மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 12

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

 ம கா பெரியவா அருளாசியினால் தனக்கு உபநயனம் நடக்கப் போகிறது என்கிற தகவலைத் தன் தாயாரிடம் சந்தோஷமாகச் சொன்னான் சுந்தரராமன். கூடவே, மகா பெரியவாளுடனான அனைத்து சம்பாஷணைகளையும் தெள்ளத் தெளிவாக விவரித்தான்.

தாயாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்றாலும், மனசுக்குள் வருத்தம்.  ‘திடீரென்று மகா பெரியவா ஏற்பாடு செய்யும் இந்த சுப நிகழ்வுக்கு உறவினர்களை அழைக்க முடியவில்லையே’ என்று.

இந்த ஒரு குறை மட்டுமல்ல, சுந்தரராமனின் தாயாருக்கு. இன்னும் பல குறைகள்...

மகனின் உபநயனத்துக்கு அழைப்பிதழ் அடிக்க முடியவில்லையே... அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க முடியவில்லையே... உறவினர்

கள் இல்லத்துக்கு நேரில் போய் அழைக்க முடியவில் லையே என்று ஏராளமான ‘முடியவில்லையே’க்கள் சுந்தரராமனின் தாயார் மனதுக்குள் குறையாகக் குமைந்தன. இவற்றை எல்லாம் ஒரு சேர எண்ணிப் பார்த்த அவரது கண்களில் லேசாக ஜலம் தளும்பியது.

ஒரு நிகழ்ச்சி எளிமையாகச் செய்யப்படுகிறது என்றால், அதற்கு வறுமையே ஒரு முக்கியக் காரண மாக இருக்கும். மிக அரிதான சில நேரங்களில் படாடோபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.

ஆனால், சுந்தரராமனின் உபநயனம் வெகு எளிமையாக நடப்பதற்குக் காரணம், காஞ்சி மாமுனிவரின் அறிவுரை. இதுபோன்ற வைதீக கர்மாக்களை நடத்துகிறபோது அதில் ஆடம்பரம் தலைகாட்டக்  கூடாது என்று  மகானது உபதேசத்தால் எளிமையாக நடக்கிறது.

தவிர, சுந்தரராமனின் குடும்பத்தில் அவ்வளவு பெரிய வசதியெல்லாம் கிடையாது. இவர்களின் குடும்பத்தில் இன்றைக்கு வறுமை தலை காட்டு கிறதே தவிர, ஒரு காலத்தில்  வசதியோடு ‘ஓகோ’வென்று இருந்த குடும்பம்தான். இருந்தாலும் இப்போது கொஞ்சம் சிரமதசை. பொருள் இல்லாவிட்டால் என்ன? கருணைக் கடலான காஞ்சி மகானின் அருள் இருக்கிறதே?

எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஸ்ரீமடம் கோசாலையில் உபநயன வைபவம் நடந்துகொண் டிருந்தது. சொந்தக்காரர்கள் கூட்டம் இல்லை. சளசள வென்ற பேச்சுகள் இல்லை. வெகு அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

மடத்தின் வேத பண்டிதர்கள் கணீரென்று மந்திரத்தை உச்சரித்தபடி சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் சந்திரமௌலீஸ் வரருக்கு அபிஷேகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

அந்த நேரத்தில் ஒரு தம்பதியர் எதிர்பாரா விருந் தாளியாக உபநயனம் நடக்கின்ற இடத்துக்கு வந்தனர்.  அவர்களிடம் ஒரு பணக்காரத்தனம் தெரிந்தாலும், அதை மிஞ்சிய கருணையும் அன்பும் முகத்தில் தென்பட்டன.

வந்த தம்பதி சாதாரணமானவர்கள் அல்ல. வசதி யான பெரிய குடும்பம். நங்கவரம் சுந்தரம் ஐயர் மற்றும் அவரது மனைவி. பண்ணையார் குடும்பம்!

ஏதோ உபநயனத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் போல் உரிமையுடன் வந்து நின்றார்கள். வைதீகமான தோற்றத்தில் அமர்ந்திருக்கிற சிறுவன் சுந்தரராமனைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார்கள்.

சுந்தரராமனின் தாயாரும் தந்தையாரும் இவர் களைப் பார்த்துவிட்டு,‘‘வாங்கோ... வாங்கோ’’ என்று உற்சாகமாக  வரவேற்றனர்.

காரணம்.. நங்கவரம் குடும்பத்தினர் காஞ்சி மடத்துக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள். இங்கேயே பலமுறை இவர்களைப் பார்த்திருக் கிறார்கள் சுந்தரராமனின் பெற்றோர்.

பதிலுக்குப் புன்னகைத்த நங்கவரம் தம்பதியர், அடுத்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் இருக்கக் கூடிய பொருட்களை வெளியே எடுத்தார்கள்.  ஸ்ரீமடத்தின் ஒரு மூலையில் இருந்து மூங்கில் தட்டுகளை எடுத்து வந்து, அந்தத் தட்டுகளில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அழகாக அடுக்கினர். தட்டுகளில் அடுக்கப்படும் பொருட்களைப்  பார்த்த சுந்தரராமனின் பெற்றோர்களுக்கு ஆச்சரியம்!

புத்தம்புது வேட்டிகள், புடவைகள், பழங்கள், பூமாலைகள், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்கள். அந்தத் தட்டுகளைக் கைகளில் எடுத்துக் கொண்ட நங்கவரம் தம்பதியர், சுந்தரராமனின் பெற்றோரிடம் நீட்டினார்கள்.

சரியாக அந்த வேளையில் சொல்லி வைத்தாற்போல் நாதஸ்வர வித்வானும், தவில்காரரும் வாசித்தபடியே வந்து உபநயனம் நடக்கின்ற இடம் அருகே அமர்ந்து தங்கள் வாசிப்பைத் தொடர்ந்தனர்.

‘இங்கே என்ன நடக்கிறது’ என்று ஒன்றும் புரியாமல் மகிழ்ச்சி கலந்த குழப்பத்துடன் நாதஸ்வரக்காரரையும், நங்கவரம் தம்பதிகளையும் மாறி மாறிப் பார்த்தனர் சுந்தரராமனின் பெற்றோர்.

அவர்களின் குழப்பத்துக்கு பதில் சொல்வதுபோல நங்கவரம் மாமி பேசினார்: ‘‘எல்லாம் உங்களுக்குத்தான். இன்னிக்கு உங்க பையனுக்கு உபநயனம் நடக்கப் போறதா மகா பெரியவா நேத்திக்கு எங்ககிட்ட சொன்னார்.’’

வியப்பு அதிகரித்தது சுந்தரராமனின் பெற்றோருக்கு!

நங்கவரம் சுந்தரம் ஐயர் தொடர்ந்தார்: ‘‘நேத்திக்கு பெரியவா தரிசனத்துக்காக நாங்க வந்தோம். தரிசனம், ஆசிர்வாதம் எல்லாம் நன்னாவே கிடைச்சுது. அப்ப மகான் எங்களைப் பார்த்து சன்னமான குரலில், ‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவேளா?’னு கேட்டார்.

என்னடாது... லோக ரட்சகனான மகானே நம்மகிட்ட உபகாரம்னு கேக்கறாளே... எப்பேர்ப்பட்ட பாக்கியம் இதுன்னு சந்தோ ஷப்பட்டு, ‘சொல்லுங்கோ பெரியவா...  நாங்க என்ன பண்ணணும்’னு ரெண்டு பேருமே கேட்டோம்.

அதுக்கு பெரியவா, ‘நாளைக்கு எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு குடும்பத்துப் பையனுக்கு மடத்துல உபநயனம் ஆகப்போறது. அவாளுக்கு அவ்வளவா பெரிய வசதி இல்லே... யாரு உதவறதுக்கு வருவானு காத்துண்டு இருந்தேன். நீங்க சரியான நேரத்துக்கு வந்திருக்கேள்’னு சொன்னார்.

மாமுனிவரின் உத்தரவுக்காக அவரது திருமுகத் தையே ஆர்வத்துடன் பார்த்து, ‘பெரியவா என்ன சொன்னாலும் அதைச் செய்யறதுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்’னு சொன்னேன்.

உபநயனம் நடக்கப் போற பையனுக்கும், அவா குடும்பத்துக்கும் என்னென்ன வாங்கிண்டு வரணும்னு பெரியவா சொன்னா. உடனே கடைகளுக்குப் போய் எல்லாவற்றையும் வாங்கிண்டு வந்தோம். இதெல்லாம் உங்களுக்குத்தான்’’என்று நங்கவரம் சுந்தரம் ஐயர் முடித்தபோது, உணர்ச்சிப்பெருக்கில் அவருக்கு நா தழுதழுத்தது.

பெரியவாளின் கருணையை நினைத்து, வியப்பிலும் மகிழ்ச்சியிலும் நன்றி உணர்விலும் சுந்தரராமனின் பெற்றோருக்கு பேச்சே வரவில்லை. தங்கள் மனதில் எந்தவிதமான வருத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காக இத்தனை ஏற்பாடுகளையும் வெளியே தெரியாமல் மகா பெரியவாளே செய்திருக்கிறாரே...! நன்றியை எப்படிச் சொல்வது என்று புரியாமல்,கைகளைக் குவித்து நங்கவரம் தம்பதியை வணங்கினர்.

அவர்கள் கொடுத்த மூங்கில் தட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். சந்திரமௌலீஸ்வரர் பூஜை நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார் காஞ்சி மகான்.

சீர்வரிசை தருவது போல் அனைத்தும் வந்தாயிற்று. மங்கல வாத்தியமும் வந்தாயிற்று. சொந்தக்கார மனிதர் கள் இல்லையே என்கிற குறையைப் போக்க நங்கவரம் தம்பதியரும் வந்தாயிற்று.

சுந்தரராமனின் தாயும் தந்தையும், ‘எந்தப் பிறவியில் நாங்கள் செய்த அணுவளவு புண்ணியமோ, அது எங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது... எங்களையும் இந்த அளவுக்கு ஆதரித்து, அனுசரணையாக அத்தனையையும் நடத்திக்கொண்டு இருக்கிறீர்களே... எங்கள் நன்றியை எப்படி உங்களுக்குத் தெரிவிப்போம் பெரியவா’ என்று பூஜை மண்டபத்தில் இருந்த மகானை நோக்கி இருகரம் உயர்த்தித் தேம்பினார்கள்.

அதேவேளையில் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகத்தை மகா பெரியவா ஆரம்பிக்க... வேத மந்திரம் சொல்லி சுந்தரராமனுக்கு இங்கே உபநயனமும் ஆனது.

கெட்டிமேளம் முழங்கியது. சந்திர மௌலீஸ்வரரின் சந்தன அபிஷேகத் துக்கும், சுந்தரராமனின் உபநயனத் துக்கும் என அந்த மங்கல இசை அமைந்திருந்தது.

பூஜையை முடித்த மகான் உபநயனம் ஆன சுந்தரராமனை அருகே வரவழைத்தார். அவனது பெற்றோரும் உடன் வந்தனர். மூவரும் பெரியவரின் திருப்பாதங்களை நமஸ்கரித்தனர்.

உபநயனம் ஆன பையனுக்கு ஒரு பழத்தை பிரசாதமாக வழங்கினார் மகான்.

சுந்தரராமனின் தாயையும் தந்தையையும் பார்த்து, ‘‘என்ன, உங்கள் மகனுக்கு உபநயனம் ஆகிவிட்டதா?’’ என்று  சம்பிரதாயத்துக்கு ஒரு புன்னகையுடன் விசாரித்தார்.

‘‘உங்க அனுக்ரஹத்துல உங்களோட திருச்சந்நிதியில அமோகமா நடந்தது பெரியவா... இதைவிட இந்த ஜன்மத்துல எங்களுக்கு வேற என்ன பாக்கியம் வேணும் பெரியவா’’ என்று பக்தியிலும் நன்றிப்பெருக்கிலும் உடலும் மனமும் குழைய பதிலளித்தனர் சுந்தரராமனின் பெற்றோர்.

‘‘மடத்துல கல்யாண சாப்பாடு ஏற்பாடு ஆகி இருக்கு. எல்லோரும் போய் சாப்டுங்கோ’’ என்று அனுப்பி வைத்தார் மாமுனிவர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சுந்தர ராமனுக்குக் கிடைத்த மகா பெரியவா அனுக்ரஹம் மகத்தானது!

இனியாவது அவரவர் இல்லங்களில் நடக்கிற சுப நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிற சிலருக்கு உதவினாலே மகா பெரியவா என்றென்றும் ஆசிர்வதிப்பார்!

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 11

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in