திமுக சேர்மனும் எங்க மாவட்டச் செயலாளரும் கூட்டு... அதிமுக பெண் கவுன்சிலர் அதிரடி புகார்!

முத்துதுரை
முத்துதுரை

ஒரே சாதியாக இருந்தாலும் தன்னிடம் சாதி ரீதியாக பேதம் பார்ப்பதாக காரைக்குடி திமுக நகர்மன்றத் தலைவர் மீதும், அதிமுக மாவட்டச் செயலாளர் மீதும் ஒருசேர குற்றம் சாட்டுகிறார் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர்.

காரைக்குடி நகராட்சியின் 29 வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதா. திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் முத்துதுரை, இவர் உள்ளிட்ட பெண்களை அநாகரிகமாக பேசுவதாகவும், அதை அதிமுக மாவட்டச் செயலாளர் கண்டிக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசி இருக்கும் அமுதா, “29-வது வார்டில் இதுவரை அதிமுக வெற்றிபெறாத நிலையில், முதன்முறையாகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அதை திமுக சேர்மன் முத்துதுரையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  நகர்மன்றக் கூட்டத்தில் வார்டு பிரச்சினை குறித்து நான் பேசும்போதெல்லாம் எகத்தாளம் பண்ணுவதும், பேசவிடாமல் தடுப்பதுமாக இருக்கிறார். 

கவுன்சிலர் அமுதா
கவுன்சிலர் அமுதா

குறிப்பாக, பெண் கவுன்சிலர்களை அவர் மதிப்பதே இல்லை. ஒருமையில் பேசுவது, மனுக்களை தூக்கி வீசுவது, சொந்தக் கட்சி கவுன்சிலரையே அடித்துக் காயப்படுத்துவது என்று அடாவடி செய்து வருகிறார்.  சமீபத்தில் வார்டு பிரச்சினை குறித்து அவரிடம் மனு கொடுக்க என் கணவரையும் அழைத்துச் சென்றேன். அப்போது என்னை அசிங்கமாகப் பேசி, மனுவை முகத்தில் வீசினார். 

இந்தச் சம்பவம் குறித்து எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தினேன்.  அவரும் இதைக் கண்டு கொள்ளவில்லை. திமுக சேர்மனும், எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், நானும் ஒரே சாதியினர் தான். ஆனால், அவர்கள் இருவரும் ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். நாப் வேறு பிரிவு. இங்கே அரசியலைக் கடந்து சாதிதான் முக்கியமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகம்
காரைக்குடி நகராட்சி அலுவலகம்

இதற்கு பதிலளித்திருக்கும் காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துதுரையோ, "அமுதாவின் வார்டில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறோம். பணிகளில் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை.  என்னைப் போய் சாதி பார்ப்பதாகச் சொல்வதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு.  அவர் என்னிடம் பெரிதாக எதையோ எதிர்பார்த்தார். அது கிடைக்காததால், இது போன்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் தங்கள் மீதான அமுதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தரப்பினர், “திமுக சேர்மனுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப் போகிறோம்” என்கிறார்கள்.

காரைக்குடி நகர்மன்றத்தின் செயல்பாடுகளை எதிர்த்து போராட எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் முறையான ‘கவனிப்பு’கள் நடப்பதால் யாருமே முத்துதுரைக்கு எதிராக கொடிபிடிக்கத் தயங்குகிறார்கள் என்பது காரைக்குடி மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in