உத்தராகண்டில் சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

உத்தராகண்ட் ஹல்த்வானியில் பதற்றம்
உத்தராகண்ட் ஹல்த்வானியில் பதற்றம்

உத்தராகண்டில் சட்ட விரோத மதரஸா மற்றும் அதன் அருகே உள்ள மசூதி நேற்று இடிக்கப்பட்டது. இதனால் வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று இடிக்கப்பட்டது.

முன்னதாக அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையொட்டி, ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை இடிக்க முயன்ற போது ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீஸாருக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். பல அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மோதலில் சிக்கிக்கொண்டனர்.

ஹல்த்வானியில் வன்முறை
ஹல்த்வானியில் வன்முறை

அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தினர் அதிகாரிகள் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். காவல் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறை அதிகரித்து, சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்தது.

பொக்லைன் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் பெண்கள் உள்பட ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தடுப்புகளை உடைத்து போலீஸாருடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 2 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயமடைந்தனர்.

புஷகர் சிங் தாமி
புஷகர் சிங் தாமி

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க குழு அனுப்பப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகள் காவல்துறையினரை தாக்கியதே தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்க கூடுதல் காவல்துறை, மத்திய படைகள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும்" என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹல்த்வானி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அப்பகுதிகளில் அனைத்து கடைகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது. அங்கு நிலைமை பதற்றமாக உள்ளது. அராஜக சக்திகளை கடுமையாகக் கையாளுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வன்முறை
வன்முறை

மோதலில் படுகாயமடைந்தவர்கள் சோபன் சிங் ஜீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆக்கிரமிப்புகளை இடிப்பதை நிறுத்திவைக்க கோரும், பொது நல வழக்கு உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவங்கியது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in