மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 09

மகா பெரியவா
மகா பெரியவாமகா பெரியவா - ஓவியம்: A.P.ஸ்ரீதர்

மகா பெரியவாளின் அருகே வந்த சிறுவன் அவரது திருக்கரங்களில் இருந்து பிரசாதமாக திராட்சைகளைப் பெறும் வண்ணம் தன் உள்ளங்கையைக் குவித்து பவ்யமாக நீட்டினான்.

‘‘உன் பேரு என்ன?’’ பிரசாதம் தருவதற்கு முன் பெரியவா கேட்டார்.

‘‘வெங்கட்ராமன்...’’ கைகளை பவ்யமாகக் கூப்பிக்கொண்டே சொன்னான் சிறுவன்.

‘‘எந்தூரு?’’

‘‘ஆனதாண்டவபுரம்...’’

மயிலாடுதுறைக்கு அடுத்து இருப்பது ஆனதாண்டவபுரம். ‘ஆனந்த தாண்டவபுரம்’ என்று முற்காலத்தில் வழங்கப்பட்ட ஊர் தற்போது இப்படிச் சுருங்கிவிட்டது. மயிலாடுதுறையை ஒட்டிய பகுதிகளில் யாத்திரை செய்யும்போது இந்தக் கிராமத்தில் சில நாட்கள் தொடர்ந்து தங்கி ஆனந்த தாண்டவேஸ்வரர் எனும் ஈசனை தரிசித்திருக்கிறார் காஞ்சி மகான். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.

ஊர்ப் பெயரைக் கேட்டவுடன் பெரியவா முகத்தில் ஒரு பரவசப் புன்னகை. வலக் கரம் உயர்த்தி வெங்கட்ராமனை ஆசிர்வதித்தார். அந்த ஆசிகளைப் பணிந்து ஏற்றுக்கொண்டான் வெங்கட்ராமன். பிரசாதமான திராட்சைகளைப் பெறும்விதமாக இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கையை வைத்து மீண்டும் பெரியவாளை நோக்கி பயபக்தியுடன் நீட்டினான்.

இதற்கு முன்னால் வந்த முதியவருக்கு அள்ளிக்கொடுத்த அதே அளவு திராட்சையை இவனுக்கும் வழங்கினார் மாமுனிவர்.

கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் இந்தக் காட்சிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ‘பார்த்தேளா... ஒவ்வொருத்தருக்கா பெரியவா திராட்சை குடுக்க ஆரம்பிச்சுட்டார்... அடுத்து நம்மைக் கூப்பிட்டுத்தான் திராட்சை கொடுப் பார்னு நினைக்கிறேன்’ என்கிற எதிர்பார்ப்பும் மகானின் திருக்கரத்தால் பிரசாதம்

கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பெரும்பாலானவர்கள் முகத்தில் தென்பட்டது.

திராட்சையை வாங்கிய முதியவர் தன் மேல் அங்கவஸ்திரத்தில் முடிந்து வைத்து, தன் பழைய இடத்தில் போய் அமர்ந்துகொண்டார் என்று பார்த்தோம். ஆனால், இந்த வெங்கட்ராமன் திராட்சைகளை வாங்கியதும், அதுவரை தான் அமர்ந்திருந்த இடம் நோக்கிச்  செல்லவில்லை. பெரியவாளிடம் இருந்து சற்றுத் தள்ளி ஒரு இடத்தில் நின்றான். சர்வேஸ்வர சொரூபமாக பெரியவா வீற்றிருக்கிற இந்தத் திருச்சந்நிதியில், இப்படி பல பக்தர்களும் பசியோடு அமர்ந்திருக்கிற வேளையில், தான் மட்டும் வாயில் போட்டுக்கொள்வது உசிதமில்லை என்று பட்டது அவனுக்கு.

வெங்கட்ராமன் நின்றிருந்த இடம் அருகே பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்றே தள்ளி சுமார் இருபது சிறுவர்கள் அமர்ந்துகொண்டிருந்தனர். எல்லோரும் சுமார் பத்து வயதுக்குட்பட்டவர்கள். பாடசாலையில் வேதம் பயின்று வருபவர்கள். நெற்றியிலும் உடலிலும் திருநீற்றுப் பட்டைகள் பளிச்சென்று தெரிந்தன. தலையில் கட்டுக் குடுமி. கண்களில் ஒரு தீட்சண்யம். முகத்தில் ஒரு பொலிவு.

இந்த இருபது சிறுவர்களும் சொல்லி வைத்தாற்போல் ஒரே பொசிஷனில்  ஒரு நேர்க்கோடு போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோல் ஒருவனை அடுத்து இன்னொருவன் என்று வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.

தற்செயலாகத் தன் பார்வையைத் திருப்பிய வெங்கட்ராமன், வேதம் படிக்கிற இந்த சிறுவர்களைப் பார்த்தான். அடுத்த கணம் அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.

அவர்களின் அருகே சென்றான். முதலில் அமர்ந்திருந்த சிறுவனில் துவங்கி, அடுத்தடுத்து அமர்ந்திருக்கிற எல்லோருக்கும் நாலைந்து திராட்சைகளை அவர்களின் கையில் கொடுத்துக்கொண்டே போனான். சிறுவர்களின் கையில் இது கிடைத்ததும், அடுத்த விநாடி அதை அப்படியே வாயில் போட்டுக்கொண்டார்கள்.

கடைசியாக அமர்ந்திருக்கிற சிறுவனின் கையில் கொடுத்து முடித்தபோது, வெங்கட்ராமன் கையில் வெறும் நாலைந்து திராட்சைகளே எஞ்சி இருந்தன. அதாவது வேதம் படிக்கிற ஒவ்வொரு சிறுவனுக்கும் எத்தனை எண்ணிக்கை திராட்சை கொடுத்தானோ, அதே அளவு என்று சொல்லலாம்.

தன் கையில் எஞ்சி இருக்கிற திராட்சைகளை அப்படியே வாயில் போட்டுக்கொண்டான். நெடுநேரம் கையில் இருந்ததால், திராட்சையின் பிசுபிசுப்பு லேசாக உள்ளங்கைகளில் ஒட்டி இருந்தது. இரு கரங்களையும் சேர்த்து அழுந்தத் துடைத்துக்கொண்டான். பிசுபிசுப்பு மறைந்தது. தான் அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்தான்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் மகா பெரியவா மட்டுமல்ல... அங்கே கூடி இருக்கிற பக்தர்கள் எல்லோரும் ஆச்சரிய மாகவும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் கையில் கிடைத்த ஒரு பொருளைத் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கின்றானே இந்தச் சிறுவன் என்ற பிரமிப்புதான் அனைவருக்கும்!

நடமாடும் தெய்வமான மகா பெரியவா ளும் இந்த நிகழ்வுகள் அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்தார். மகானின் சந்நிதியில் நடக்கக் கூடியவை அனைத் தும், அவர் அறியாமல் நடக்குமா? அவரது ஆசியோடு அரங்கேறுபவைதானே!

கூடி இருக்கின்ற பக்தர்களை ஒரு முறை இடதும் வலதுமாகப் பார்த்துவிட்டு, பேசத் துவங்கும் விதத்தில் தொண்டையை லேசாக செருமினார். ஒட்டுமொத்த கூட்டமும் மகான் ஏதோ பேசப் போகிறார் என்று, அவரது திருமுகத்தையே ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தனர்.

‘‘இப்ப இங்கே நடந்த காட்சிகள் அனைத்தையும் நீங்க எல்லாருமே பார்த்திருப்பேள்... கிராமத்துலேர்ந்து ஒருத்தர் சின்ன மூட்டைல திராட்சையைக் கொண்டு வந்தார். ஒரு மூங்கில் தட்டுல கொட்டச் சொன்னேன். 

அதோ, அங்கே உட்கார்ந்திருக்கிறாரே முதியவர்.. அவரைக் கூப்பிட்டு கொஞ்சம் திராட்சையைக் கொடுத்தேன். அவர் எப்படி அதை வாங்கினார்னு இங்கே இருக்கிறவா எல்லாருமே பார்த்தேள்... தன்னோட மேல் வஸ்திரத்தைப் பிரிச்சுக் காட்டி அதுல வாங்கிண்டு ஒரு முடிச்சுப் போட்டுண்டு போய் சாதுவா ஒக்காந்துட்டார்.

அவர் என்ன தீர்மானத்துல இருக்கார்னா, இந்தத் திராட்சைகளை அப்படியே வீட்டுக்கு எடுத்துண்டு போய் கொடுக்கணும். மனைவி மற்றும் வீட்டில் இருக்கிறவா அத்தனை பேரும் இந்தப் பிரசாதத்தைச் சாப்பிடணும்னு ரொம்ப ஜாக்கிரதையா பத்திரப்படுத்திண்டார்.

ஆனா, இந்த வெங்கட்ராமன் என்ற சிறுவன் பண்ண காரியத்தையும் பார்த்திருப்பேள்.  தன் கையில் பிரசாதமா திராட்சை கிடைச்ச உடனே அதை நேரா எடுத்துண்டு போய், அவன்  கூட வந்தவாகிட்ட கொடுக்கலை. என்ன பண்ணலாம்னு யோசிச்சவன், தன்னுடன் வந்த குடும்பத்தினரின்  அனுமதியையும் பெறாமல் தானே தீர்மானித்து, இங்கே வேதம் சொல்றதுக்கு வந்த பாடசாலை பசங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சான்.

கொடுத்து முடிச்சதும் கையில் இருக்கிற நாலஞ்சு திராட்சைகளைத் தன் வாயில் போட்டுண்டு கையைத் துடைச்சுண்டு போய் உட்கார்ந்துட்டான்.

முதல்ல பார்த்த முதியவருக்கு இன்னும் சுயநலம் போகலை. தான், தன் குடும்பம், தன்னைச் சார்ந்தவர்கள் அப்படின்னு இன்னமும் வாழ்ந்திண்டிருக்கார். அதனால், யாருக்கும் கொடுக்காம முடிஞ்சு வெச்சுண்டார்.

இந்த சின்ன வயசுலயே வெங்கட் ராமனுக்கு சுயநலம் இல்லை. தனக்குக் கிடைச்சிருக்கிற ஒரு பொருளைப் பலருக்கும் பகிர்ந்து கொடுக்கணும்கிற ஒரு பொதுநல எண்ணம் இருக்கு.

என்னிக்கு நம்மகிட்ட இருக்கிற சுயநலம் விலகி, பொதுநலம் வர்றதோ அப்பதான் தானம், தர்மம்ங்கிற சிந்தனை வரும். எனவே நீங்க அத்தனை பேரும் சுயநலத்தோட இருக்காதீங்கோ. இந்த உலகம் நன்னாருக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும்ங்கிற பொதுநலனோடு வாழுங்கோ’’ என்று மகான் சொல்லி முடித்தார்.

கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் கண்களில் நீர் தளும்ப, அந்த அனுக்ரஹத்தையும் மகானே தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுபோல் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

நம்மிடம் இருக்கக்கூடிய குறுகிய மனப்பான்மை யானது நம்மை விட்டு அகல வேண்டும்.

அதாவது நான், எனது, என்னுடைய என்கிற எண்ணம் எப்போதும் மனதில் தோன்றவே கூடாது. அதற்குப் பதிலாக நாம், நமது, நம்முடையது என்கிற எண்ணம் மனதில் வேரூன்ற ஆரம்பித்துவிட்டால் உலகமே தன்னிறைவு பெற்றுவிடும்.

இதைத்தான் மகா பெரியவா ஒரு சிறு நிகழ்வின் மூலம் தன் பக்தர்களுக்கு அந்த மதிய வேளையில்  பிட்சையும் எடுத்துக் கொள்ளாமல் சொல்லியிருக்கிறார்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 08

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in