நான் போர்க்கள யானை போன்றவன்!

தம்மத்தின் பதம் 24
நான் போர்க்கள யானை போன்றவன்!

யானை பௌத்தத்தின் மிக முக்கிய குறியீடு. பல உவமைகள், பல கதைகள் யானையை வைத்து மனிதர்களுக்கான நீதியை பௌத்தம் கூறியிருக்கிறது.

மாகந்தியா என்னும் பெண் உதேனா என்னும் மன்னனின் மூன்று மனைவியருள் ஒருத்தி. அவளுக்கு புத்தரின் மேல் தனிப்பட்ட முறையில் பகைத்தீ. அவர்கள் ஆளுகின்ற கோசம்பி நகருக்கு புத்தர் வருவதைக் கேள்வியுற்ற மாகந்தியா சில அடியாட்களை ஏவி புத்தர் என்னும் நன்வழிக்காரன் வரும்போது அவரை கேலி கிண்டல் செய்யவும், மோசமான முறையில் திட்டவும் ஏற்பாடு செய்கிறாள்.

புத்தர் கோசம்பி நகரில் தானத்திற்காக வரும்போதெல்லாம் அவர் பின்னாடியே போய் அந்த அடியாட்கள் மிக மோசமான வார்த்தைகளால் ஏசுகிறார்கள். காதுகள் கூசும் அளவுக்கு அவரை இழிவாகப் பேசுகிறார்கள். இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த புத்தரின் தலைமைச் சீடர் ஆனந்தர் இந்த நகரை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிடலாம் என்று புத்தரிடம் வேண்டினார்.

புத்தர் அதை மறுத்தார். “இன்னொரு நகரத்திலும் நாம் திட்டப்படலாம். திட்டப்படும் போதெல்லாம், இழிவுப்படுத்தப்படும் போதெல்லாம் ஓரிடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு போய்க்கொண்டே இருப்பது எப்படி சாத்தியமானதாக இருக்க முடியும்? அதுவும் அவர்களுக்கு எந்தத் தவறையும் நாம் இழைக்காத போது இடம்பெயர்ந்து வேறு இடத்திற்குப் போவதைவிட, எங்கு பிரச்சினை வருகிறதோ அங்கேயே அதற்கான தீர்வையும் காண வேண்டும். நான் போர்க்களத்திலே இருக்கின்ற யானையப் போன்றவன். போர்க்களத்தில் இருக்கும் யானை எப்படி எல்லா திசைகளிலிருந்து வரும் அம்புகளை எல்லாம் உடலில் தாங்கிக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுகிறதோ அப்படித்தான் நானும் வசவு என்னும் அம்புகள் எங்கிருந்து வந்தாலும், எத்தனை வந்தாலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு தம்மத்தைப் பரப்புவேன்” என்று கூறினார் புத்தர்.

வில்லிலிருந்து விரைந்து வந்த

அம்புகளை

போர்க்களத்தில் யானை தாங்குவதைப் போல

பழிச்சொற்களை நான் பொறுத்துக் கொள்கிறேன்

ஏனெனில்

உண்மையில்

தீமையானவர்களே உலகில் அதிகம் (தம்மபதம் 320)

பட்டத்து யானைகள் மிகச்சரியாகப் பழக்கப்பட்டவை. அப்படிப் பழக்கப்பட்ட யானையின் மீதே மன்னன் வருவான். மன்னன் வரும்போது அவனுக்கென்ன மரியாதைக் கொடுக்கப்படுமோ அவையெல்லாம் யானைக்கும் கொடுக்கப்படும். அதைப்போல தீயச் சொற்களைப் பொறுத்துக்கொள்ள ஒருவர் பழகிக் கொள்ள வேண்டும். தீச்சொல் பொறுப்பவர்கள் மேனிலை அடைவர் என்பது உறுதி.

வலிமையான துதிக்கைகள் யானைகளின் பலம். அதைக்கொண்டுதான் யானைகள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும். அதை வைத்துதான் யானைகள் தங்கள் இருப்புகளையே எல்லோருக்கும் உணர்த்தும். அத்தகைய யானைகளைப் பழக்கினால் அவை மனித சமூகத்திற்கு மிகப் பயனுள்ளதாக மாறும். அப்படிப் பழக்கப்பட்ட யானைகள் மிகச்சிறந்தவை. ஆனால், எவர் ஒருவர் தன்னை அடக்கப்பழகுகிறாரே அவரே ஆகச்சிறந்தவர். தன்னை அடக்குதல் தற்காத்தல்.

எதன் மூலமும் போயறிய முடியாத நிப்பாணத்தை ஒருவர் தன்னை அடக்கி ஆளும் தற்காத்தலால் அடையலாம். காட்டில் சுதந்திரமாக இருந்தபோது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தது தனபாலா யானை. அடர்ந்த அந்தக் காட்டில் அதன் விருப்பத்திற்கேற்ப கட்டுப்பாடில்லாமல் அது வாழ்ந்தது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் சுதந்திரம் அதற்கிருந்தது. ஆனால், அது பிடிபட்ட பிறகு இப்போது ஒரே இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. யானையைக் கட்ட முடியும் அதன் நினைவுகளை கட்டமுடியாதல்லவா! இப்போது தனபாலா யானை காட்டை நினைத்து ஏங்குகிறது. மனிதர்களாகிய நாமும் கட்டுப்பாடில்லாமல் வாழ்கிறோம் பின் ஏதோ ஒன்றால் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அதைப் பற்றியே திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்தும் ஏங்கிக்கொண்டும் இருக்க வேண்டியிருக்கிறது.

சோம்பலும் அதிக உணவும் பெருந்தூக்கமும், உண்டபின் புரள்வதும் கொண்டவர் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்கிறார் புத்தர். கடந்த காலங்களில் இன்பத்திற்காக அலைவுற்ற மனமானது அப்படியே இப்போதும் இல்லாமல் மேன்மையான அறிவால் கட்டுப்பட்டு இருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட மனத்தை உடையவர்கள் யானைப் பாகனால கட்டுப்படுத்தப்பட்ட யானையைப் போன்றவர்கள்.

மன ஓர்மையில் மகிழ்

மனத்தினைக் காத்துக்கொள்

சேற்றில் சிக்கிய யானை

தன்னை வெளியில் இழுப்பதுபோல்

தீயச் சேற்றிலிருந்து நீயே உன்னை

இழுத்துக்கொள். (தம்மபதம் 327)

தீயச்சேற்றிலிருந்து வருவதற்கு தன்முயற்சி மட்டுமின்றி பிறர்துணையும் சில நேரங்களில் தேவை. நல்ல உலகியல் அறிவு, நன்னடத்தையும் உடையவர் நட்பாய்க் கிடைத்தால் அவர்களைப் பற்றிக்கொள்வது, எல்லாத்துயர்களையும் தாண்டி மகிழ்ச்சியாக நம்மை வாழ வைக்கும். அப்படி ஒருவேளை சிறந்த நட்பு கிடைக்காமல் போகுமாயின் தன்னுடைய அரசைத் துறந்து வந்த மன்னனைப் போல் தனியாக வாழலாம். காட்டுக்குள் தனியாக வாழும் யானையைப் போல. ஏனென்றால் அறியாமையுடையவரோடு வாழ்வதை விட தனியாய் வாழ்வது மேலானது.

உதவும் நண்பர்கள் சூழ இருந்தால் அதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை. இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்வைச் சிறக்க வாழ வேண்டும். இறக்கும்போது பலர் வந்து மரியாதை செய்யும்படி வாழ வேண்டும். வாழும்போதே துக்கங்களிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்பது புத்தரின் வாக்கு. தாய் தந்தை துறவிகள் ஆகியோருக்கு நம் கடமைகளை நாம் ஆற்ற வேண்டும். உயர்வுற்ற அறிவர்களுக்குத் தேவையானவற்றை நாம் செய்ய வேண்டும்.

அசைக்கவியலா தம்ம நம்பிக்கை

நல்லது, நல்லது அறிவைச் சேகரிப்பது

தீயனச் செய்யாதிருத்தல் நல்லது

மேனிலையை இறுதிவரைக் காப்பது நல்லது. (தம்மபதம் 333)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
நான் போர்க்கள யானை போன்றவன்!
பிறழ்காமம் கொள்ளாமையை புத்தர் வலியுறுத்தினாரா?

Related Stories

No stories found.