சிவகங்கையும் சிதம்பரமும்... 25

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 25
சோனியா உள்ளிட்ட தலைவர்களுடன் ப.சிதம்பரம்

1984-ல், அன்னை இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்திய தேசத்தின் தலையில் விழுந்த பேரிடி. அந்தச் சம்பவத்துக்குப் பின்னால், நேரு குடும்பத்தின் மீது பலருக்கும் அனுதாபம் கலந்த அன்பு ஏற்பட்டது. அந்த அன்பின் காரணமாக பலபேர் காங்கிரஸ் பேரியக்கத்தைக் கண்கொண்டு பார்த்தார்கள். அப்படித்தான் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சிறு நகரமான புதுவயலைச் சேர்ந்த முஸ்லிம்கள், பெருவாரியாகத் தன்னெுழுச்சியாகக் கிளம்பி வந்து காங்கிரஸில் இணைந்தார்கள். அதற்கு முன்புவரை அவர்களெல்லாம் கலைஞரால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழகத்தில் இருந்தவர்கள்.

இவர்களை எல்லாம், அப்போது ஒன்றிணைத்து அழைத்து வந்தவர் ஏ.கே.எஸ். சாகுல் ஹமீது. கட்சிக்கு வந்த சில மாதங்களில், புதுவயல் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் சாகுல் ஹமீது. அடுத்ததாக வந்த தேர்தலில், காரைக்குடி பகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்த தலைவர் ராஜீவ் காந்தியுடன் கைகுலுக்கும் வாய்ப்பைப் பெற்றார் சாகுல். “காங்கிரஸ்காரனான எனக்கு இதைவிட பெருமை வேறென்ன வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே, பேரியக்கத்தில் முன்பைவிட வேகமாகப் பணியாற்றினார் சாகுல். அதனால், அவர் மட்டுமல்ல... அவரது ஒட்டுமொத்த குடும்பமே காங்கிரஸ் குடும்பமாகிப் போனது.

சாகுல் ஹமீது வழியில் அவரது சகோதரர் சித்திக், புதுவயல் நகர காங்கிரஸ் தலைவராகவும் பிற்பாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் வந்தார். துடிப்பான சித்திக்கின் சிந்தனைமிகு செயல்பாடுகள் எல்லோராலும் கவனிக்கப்பட்டன. அதனால் புதுவயல் சித்திக், அனைவருக்கும் பிடித்தமான ஒரு காங்கிரஸ்காரராக மாவட்டம் முழுவதும் அறியப்பட்டார்.

சித்திக்
சித்திக்

தலைவர் ஜி.கே.மூப்பனாரை அழைத்து வந்து, ஐயா நாட்டுச்சேரியாரும் புதுவயல் சித்திக்கும் இணைந்து காரைக்குடியில் விவசாயிகள் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அது மழைக்காலம் என்பதால், புதுவயல் ரைஸ் மில்களிலிருந்து ஒட்டுமொத்தமாக அத்தனை தார்பாலின்களையும் கொண்டுவந்து, அந்த மாநாட்டில் தரைவிரிப்புகளாகவும் ஷாமியானாவாகவும் பயன்படுத்தினார்கள். அப்போது மாவட்டத்தில் இருந்த பெரும்பகுதியான டிராக்டர்களையும், மாநாட்டு திடலைச் சுற்றி அணிவகுக்க வைத்து அசரவைத்தவர் சித்திக்.

அந்த சமயத்தில் மூப்பனாருடன் சித்திக்குக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கமானது, மூப்பனாருக்கு வேண்டப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சித்திக்குக்கும் பரிச்சயமாகும் வாய்ப்பைத் தந்தது. அந்த அதிகாரிகளோடு இன்றும் நீடித்த நட்பு பாராட்டும் சித்திக், அவர்கள் மூலமாக இன்றைக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சாதித்துக் கொடுக்கிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம்... மூப்பனாரிடம் சித்திக் நெருக்கமானது, அன்புத் தலைவர் சிதம்பரத்துக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், சிதம்பரத்தையும் மூப்பனாரையும் தனது இரு கண்களாகவே பாவித்தார் சித்திக்

கார்த்தி - ஸ்ரீநிதி கார்த்தி
கார்த்தி - ஸ்ரீநிதி கார்த்தி

தலைவர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குக்கும் தலைவருடைய அண்ணன் அண்ணாமலையின் மகன் பழனியப்பனுக்கும் திருமணம் முடிந்து, கண்டனூரில் வரவேற்பு விழா நடைபெற்றது. அதற்கு சித்திக் வைத்திருந்த அலங்கார வளைவுகளும் ஒட்டிய போஸ்டர்களும் அப்போது பிரமாதமாகப் பேசப்பட்டன. ‘அண்ணன் மகனுக்கும் எங்கள் மன்னன் மகனுக்கும் நடைபெறும் திருமண வரவேற்பிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்’ என்று சித்திக் ஒட்டிய போஸ்டர்கள், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களையும் யார் அந்த சித்திக் என தேடவைத்தது.

1996 நாடாளுமன்றத் தேர்தலில், தமாகா வேட்பாளராக அன்புத் தலைவர் சிதம்பரம் போட்டியிட்டபோது, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஜமாத் உலமாக்கள் சபையின் பிரதிநிதி களையும் காரைக்குடியில் ஒரே இடத்தில் கூட்டினார் சித்திக். அந்தக் கூட்டத்தில் தலைவர் சிதம்பரத்தையும் பேசவைத்து, சிறுபான்மையினரின் வாக்குகளை தமாகா பக்கம் திருப்பியவர் சித்திக்.

“சிதம்பரத்தை ஜெயிக்க வைக்க அன்றைக்கு அவ்வளவெல்லாம் மெனக்கிட்டீர்களே.. பணத்தை பணம்னு பார்க்காம செலவு செஞ்சீங்களே?” என்று இப்போது சித்திக்கை கேட்டால், “யாரும் சொல்லிச் செலவு பண்ணலையே... நாமளே தானே செலவு செஞ்சோம். எதுக்காக செஞ்சோம்? கட்சிக்காக செஞ்சோம்; தலைவர் மூப்பனார் சொல்லிட்டாருங்கிறதுக்காகச் செஞ்சோம். சிதம்பரத்துக்காகவா செஞ்சோம்?”என்று சாதாரணமாய் கடந்துவிடும் சித்திக், இப்போது காங்கிரஸில் இல்லை.

2004-ல், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிமிடம் வரைக்கும் அன்புத் தலைவர் சிதம்பரம், ‘காங்கிரஸ் ஜனநாயக பேரவை’ என்ற கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ‘சிதம்பரம் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்துவிட்டாரா இல்லையா?’ என தொகுதிக்குள் பலரும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, அவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கிறது கட்சித் தலைமை. எச்.ராஜா போன்றவர்கள் அப்போது இதையும் பெரிய பிரச்சினையாகப் பேசினார்கள். “கொல்லைப்புறம் வழியாகப் போய் சீட் வாங்கினார் சிதம்பரம்” என்று காங்கிரஸ்காரர்களை உசுப்பிவிட்டார் எச்.ராஜா.

எச்.ராஜா
எச்.ராஜா

அதையெல்லாம் காதில் வாங்காத காங்கிரஸ்காரர்கள், அந்தத் தேர்தலிலும் தலைவருக்கே மகுடம் தரித்தார்கள். தேர்தல் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, ஐயா நாட்டுச்சேரி வீரப்பன் இல்லத்தில் காங்கிரஸ் முக்கியப் பொறுப்பாளர்களை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் சிதம்பரம். அந்தக் கூட்டத்தில் சித்திக்கும் இருந்தார். அனைவரும் தனக்காக களப்பணி செய்து தன்னை ஜெயிக்க வைக்க வேண்டும் என தலைவர் கைகூப்புகிறார். அந்தக் கைகூப்பல் சித்திக்குக்கும் தான். அதுபோதாதா... சித்திக் உள்ளிட்ட அத்தனை பேரும் புதுவயல் பகுதியில் பம்பரமாய் சுழன்று தேர்தல் பணி செய்கிறார்கள்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தேர்தலில் வென்று மத்திய நிதி அமைச்சராகிறார் அன்புத் தலைவர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, தொகுதிக்கு வருகிறார் தலைவர். அப்போது அவரைச் சந்திக்க பலரும் காத்திருக்கிறார்கள். உரிமையோடு சிதம்பரத்தின் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற சித்திக், “வணக்கம் தலைவர்” என்கிறார். பதில் வணக்கம் சொல்ல மனமில்லாமல், முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொள்கிறார் தலைவர் சிதம்பரம்.

தலைவர் சிதம்பரம் ஜனநாயகப் பேரவை கண்டபோது, சித்திக் போன்றவர்கள் அவர் பின்னால் போகவில்லை. மூப்பனார் விசுவாசம் அவர்களை தமாகாவிலேயே தங்கவைத்துவிட்டது. அந்த வருத்தத்தை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்த சிதம்பரம், சமயம் கிடைத்தபோது வேறு மாதிரியாக வெளிக்காட்டியதாக சித்திக்கே ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். பொதுவாக தேர்தல் சமயத்தில் எத்தகைய நிலைப்பாட்டுக்கும் தயாராய் இருக்கும் அன்புத் தலைவர் சிதம்பரம், காரியம் முடிந்ததும் தனக்கென ஒரு நிலைப்பாட்டை வகுத்துக் கொள்வது வாடிக்கை தான். அப்படித்தான் சித்திக்குக்கும் பாராமுகம் காட்டி இருப்பாரோ என்னவோ. ஆனால், இந்த அனுபவத்தை எதிர்கொண்ட பிறகு, தலைவர் சிதம்பரத்தை சித்திக் சந்திக்கவே இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, சித்திக்கின் சகோதரர் சாகுல் ஹமீது இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது தலைவர் சிதம்பரத்துக்கும் தகவல் சொல்கிறார்கள். ஜி.கே. வாசனிடமும் தகவல் சொல்கிறார்கள். ஆபரேஷன் முடிந்து 2 நாட்கள் கழித்து சித்திக்குக்கு போன் செய்கிறார் வாசன். தான் புதுவயல் திரும்பிவிட்டதாக சித்திக் சொல்கிறார். “பரவாயில்லை... பாருங்கள்” என்று சொல்லிவிட்டு, வாசன் அப்போலோ மருத்துவமனைக்குச் செல்கிறார். இதை சித்திக்கிடம் சொல்லவில்லை. சித்திக்கிடம் போனில் பேசியதை வைத்து, அறை எண் 3033-ன் கதவை தட்டுகிறார் வாசன். சாகுல் ஹமீதுக்கு இன்ப அதிர்ச்சி. “வாங்கய்யா” என்று வாஞ்சையாய் அழைக்கிறார்.

ப.சிதம்பரம் - ஜி.கே.வாசன்
ப.சிதம்பரம் - ஜி.கே.வாசன்

அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, “வேறு ஏதும் உதவி தேவையா?” என்கிறார் வாசன். அட்டெண்டர் கார்டு ஒண்ணு மட்டும்தான் தர்றாங்க. அந்த ஒரு கார்டை வெச்சிக்கிட்டு மகனும் மனைவியும் எனக்கு மாறி மாறி வந்து உதவிக்கு இருக்காங்க” என்று சொல்கிறார் சாகுல் ஹமீது. உடனே மருத்துவமனை நிர்வாகியை அழைத்து, “இவரோட இன்னொருவர் தங்கி இருக்க அனுமதி குடுங்க” என்று ஏற்பாடு செய்த வாசன், “என்ன உதவி வேணும்னாலும் சித்திக்க பேசச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்படுகிறார்.

ஆனால், தலைவர் சிதம்பரம் தரப்பிலிருந்து பெயரளவில்கூட ஒரு விசாரணை இல்லை. புதுவயலுக்கும் சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூருக்கும் 3 கிலோ மீட்டர் தூரம்தான். அப்படியிருந்தும், தனது தாயார் இறந்த துக்கம் விசாரிக்கக்கூட சிதம்பரம் வரவில்லையே என்ற ஆதங்கம் சித்திக்கின் அடிமனதில் இன்றைக்கும் இருக்கிறது.

கடந்த வாரம், காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்திக் என்பவர் தலைவர் சிதம்பரத்துக்கு ஒரு ட்வீட் போடுகிறார். ‘காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் எங்களை கண்டுகொள்வதில்லை’ என்று. அதற்கு தலைவர் சிதம்பரம் பதில் போடுகிறார். ‘நீங்கள் புதுவயலிலேயே அரசியல் செய்யாமல் காரைக்குடியில் வந்து அரசியல் செய்யுங்கள். சட்டமன்ற உறுப்பினர் உங்களைக் கண்டுகொள்வார்’ என்று. அதற்கு காரைக்குடி வழக்கறிஞர் சித்திக் பதில் சொல்கிறார், ‘நான் புதுவயல் சித்திக் இல்லை; காரைக்குடி சித்திக்’ என்று. நமக்காக உழைத்த புதுவயல் சித்திக் இப்போது காங்கிரஸில் இல்லை; தமாகாவில் இருக்கிறார் என்ற விவரமே தலைவர் சிதம்பரத்துக்கு தெரியவில்லை என்பதை நினைக்கும் போது, பெருத்த வருத்தமாக இருக்கிறது.

காமதேனுவில் நான் எழுதும் இந்தத் தொடரை சிவகங்கைக்கு வெளியிலும் பலபேர் படிக்கிறார்கள். கடல்கடந்தும் இருந்து கருத்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அப்படியொரு நண்பர் என்னிடம் பேசியபோது, “இதற்கெல்லாம் விடிவே இல்லையா... காலத்துக்கும் நீங்களெல்லாம் இப்படியேதான் இருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்தக் கேள்வி என்னை என்னவோ செய்தது. குறுக்கே தீபாவளி வந்துவிட்டதால் என்னால் எங்கேயும் நகரமுடியவில்லை. தீபாவளி முடிந்த கையோடு, கட்சியை நேசிக்கும் ஒரு காங்கிரஸ்காரனாக என் மனதில்பட்ட மூன்றே மூன்று விஷயத்தை மட்டும் கடிதமாக எழுதி எடுத்துக்கொண்டு, டெல்லிக்குப் பயணமாகிவிட்டேன். இளம் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்பது எனது துடிப்பு. ஆனால், நான் சென்ற நேரம் அவர் டெல்லியில் இல்லை. அதனால், அடுத்த நிலையில் இருப்பவர்களிடம், எனது மனுக் குமுறலைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

டெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஒய்.பழனியப்பன்
டெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஒய்.பழனியப்பன்

‘சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பங்கள் எல்லாம் கட்சியைவிட்டு வெளியேறிக் கொண்டிருக் கிறார்கள். காரணம் கேட்டால், ‘கட்சியில் எங்களுக்கு உரிய மரியாதை இல்லை’ என்று அனைவருமே அந்த ஒற்றை மனிதரை கையைக்காட்டுகிறார்கள். இருப்பவர்களையாவது தக்கவைக்க ஏதாவது செய்யுங்கள்’ என்பது எனது குமுறல்களில் ஒன்று. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய விதத்தில் மன்றாடலை வைத்திருக்கிறோம். இனியாவது நமக்கு மரியாதை கிடைக்கும் என்று நம்புவோம்.

(திருவாடானையை விலக்கிவிட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பேசிவிடமுடியாது. அந்தளவுக்கு தேசவிடுதலைப் போரில் வெள்ளையரை தெறிக்கவிட்ட ஊர் திருவாடானை. சுதந்திரப் போரில் திருவாடானை சிறையை தகர்த்து, யூனியன் ஜாக் கொடியை கிழித்தெறிந்தது ஒரு மாவீரர் கூட்டம். அந்தக் கூட்டத்தை வழிநடத்தியவர்களில் முக்கியமான ஒரு தலைவர், தேசவிடுதலைக்குப் பிறகும் அவரது பேரனை தேசம் காக்க ராணுவத்துக்கு அனுப்பிவைத்தது அந்தக் குடும்பம். ஆனால், அன்றைக்கு வெள்ளையர்களையே வெலவெலக்க வைத்த அந்தக் குடும்பத்தால் காங்கிரஸில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது காங்கிரஸுக்கு வெளியில் நிற்கிறது அந்தக் குடும்பம். ஏன்? அடுத்து பார்ப்போம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சோனியா உள்ளிட்ட தலைவர்களுடன் ப.சிதம்பரம்
சிவகங்கையும் சிதம்பரமும்... 24

Related Stories

No stories found.