக்க வேண்டும்.

விழிப்புற்றிருத்தலும், ஆழ்ந்து சிந்தித்தலும் வெள்ளப் பெருக்கென இன்பம் விளைக்கும் (புத்தமும் அவர் தம்மமும் 3208)

குறை அறிவுடை மனிதர்

விழிப்பற்றுத் தன்னை இழக்கிறார்

நிறை அறிவுடை மனிதர்

தன் விழிப்புநிலையையே

உயர் செல்வமாக்குகிறார் (தம்மபதம் 26)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
தம்மத்தின் பதம் - 3: விழிப்பு மட்டுமே போற்றப்படும்!
வாழ்க்கையின் வாசல்: தம்மத்தின் பதம் -2

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in