மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 08

மகா பெரியவா
மகா பெரியவா மகா பெரியவா - ஓவியம்: A.P.ஸ்ரீதர்

தெய்வங்களுக்கோ, மகான்களுக்கோ ஏதேனும் ஒரு பொருளை அர்ப்பணிக்க விரும்புவோர், அதைத் தாமே எடுத்துச்சென்று காணிக்கையாக வழங்குவதுதான் விசேஷம்.

தெய்வத்துக்கு அணிவிக்கவோ, மகான்களுக்கு சமர்ப்பிக்கவோ மலர்மாலைகளை வாங்கிச் செல்லும் சிலர், இந்த மாலைகளைத் தன்னுடன் வந்த பணியாளரிடம் கொடுத்து உடன் எடுத்து வரச் சொல்வார்கள். இது அவ்வளவு உசிதம் இல்லை.

ஒருவேளை சுமை அதிகம் என்றால், பணியாட்களிடம் கொடுத்து எடுத்துவரச் சொல்வதில் தவறில்லை. ஆனால்,  எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அல்லது கையில் சுமக்கக்கூடிய பொருட்கள் என்றால், உரியவர்களே அதைக் கொண்டுசென்று அர்ப்பணிப்பது கூடுதல் பலனைப் பெற்றுத் தரும். இது சாத்வீகமான குணம். இத்தகைய தன்மை அகந்தை, அகங்காரம் போன்றவை தலைதூக்கவிடாமல் பார்த்துக்கொள்ளும். வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.



அறுபது வயது மதிக்கத்தக்க அந்த அன்பர் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த மகா பெரியவா திருச்சந்நிதிக்குள் தலையில் ஒரு சிறிய மூட்டையோடு நுழைந்தார். பார்ப்பதற்கு அவரே ஒரு பண்ணையார் போல்தான் காணப்பட்டார்.

அவருடன் உதவிக்கு நிச்சயமாக எவரேனும் சிப்பந்தி வந்திருக்கலாம். இருந்தாலும், எவர் உதவியும் இன்றி, தானே அந்தச் சிறு மூட்டையைத் தலையில் சுமந்து வந்தார். பெரியவா அருகே வந்து கீழே இறக்கி வைத்தார். இரு கரங்களையும் கூப்பி வணங்கி பின்னர் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

தன் எதிரே நின்றுகொண்டிருப்பவர் யார், எப்படிப்பட்டவர், சுயலாபம் கருதி வந்திருக்கிறாரா அல்லது உண்மையான பக்திப் பெருக்கோடு வந்திருக்கிறாரா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவரைப் பார்த்த மாத்திரத்தில் மகானுக்கு ‘எக்ஸ்ரே’ போல் துல்லியமாகத் தெரிந்துவிடும்.
மூட்டை கொண்டுவந்து வைத்தவரை ஏறெடுத்துப் பார்த்தார் பெரியவா. ‘இதுல என்ன இருக்கு?’ என்று ஜாடையில் கேட்டார்.

மிகுந்த பவ்யத்துடன், ‘‘திராட்சை பெரியவா..’’ என்றார் வந்தவர்.

பக்கத்தில் இருந்த பெரிய மூங்கில் தட்டு ஒன்றைக் காண்பித்து, அதில் மூட்டையைப் பிரித்துக் கொட்டுமாறு உத்தரவிட்டார் காஞ்சி மகான். அடுத்த விநாடி மூட்டையைப் பிரித்து, தான் கொண்டு வந்திருந்த திராட்சையை அதில் கொட்ட ஆரம்பித்தார். மூங்கில் தட்டு மெள்ள மெள்ள நிறைய ஆரம்பித்தது.  சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி தயாரிக்கும்போது அதில் போடுவோமே, அந்தச் சிறிய திராட்சைதான்.

மகான் அடையாளம் காண்பித்த மூங்கில் தட்டு முழுக்க, ஒரு மலை போல் திராட்சை குவிந்து காணப்பட்டது. மதிய வேளை. மகா பெரியவா பிட்சை எடுத்துக்கொள்கிற நேரம் கடந்துவிட்டது. இருந்தாலும், பக்தர்கள் அதிகம் கூடி இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு அதன் பின் பிட்சை எடுத்துக்கொள்ளலாம் என்று திருச்சந்நிதியிலேயே வீற்றிருக்கிறார்.

தங்களுக்கு தரிசனம் தர வேண்டும் என்பதற்காக மகானே பிட்சைக்குச் செல்லாமல் அமர்ந்திருக்கின்ற காரணத்தால் பக்தர்களும் பசியை மறந்திருந்தார்கள். கண்களை இமைக்க மறந்து பெரியவாளையே பார்த்தவாறு, ‘மகா பெரியவா... மகா பெரியவா...’ என்று மனமுருக ஜபித்துக்கொண்டிருந்தனர்.

மகான் ஒரு புன்னகையோடு திராட்சை மூட்டையைக் கொண்டு வந்தவரைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து கொஞ்சம் எடுத்து பிரசாதமாக அவருக்குக் கொடுத்தார். மூட்டையைக் கொண்டு வந்தவர், பயபக்தியுடன் கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

மூட்டை கொண்டுவந்த அன்பருக்குக் கொஞ்சம் திராட்சையை பிரசாதமாக மகா பெரியவா கொடுத்த உடனே, பக்தர்களின் மனம் ஆர்ப்பரித்தது. ‘பெரியவா எல்லோருக்கும் நாலைந்து திராட்சையைப் பிரசாதமா கொடுக்கப் போகிறார் போலிருக்கிறது. அவரிடம் இருந்து திராட்சையை பிரசாதமாகப் பெறுவது பெரும் பாக்கியம்’ என்று ஆர்வமானார்கள்.

அந்தக் கூட்டத்தில் இருக்கின்றவர்களை அப்படியே கண்களால் துழாவினார் காஞ்சி மகான். பிறகு, குறிப்பிட்ட ஒரு முதியவரை அடையாளம் காட்டித் தன் அருகே அழைத்தார். அந்த முதியவருக்கு, மகா பெரியவா தன்னைத்தான் அழைக்கிறாரா அல்லது தனக்குப் பின்னால் இருக்கின்ற வேறு யாரையேனும் அழைக்கின்றாரா என்கிற சந்தேகம் போலிருக்கிறது. முன்னும் பின்னும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

இந்தக் குழப்பத்தை உணர்ந்த மகான், தன் சிப்பந்தி ஒருவரிடம் அடையாளம் காண்பித்து அந்த முதியவரை அருகே அழைத்து வரச் சொன்னார். அடுத்த ஒரு சில விநாடிகளில் சிப்பந்தி ஓடிப் போய் அந்த முதியவரை மகா பெரியவாளிடம் அழைத்து வந்தார். முதியவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். தன்னைத்தான் மாமுனிவர் அழைத்திருக்கிறார் என்பது தெரிந்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. சிப்பந்தி உதவியுடன் மகானுக்குக் கஷ்டப்பட்டு நமஸ்காரம் செய்தார்.

அவரது முகத்தைப் பார்த்து, ‘வாங்கிக்கோ’ என்பதுபோல் திராட்சையைத் தன் கையில் அள்ளி நீட்டினார். முகம் மலர்ந்த முதியவர் தன் இடது தோளில் போட்டிருந்த மேல் அங்கவஸ்திரத்தின் கீழ் இரு முனைகளை அகலப் பிடித்து, ‘இதுல கொட்டுங்கோ பெரியவா’ என்பதாகக் காணப்பட்டார்.

பொத்தென்று அந்த திராட்சைகளை அங்கவஸ்திரத்தில் போட்டார் ஸ்வாமிகள். முதியவருக்குப் புன்னகையுடன் விடை கொடுத்தார். அங்கவஸ்திரத்தின் முனையை அப்படியே ஒரு முடிச்சு போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் முதியவர். தப்பித் தவறியும் அதில் இருந்து ஒரு திராட்சையைக் கூட வாயில் போட்டுக் கொள்ளவில்லை. வேறு எவருக்கும் விநியோகம் செய்ய வில்லை. எங்கிருந்து எழுந்து வந்தாரோ, அங்கே போய் அமர்ந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த பக்தர்கள், முதியவரை ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். 

பெரியவாளின் பிரசாதத்துக்காக பக்தர்கள் கூட்டம் பக்தியுடன் ஏங்கியது. ‘அடுத்து பெரியவா என்னைக் கூப்பிட்டுத்தான் பிரசாதம் கொடுப்பார்’ என்று அனைவரும் நம்பி, மகானது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகானின் திருப்பார்வை வந்திருந்த பக்தர்களிடையே ஊடுருவியது. அப்போது ஒரு சிறுவனைப் பார்த்து ஜாடை காண்பித்து வரச் சொன்னார் பெரியவா.

அத்தனை கூட்டத்திலும் அந்தச் சிறுவன் தன்னைத்தான் அழைக்கிறார் என்று தீர்மானித்து எழுந்து மகான் சந்நிதியை நோக்கி வேகமாக வந்தான். அவனை அழைத்துவந்த பெற்றோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி..  தங்கள் மகனைப் பெரியவா அழைத்திருக்கிறாரே என்று.

காஞ்சி ஸ்வாமிகள் அருகே வந்த சிறுவன், அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். எழுந்தான். பெரியவா திருமுகத்தையே பார்த்தான். அவனை இன்னும் அருகே வரவழைத்தார். தனக்கு முன்னால் இருந்த திராட்சை மலையில் இருந்து கொத்தாக அள்ளினார் ஸ்வாமிகள். அவனை நோக்கி நீட்டினார்.

சிறுவன் தன் உள்ளங்கையைக் குவித்து நீட்டினான்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 07

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in