பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா... ஒடிசா அரசியலில் அனல் பரத்தும் தமிழர் வி.கே.பாண்டியன்!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

தமிழ்நாட்டில் பிறந்து ஒடிசா மருமகனாகி, கிட்டத்தட்ட அந்த மாநிலத்தின் நிழல் முதல்வராகவே வலம் வந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தற்போது அப்பதவியை துறந்து காபினட் அமைச்சருக்கு இணையான உச்ச பதவியில் வீற்றிருப்பது அங்கே அரசியல் புயலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியனின் பதவி விலகலை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 24 மணி நேரத்தில், ஒடிசாவின் முதல்வருக்கு அடுத்த அதிகாரப் பதவியில் அவர் அமர்ந்திருக்கிறார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி விலகியோ, ஓய்வு பெற்றோ அரசியல் அதிகாரப் பதவிகளில் அமர்வது ஒன்றும் புதிதல்ல. ஆனபோதும், பாண்டியனின் அதிரடியும், அவரது வேகமும், ஒடிசாவின் அடுத்த முதல்வர் இவர்தான் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் வம்பு வளர்க்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கச் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்த வி.கார்த்திகேய பாண்டியன், பஞ்சாப் கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ராவத் என்பவரை மணம்புரிந்து ஒடிசாவின் மருமகனானதும், அங்கே பாண்டியனின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது. கலஹண்டி மாவட்டத்தில் தர்மகர் சப் கலெக்டராக பணியை ஆரம்பித்தவர், 2011-ல் ஒடிசா முதல்வர் அலுவலகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு விரைவில் உயர்ந்தார்.

முதல்வருடன் பாண்டியன்
முதல்வருடன் பாண்டியன்

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாநிலத்தின் அதிகார முடிவுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாண்டியன் முக்கிய பங்காற்றி வருகிறார். அப்போதே பாஜக, காங்கிரஸ் என மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கண்களை பாண்டியன் உறுத்த ஆரம்பித்தார். முதல்வருக்கு நிகராக மாநிலம் நெடுக ஹெலிகாப்டர் பயணம், அங்கே அவருக்கு கட்சியினர் உட்பட பலதரப்பிலான வரவேற்பு, பாண்டியன் மூலமாக எடுக்கும் முடிவுகளின் துரிதம் மற்றும் வீரியம் போன்றவை அரசியல் களத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டன.

வி.கே.பாண்டியன் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்கட்டும் என்று எதிர்க்கட்சியினர் சவால் விட்டனர். முதல்வருடனான நெருக்கம் கண்டு ஆளும் கட்சியினர் உள்ளூர குமுறினார்கள். அதிகாரிகள் மட்டுமன்றி அமைச்சர்களும் பாண்டியன் மூலமாகவே முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தை பெற முடிந்தது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் வாக்கு பலிக்கும் வகையில், தனது ஐஏஎஸ் பதவியை அண்மையில் பாண்டியன் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட மறுநாளே கேபினட் அமைச்சருக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் அமர்ந்துள்ளார். மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ’5டி திட்டம்’ மற்றும் ’நபின் ஒடிசா’வின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இனி அவரது அதிகார மற்றும் அரசியல் வீச்சு மேலும் அதிகரிக்கும் என ஒடிசா அரசியல் களத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

2019ல் தொடங்கி 5டி துறையின் செயலாளராக பாண்டியனின் அதிகாரம் அனைத்து துறைகளிலும் ஊடுருவி இருந்தது. ஒடிசாவின் அரசாங்கத் துறைகளுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவுத் தன்மையை கொண்டுவந்ததில் பாண்டியனின் அதிகாரத்துக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் பாண்டியன் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கான அகில இந்திய சேவை நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டார். அவர் ஒரு அதிகாரிக்கான சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக, பாஜக எம்பியான அபராஜிதா சாரங்கியால் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலகா, ‘ஒடிசாவின் அடுத்த முதல்வராக பாண்டியன் பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று காட்டம் காட்டியிருக்கிறார். பாண்டியனின் விருப்ப ஓய்விலும் மத்திய அரசு காட்டிய வேகமும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. ’விடுமுறை நாட்கள் என்றும் பாராது பாண்டியனின் விருப்ப ஓய்வினை மத்திய அரசு சூப்பர் ஃபாஸ்ட்டாக அங்கீகரித்திருக்கிறது’ என்று சப்தகிரி கிண்டல் செய்திருக்கிறார்.

நிதர்சனத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆசிக்கு பாண்டியன் ஆளானதன் பின்னணியில், அவரது செயல்திறம் மட்டுமே இருப்பதாக விவரமறிந்தோர் தெரிவிக்கின்றனர். ஆட்சியின் நற்பெயருக்கு காரணமாகும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் இறுகப்பற்றிக்கொள்வது இயல்பாகவே நடக்கும். அதுதான் ஒடிசாவின் அதிகார உச்சத்திலும் தற்போது நடந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in