தம்மத்தின் பதம் - 2: வாழ்க்கையின் வாசல்

தம்மத்தின் பதம் - 2: வாழ்க்கையின் வாசல்

மனம் முன்னோடி

மனம் தலைமை

தீயது பேசும்

தீயது செய்யும் மனம்

துன்பத்தால் தொடரப்படும்

காளையைத் தொடரும் வண்டியாய் (தம்மபதம்.01)

ஒரு விழியற்ற பௌத்தத் துறவி இருந்தார். அவருக்கு ஏன் பார்வை போனது என புத்தரிடம் கேட்க, ”அவர் ஒரு காலத்தில் மருத்துவராக இருந்தார். விழியற்ற ஒரு பெண் அவரிடம் மருத்துவத்துக்கு வர, அவர் மருந்தொன்றைக் கொடுத்தார். கண் தெரிந்தால் ’உங்களுக்கு நான் சேவகம் செய்வேன்’ என்று அந்தப் பெண்ணும் உறுதி தர, மருந்தும் நன்றாக வேலை செய்தது. கண் பார்வைப் பெற்றாள் அப்பெண்.

ஆனால், மருத்துவரை ஏமாற்ற நினைத்தாள். கண் குணமாகாததைப் போல நாடகம் ஆடினாள். இதை அறிந்த மருத்துவர், அவளுக்கு வேறொரு மருந்தைக் கொடுத்தார். அவள் பார்வை மீண்டும் பறிபோனது. அதன் விளைவாகத்தான் இவர் இப்போது கண் தெரியாமல் இருக்கிறார்” என்றார் புத்தர். தீயது நினைக்கும், தீயதைச் செய்யும் வாழ்க்கையில் துன்பம் தொடரும். நன்மையை நினைத்தால் செய்தால் மற்றவருக்கும் நமக்கும் மகிழ்ச்சி விளையும்.

வாழ்வின் மிக எளிமையான சூத்திரம். எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடித்தானே ஓடுகிறோம்.

”யாரும் அழைக்காமலே அவர் வந்தார்

யாருக்கும் சொல்லாமலே அவர் சென்றார்

எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏன் நீங்கள் அழுகிறீர்கள்?”

வாழ்வு இப்படித்தான் இருக்கிறது. யார் அழைத்தும் யாரும் வரவில்லை. யார் அனுப்பியும் யாரும் செல்லவில்லை.

புத்தர் தன்னை சாதாரண மனிதராகத்தான் பிரகடனப்படுத்திக் கொண்டார். புத்தர்கள் வழியைத்தான் காட்டுவார்கள். நாம்தான் நாம் நினைத்ததை அடைய முயற்சி செய்ய வேண்டும். உறுதியும் மாறாத முயற்சியும் இருக்கும் மனிதர்களால்தான் புத்தர்களாக ஆக முடியும்.

”நீங்களே உங்களுக்கு சரணாக இருங்கள், யாரிடமும் சரணடைய வேண்டியதில்லை. உங்கள் முயற்சியினால் உங்கள் தளைகளை அறுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார் புத்தர். அதற்குத் தடையாக இருக்கும் எதையும் தகர்க்கும் வழிகள் இருக்கின்றன.

அவர் எனக்கு இத்தகைய துன்பத்தைச் செய்தார், என்னை ஏசினார் என்னும் எண்ணங்கள் பகைமைப் பைகள். அவை வெறுப்பால் நிறைந்திருக்கும். அப்பைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். பகைமை உணர்வு அற்றுப்போனால் அன்பு வளரும். யார் மீது இருக்கும் வெறுப்பையும் களைய அன்பால் மட்டுமே முடியும். வெறுப்பை வெறுப்பால் அழிக்க முடியாது.

வெறுப்பை

வெறுப்பால் துறக்கும்

வழி இல்லை இவ்வுலகில்

துடைக்கலாம் வெறுப்பை

அன்பெனும் தம்மத்தால் (தம்மபதம்.05)

அதிக காமம், அதிக உணவு, அதிக சோம்பல் கொண்ட வாழ்வு புயலில் வீசியடிக்கப்பட்ட வேரற்ற மரத்தைப் போன்றது. அது துன்பம் நிறைந்தது. அதிகம் உண்பது உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் நல்லதல்ல. அதிக காமம், அதிக உணவு, அதிக சோம்பல் இவையற்ற தெளிந்த சிந்தனையுடையவர்கள் யாராலும் அசைக்க முடியாத கல்மலைக் குன்றினைப்போல் உறுதியானவர்களாக இருப்பார்கள்.

தன்னடக்கமும் உண்மையும் இல்லாதவர் துறவிகளின் ஆடை அணிந்திருந்தாலும் அவர்கள் மதிப்பிற்குரியவர் இல்லை. மாறாக வாய்மையுடன் இருப்பது துறவியர் ஆடைக்கு கறையற்ற மதிப்பைத் தரும். துறவிகளானாலும் அவர்களின் பொறுப்புகளை உணர்ந்து நடக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அடைந்திருக்கும் துறவுநிலைக்கு மதிப்பைப் பெறமுடியும். மாறாக அவர்கள் அவர்களின் போக்கில் செல்வார்களானால், அவர்கள் கறையற்ற தூய ஆடைகளை அணிந்திருந்தாலும் அதனால் அவர்களுக்கு எந்த மதிப்பும் கிட்டாது.

சரியாக வேயப்படாத கூரைக்குள் மழை புகுவது மாதிரி சரியாக பக்குவப்படாத மனதுக்குள் ஆசைபுகும். சரியாக வேயப்பட்ட குடிசைக்குள் மழைபுகாத மாதிரி நல்மனதுக்குள் ஆசை புகமுடியாது. அதனால் துன்பங்களிலிருந்து விடுபடலாம். மகிழ்வான வாழ்வுக்கான வாசல்களைத் திறக்கலாம்

நிறைய அறிவு நூல்களை வைத்துக்கொண்டு அவற்றை வாசித்துப் பெரும் ஞானத்தைப் பெற்றிருந்தாலும் அந்நூல்கள் கூறியபடி நடக்காமல் இருந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலைதான் கிட்டும். குறைந்த நூல்களை வாசித்தாலும் தம்மத்தைக் குறைவாக கற்றாலும் அதன்படி மிகச்சரியாக தங்கள் வாழ்வை நடத்துபவர்கள் பேரின்பம் அடைவார்கள்.

மகிழ்ச்சியான வாழ்வுக்கான வாசல் எப்போதும் திறந்திருக்கிறது. அது நம் கைகளிலேயே இருக்கிறது என்பது எத்தகைய வாய்ப்பு! தம்மத்தின் திறவுகோலால் அதைத் திறந்து கொள்ளலாமே!

இன்பம்

மேலும் இன்பம்

எப்போதும் இன்பம்

நீளும் இன்பம்

நற்செயலின் தூய்மையில்

பெருகும் இன்பம் இன்பம் (தம்மபதம்.16)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
தம்மத்தின் பதம் - 2: வாழ்க்கையின் வாசல்
தம்மத்தின் பதம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in