சிவகங்கையும் சிதம்பரமும்... 26

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 26
ப.சிதம்பரம்

தேச விடுதலைப் போரில், சிறையை உடைத்துப் போராளிகளை விடுதலை செய்த வரலாறு திருவாடானையிலும் நடந்தேறியது. அத்தகைய மக்கள் போராட்டத்துக்கு தலைமை ஏற்றவர், பாலபாரதி செல்லத்துரை. 1952-ல், திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் (அப்போது அதிமுக இல்லை) நின்று வெற்றி பெற்றவர். எம்ஜிஆருக்கு முன்னதாகவே, ராமநாதபுரம் ஜில்லா மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என அழைக்கப்பட்டவர் பாலபாரதி செல்லத்துரை. அவரது பேரன், அண்ணன் துரை கருணாநிதியைப் பற்றி தான் இந்த அத்தியாயம் பேசப்போகிறது.

தேவகோட்டை ஒன்றியத்தின் இருமதி பகுதியில், செல்வாக்குமிக்க தலைக்கட்டு குடும்பங்களில் ஒன்று அண்ணன் துரை கருணாநிதி குடும்பம். ராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானங்களுக்கும் கப்பலூர் ஐயா கரியமாணிக்கம் அம்பலம் குடும்பத்துக்கும் நெருக்கமான குடும்பம்.

துரை கருணாநிதி
துரை கருணாநிதி

துரை கருணாநிதியும் தாத்தா வழியில் தேசப்பணியில் தீவிரமாக இருந்தவர். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர். பன்மொழி ஆளுமை மிக்கவர். மிடுக்கு மீசையை இன்னமும் விரைப்பாக வைத்திருப்பவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லும் துணிவு மிக்கவர். பெருநிலக்கிழார். உடன்பிறந்தோர் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். கடற்படையிலிருந்து பணி ஓய்வுக்குப் பிறகு நிம்மதியாக தொழில் துறை, விவசாயம் என இருந்திருக்க வேண்டிய துரை கருணாநிதி, காங்கிரஸின்பால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியாற்ற வந்தார். வந்தவுடன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஏற்றுக்கொண்ட பொறுப்பை திறம்படச் செய்வதற்காக பெரும் பொருட்செலவு செய்து கட்சிப் பணியாற்றினார். அன்றைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நடமாடும் கருவூலமாக கருணாநிதி விளங்கியதாக நண்பர்கள் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல் தவிர பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை கருத்துகளைப் பேசிய கருத்தான பேச்சாளர் கருணாநிதி. ஒருமுறை, காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை முகாமுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த முகாமில் நானும் ஒரு மாணவனாகப் பங்கேற்றது, எனக்கு இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது.

துரை கருணாநிதி, கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம்

கட்சியும் ஆரம்பத்தில் துரை கருணாநிதிக்கு உரிய மரியாதை அளித்ததை மறுப்பதற்கில்லை. 1996-ல், தமாகா சார்பில் துரை கருணாநிதியின் மனைவி சரஸ்வதி மாவட்ட கவுன்சிலர் ஆனார். பின்னர், தலைவர் சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை உருவாக்கியபோது, அந்தக் கட்சிக்கு சிவகங்கை மாவட்டச் செயலாளரானார் கருணாநிதி.

பொதுவாகவே அன்புத் தலைவர் சிதம்பரம், தன்னிச்சையாக சிந்திப்பவர்களையும் மாற்றுக் கருத்து சொல்பவர்களையும் அவ்வளவு சீக்கிரம் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கமாட்டார். தனது சொல்லுக்கு அப்பீல் சொல்லாதவர்களை மட்டுமே, அவர் கைக்குள் வைத்திருப்பார் என்பார்கள். அது தான் இந்த நிமிடம் வரைக்கும் நடக்கிறது. ஆனால், அதற்கு விதிவிலக்கு அண்ணன் கருணாநிதி மட்டுமே.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை நடத்தியபோது, தலைவரின் முக்கிய பாதுகாவலராக தமிழ்நாடு முழுவதும் அவருடைய சுற்றுப்பயணங்களில், கருணாநிதியும் இணைந்தே சுற்றிவந்தார். சிவகங்கை மாவட்டத்தில் மாநாடு போன்ற கூட்டங்களையும் நடத்தினார். கும்பகோணம் பகுதியில், தலைவரால் நியமிக்கப்பெற்று வங்கி இயக்குநராக இருந்த ஒருவர், தலைவரின் சுற்றுப் பயணத்தில் வம்பு செய்தபோது அவரை இறங்கிப் பந்தாடினார் கருணாநிதி என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

2006 உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக துரை கருணாநிதியின் மனைவி சரஸ்வதி வெற்றிபெற்றார். அந்த சமயத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியை தனது மனைவிக்குக் கொடுப்பார் தலைவர் சிதம்பரம் என கருணாநிதி பெரிதும் நம்பினார். ஆனால், அரசனூர் பாண்டியை அந்தப் பொறுப்புக்கு சிபாரிசு செய்துவிட்டார் தலைவர். அந்த விஷயத்தில் தலைவர் மீது அண்ணனுக்கு ஏக வருத்தம். ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்.

2009 பாராளுமன்ற தேர்தலில், தலைவர் சிதம்பரமும் இன்றைய அமைச்சர் ராஜ கண்ணப்பனும் கடுமையாக மோதினார்கள். அப்போது, இளையான்குடி ஒன்றியத்தில் ராஜ கண்ணப்பனின் உறவினர்கள் அதிகம் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோ.பா-வின் மகன் ரவி, ஐஎன்டியுசி களஞ்சியம் உள்ளிட்ட சிலர் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போது கதாநாயகன்போல், துரை கருணாநிதி தனது காரை எடுத்துக்கொண்டு போய் அவர்களை மீட்டு வந்தார். சினிமாக் காட்சிகளையே மிஞ்சிய அந்த சேஸிங் காட்சிகளை, இன்றைக்கும் பல காங்கிரஸ் நண்பர்கள் சிலாகித்துச் சொல்வார்கள்.

இப்படி தலைவர் சிதம்பரத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவராக, அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்த கருணாநிதி, தலைவர் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது தன் மகன் திருமணத்துக்கு தலைவரை அழைத்தார். அவரும் இசைவு கொடுத்தார். அதனால், தலைவரின் பெயரைப் போட்டு பத்திரிகை அடித்து ஊரெல்லாம் கொடுத்தார் கருணாநிதி. வரவேற்பு ஏற்பாடுகளை எல்லாம் பிரம்மாண்டமாகச் செய்துவைத்துவிட்டு, தலைவர் வருவார்.. வருவார்.. என காத்திருந்தார். தலைவரும் வரவில்லை; தலைவரின் தங்கமகனும் வரவில்லை.

இந்தச் சம்பவம் துரை கருணாநிதியின் சொந்தபந்தங்களை எல்லாம் துடுக்காகப் பேசவைத்தது. “இவ்வளவு தானா உனக்கு இந்தக் கட்சியில் மரியாதை?” என்றுகூட சிலர் பேசினார்கள். இதையெல்லாம் கேட்டு துவண்டு போனார் கருணாநிதி. அந்த நிகழ்வுக்குப் பிறகு காங்கிரஸை விட்டு கொஞ்சம் விலகியே இருந்த கருணாநிதி, பிற்பாடு வாசன் பக்கம் போய்விட்டார்.

வாசனுடன் துரை கருணாநிதி
வாசனுடன் துரை கருணாநிதி

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணிக் கட்சி வேட்பாளரான எச்.ராஜாவுக்காக கருணாநிதி செய்த பிரச்சாரத்தைப் பார்த்துவிட்டு, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவே இவரை பாஜகவுக்கு அழைத்தார். ஆனால் இவர் போகவில்லை. இந்த நிலையில், அண்மையில் கருணாநிதியின் மகன் பிரபு, காரைக்குடியில் பல் மருத்துவமனை திறந்தார். பழைய பாசத்தில், நேசத்தில் இந்த விழாவுக்கு வருமாறு தலைவர் சிதம்பரத்தை, டாக்டர் பிரபுவே நேரில் சென்று அழைத்தார். இந்த நிகழ்வுக்கு தலைவர் வருவாரா மாட்டாரா எனப் பலரும் விவாதம் நடத்தினார்கள். “தலைவர் கட்டாயம் வரவேண்டும்” என சிலர் கரிசனப்பட்டார்கள். “வரவே கூடாது” என கட்சிக்குள்ளேயே சிலர் கலகம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், தலைவர் சிதம்பரம் தட்டாமல் வந்து கலந்து கொண்டார். அவருக்குத்தானே கருணாநிதி யாரென்று முழுமையாகத் தெரியும். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து, தலைவரின் மகனும் பிரபுவின் மருத்துவமனைக்கு வந்துபோனார்.

மத்திய அமைச்சராக இருந்தபோது, ஒரு அணுக்கத் தொண்டனின் அழைப்பை நிராகரித்த அப்பாவும் பிள்ளையும் இப்போது அடுத்தடுத்து அந்தத் தொண்டனுக்காக வந்துபோகிறார்களே... இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று இன்னமும் காரைக்குடி பகுதியிலும் திருவாடானை பகுதியிலும் விவாதங்கள் போய்க்கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால், இந்த அரசியலுக்குள் எல்லாம் சிக்கிக்கொள்ளாமல் தமாகாவில் தனது அரசியல் பணியைத் தொடர்கிறார் அண்ணன் துரை கருணாநிதி. “முன்ன மாதிரி தீவிரமா இல்லையேண்ணே...” என்று கேட்டால், “பட்டுகெட்டதெல்லாம் போதும்டா தம்பி... இனிமே பிள்ளைகளுக்கு உதவியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்கிறார் அண்ணன்.

திராவிடக் கட்சியில் இருந்திருந்தால் தீவிர களப்போராளியான அண்ணன் கருணாநிதியை, டெல்லி செங்கோட்டைக்குக்கூட அனுப்பிவைத்து அழகு பார்த்திருப்பார்கள். ஆனால், நம்மால் அவரை புனித ஜார்ஜ் கோட்டைக்குக்கூட அனுப்பிவைக்க முடியவில்லை. இதனால் இழப்பு கருணாநிதி என்ற தனி மனிதருக்கு அல்ல... காங்கிரஸ் என்ற பேரியக்கத்துக்குத்தான்!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

(கப்பலூருக்கும் கண்டனூருக்கும் பாலமாக இருந்தவர். அன்புத் தலைவர் சிதம்பரம் இன்றைக்கு வசிக்கும் காரைக்குடி மானகிரி தோட்டம் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்தவர். அப்படிப்பட்டவரை கடைசி காலத்தில் கண்டனூர் கைவிட்ட கதையை அடுத்து பார்ப்போம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

ப.சிதம்பரம்
சிவகங்கையும் சிதம்பரமும்... 25

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in