எடியூரப்பாவின் கை மீண்டும் ஓங்கியது: மகன் விஜேந்திராவுக்கு பாஜக மாநில தலைவர் பதவி!

கர்நாடக மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜேந்திரா நியமனம்
கர்நாடக மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜேந்திரா நியமனம்

கர்நாடக மாநில பாஜகவின் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சி முன் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக ஆட்சியை பாஜக இழந்தது.

இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் கடந்த 6 மாதங்களாக புதிய மாநில தலைவர் நியமிக்கப்படாமலேயே பாஜக செயல்பட்டு வந்தது. மேலும் சட்டமன்றத்திலும், எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்காமல் இருந்தது.

கர்நாடக மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜேந்திரா நியமனம்
கர்நாடக மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜேந்திரா நியமனம்

இந்த 2 விவகாரங்களை முன்வைத்து பாஜகவை, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதேசமயம் மாநில தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளுக்குப் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து மேலிடத்தில் பேசி வாய்ப்பு கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகனும் ஷிக்காரிபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள பி.ஒய்.விஜேந்திராவை பாஜக மாநில தலைவராக நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பி.ஒய்.விஜேந்திரா
பி.ஒய்.விஜேந்திரா

இதன் மூலம் மீண்டும் கட்சியில் எடியூரப்பா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எடியூரப்பாவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஷிக்காரிபுராவில் போட்டியிட்டு தற்போது விஜேந்திரா எம்எல்ஏவாக உள்ளார்.

எடியூரப்பாவின் மற்றொரு மகன் ராகவேந்திரா, ஷிமோகா மக்களவைத் தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். தற்போது விஜேந்திரா மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் கர்நாடக மாநில பாஜகவில் எடியூரப்பாவின் கை மீண்டும் ஓங்கி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in