ஹரியாணாவில் பாஜக அரசு கவிழுமா?... ஆதரவை வாபஸ் பெற்றனர் 3 சுயேட்சைகள்; காங்கிரஸ் தடாலடி!

காங்கிரஸ் தலைவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்கள்
காங்கிரஸ் தலைவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்கள்

ஹரியாணாவில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ள மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் ஹரியாணாவில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹரியாணாவின் பூண்ட்ரி தொகுதியைச் சேர்ந்த ரந்தீர் கோலன், நிலோகேரியைச் சேர்ந்த தரம்பால் கோண்டர் மற்றும் தாத்ரியைச் சேர்ந்த சோம்பிர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக அரசாங்கத்துக்கு அளித்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த மூன்று பேரும் ரோஹ்டக்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தங்கள் முடிவை அறிவித்தனர். அப்போது பாத்ஷாபூரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ராகேஷ் தௌல்தாபாத் தங்களுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், அவரால் சரியான நேரத்தில் வரமுடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

3 சுயேட்சை எம்எல்ஏக்கள்
3 சுயேட்சை எம்எல்ஏக்கள்

தொடர்ந்து பேசிய அவர்கள், “பல்வேறு பிரச்சினைகளை பாஜக அரசு கையாள்வதில் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அரசாங்கம் அமைக்க பாஜகவுக்கு எங்கள் ஆதரவு தேவைப்படும் நேரத்தில் நாங்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டோம். மனோகர்லால் கட்டார் ஆட்சியில் இருக்கும் வரை நாங்கள் ஆதரிப்போம் என்று முடிவு செய்திருந்தோம். அவர் ஆட்சியில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது...விவசாயிகளின் நலன் கருதி அரசின் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக, நாங்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தோம். இன்று மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இதைப் பார்த்து, நாங்கள் எங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளோம்" என்று அவர் கூறினார்

ஹரியாணா பேரவையில் நயாப் சிங் சைனி
ஹரியாணா பேரவையில் நயாப் சிங் சைனி

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் முன்னிலையில் இவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளனர். இது குறித்து பேசிய உதய் பன், "சோம்பிர் சங்வான், ரந்தீர் சிங் கோல்லன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 88, அதில் பாஜக 40 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது என்பதையும் நான் கூற விரும்புகிறேன். பாஜக அரசு முன்பு ஜேஜேபி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைக் கொண்டிருந்தது, ஆனால் ஜேஜேபியும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டது, இப்போது சுயேட்சைகளும் வெளியேறுகிறார்கள்.

எனவே முதல்வர் நயாப் சிங் சைனி அரசாங்கம் இப்போது சிறுபான்மை அரசாங்கமாக உள்ளது. சைனிக்கு முதல்வர் பதவியில் ஒரு நிமிடம் கூட இருக்க உரிமை இல்லை என்பதால், அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறினார்.

மனோகர் லால் கட்டார் துஷ்யந்த் சவுதாலா
மனோகர் லால் கட்டார் துஷ்யந்த் சவுதாலா

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், அம்மாநிலக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது. இதர 7 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். இதையடுத்து, பாஜகவும், ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தன.

இந்த நிலையில், மக்களவை தொகுதிப் பங்கீடு மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதை அடுத்து, முதல்வராக இருந்த மனோஹர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி புதிய முதல்வராக பதவியேற்றார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in