ஆசை கூடாது என்று புத்தர் கூறவில்லை!

தம்மத்தின் பதம் -25
ஆசை கூடாது என்று புத்தர் கூறவில்லை!

ஆசை என்பதின் வேறொரு சொல்தான் அவா. அவா என்னும் இச்சொல் அவா அறுத்தல் என்னும் பொருண்மையில் வள்ளுவராலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது.

ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் எனவே ஆசையை அறுக்க வேண்டும் என பௌத்தம் கூறுகிறது. ஆனால், ஆசைப்படாமல் நாம் எப்படி வாழ முடியும்? என்று பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். காலத்தின் எல்லா நிலைகளிலும் இது ஒரு கேள்வியாகவேதான் இருக்கிறது.

ஆசையே படக்கூடாது என்று பௌத்தம் கூறவில்லை. அறம் பிறழ்ந்த ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்கிறது பௌத்தம். அது என்ன அறம் பிறழ்ந்த ஆசை? பசிக்கிறது. சாப்பிடவேண்டும் என்பது ஆசை. இது தேவையினால் விளைந்த ஆசை. வயிறு நிறைந்து இருக்கும்போது இன்னும் ஒரு பிரியாணி சாப்பிடலாம் என ஆசைப்பட்டுச் சாப்பிட்டால் அது வயிற்றுப் பிரச்சினையில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதற்காக மருந்து சாப்பிடுவதோ அல்லது பட்டினிக்கிடப்பதோ நமக்கு அவசியமாகி விடும். எனவேதான் பஞ்ச சீலத்தில் ‘உனக்குத் தரப்படாத எதையும் எடுத்துக்கொள்ளாதே’ என்று ஒரு சீலம் வருகிறது. தரப்படாததின் மீது நாம் கொள்ளும் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம். இதை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். சில சமூகக் கேடுகளால் தரப்படவேண்டிய நியாயமானவை மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து நாம் போராடித்தான் ஆகவேண்டும்.

எப்படியேனும் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணி எல்லாவற்றிற்கும் ஆசைபட்டால காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைப்போல் அவர் வாழ்வில் பல இடங்களில் தாவிக்கொண்டே இருப்பார். ஆசை என்னும் தாகத்தால் அபகரிக்கப்பட்டவரின் துயரம், மழை பெய்த பிறகு மிக வேகமாக வளரும் பைரானா புல் போல வளர்ந்து விடும். ஆனால், ஆசைகளை வென்றவர்களின் துன்பமோ தாமரை இலையில் தண்ணீர் போல அவரிடம் ஒட்டாமலேயே விழுந்துவிடும்.

ஆகவே புத்தர் சொல்லுகிறார் ஆசை என்னும் வேரை அகழ்ந்து மனநிலத்திலிருந்து எடுத்துவிடுங்கள். ஆசை என்னும் தீயன் அடிக்கடி வந்து உங்களைத் தாக்கக் கூடும். எனவே ஆசைகள் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டப்பட்ட மரத்தின் வேர்கள் கிள்ளியெறியப்படவில்லை என்றால் மீண்டும் துளிர்க்கும் அல்லவா அப்படித்தான் ஆசையின் காரணமாக துயரங்கள் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.

ஐம்பொறிகளில் அடையப்படும் ஆசைகள் பெருகும் ஒருவரை துன்பம் அலைகளைப் போல் வந்துத் தாக்கும். இந்த படிமத்தினை அப்படியே உங்களில் கற்பனையின் விஸ்தீரத்திற்கே விட்டுவிடுகிறேன். நீங்களே யோசித்துப்பாருங்கள்.

ஆசை ஊற்றின் வெள்ளம்

பரவுகிறது எங்கும்

மெல்லப்படரும் துயரக்கொடி

வியாபிக்கிறது வெளியை

இதைக் காணும் மேனறிவு

அதன் வேர்களை வெட்டுகிறது (தம்மபதம் 340)

ஆசையினால் சூழப்பட்ட மனிதர்கள் வலையினில் சிக்கிய முயல் மாதிரி. அவர்கள் எப்போதும் பயத்துடன் நடுக்குறுகிறார்கள், அவர்களுக்குத் தடைகளும் துயர்களும் வந்த வண்ணம் இருக்கும். இதை அகற்ற வேண்டுமானால் ஆசையினை அகற்ற வேண்டும். ஒருவேளை அவர்கள் துறவிகளாய் இருப்பார்களானால் இதுதான் ஒரே வழி. ஆசைகளற்று இருக்கும் வாழ்வே துறவு. அஃதில்லாமல் இருப்பது துறவல்ல.

ஆசைகள் மிகைந்து எப்போதும் இருக்கும் இல்லறம் என்னும் காட்டை விட்டு துறவறம் என்னும் நல்லறக் காட்டிற்குச் சென்ற ஒருவர் மீண்டும் இல்லறத்தில் நுழையக் கூடாது அப்படி மீண்டும் அவர்கள் நுழைவார்களேயானால் விடுதலைப் பெற்ற ஒருவர் மீண்டும் விலங்குகளைப் பூட்டிக் கொள்வதைப் போல.

தம்மப்பதம் கூறுகிறது வேறெந்த உலோகத்தாலும் செய்யப்பட்ட விலங்கினைவிட வலிமையானது இல்லறப்பற்றால், ஆசையால் செய்யப்பட்ட விலங்கு. அதை உடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், அறிவூட்டப்பட்டவர்கள் அவ்விலங்கை அறுத்துவிடுகின்றனர்.

அதற்கு அவர்கள் உடலின்ப இச்சைகளைத் துறக்கிறார்கள். உடலின்ப இச்சைகளுக்கு அடிமையானவர்கள் சிலந்தியைப் போன்றவர்கள். தான் கட்டிய வலையில் தானே சிக்கிக் கொள்ளும் தன்மை அதற்கு உண்டு, அப்படித்தான் தாங்கள் கட்டிய வலையில் தாங்களே விழுந்து விடுவது. ஆனால், அறிவர்களோ ஆசைக்கட்டுகளை அறுத்து துன்பங்களை மிதித்து நடக்கின்றனர், தீய எண்ணங்கள், ஆசைகள், எப்போதும் இன்பங்களையே யாசிப்பவர்கள் துன்பத்தைத் தரும் தீயன் எனப்படும் மனநிலையில்தான் இருப்பார்கள். தீமைகள் புரியும் தீயனின் தளையைத் தகர்க்கவேண்டும்.

ஆசைகள் அழிந்து

அறிவின் திறன்பெற்று

எழுத்துகளின் பொருளறிந்து

தொடரறிந்து

மேனறிவுப் பெற்றவர்

மேன்மனிதர் (தம்மபதம் 352)

பௌத்தம் காட்டும் நான்கு உண்மைகள் எல்லா தானங்களையும் விஞ்சி நிற்கக் கூடியன. உண்மையின் நறுமணம் எல்லா இடங்களிலும் பரவுகிறது. உண்மையின் இன்பம் எல்ல இன்பங்களையும் விஞ்சுகிறது. அவாவை அறுத்தவர்கள் எல்லாத் துயர்களையும் வெல்கிறார்கள்.

காளைகள் வயல்களைச் சேதமாக்குகின்றன

ஆசை உயிர்களைச் சேதமாக்குகிறது

ஆசையற்றவர்க்க

பிறருக்கு உதவுதல் பெரும்பயனை அளிக்கிறது (தம்மபதம் 359)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
ஆசை கூடாது என்று புத்தர் கூறவில்லை!
நான் போர்க்கள யானை போன்றவன்!

Related Stories

No stories found.