பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியை பயன்படுத்தி விமானத்திலும் பல மடங்கு கட்டணக் கொள்ளை!

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியை பயன்படுத்தி விமானத்திலும் பல மடங்கு கட்டணக் கொள்ளை!

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பயணிகள் பலர், விமானங்களில் பயணம் மேற்கொண்டு உள்ளதால், சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்களிலும் கூட்டம் நிறைந்து வழிகிறது. அரசு சிறப்பு பஸ்கள் அனைத்திலும், ஏற்கெனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர். எனவே தனியார் ஆம்னி பஸ்களில், டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.

இதை அடுத்து விமானங்களில் பயணித்தால்,பயண நேரம் குறைவு, சொந்த ஊரில் குடும்பத்தாருடன், கூடுதல் நேரம் இருந்து, பண்டிகையை கொண்டாடலாம் என்று, பயணிகள் பலர் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர்.

இன்றும் நாளையும் இரு தினங்கள், விமானங்கள் அனைத்திலும், பெரும்பாலான டிக்கெட் விற்பனை ஆகிவிட்டன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட்கள் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.

சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,390. இன்று, நாளை கட்டணம் ரூ.11,504.

சென்னை-தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,273. இன்று, நாளை கட்டணம் ரூ.13,287.

சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,709.

சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,190. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,086.

சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,314. வெள்ளி, சனி கட்டணம் ரூ.13,415.

இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊரில் தங்கள் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை, கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான டிக்கெட் கட்டணத்தை பற்றி யோசிக்காமல், போட்டிப்போட்டுக் கொண்டு, விமான டிக்கெட்கள் வாங்கிக் கொண்டு, பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் கூட்டம் பெருமளவு அலை மோதுகிறது. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணக் கொள்ளை நடந்து வரும் நிலையிலும், விமான பயணத்திலும் கட்டணக் கொள்ளை நடந்து வருவது பயணிகளை வெகுவாக பாதித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in