வாராணசியில் மோடி வேட்பு மனுத்தாக்கல்... திணறும் சாலைப் போக்குவரத்தால் விமானப் பயணிகளுக்கும் எச்சரிக்கை

மோடியின் நேற்றைய வாராணசி ரோடு ஷோ
மோடியின் நேற்றைய வாராணசி ரோடு ஷோ

வாராணசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதனையொட்டி நகரம் திருவிழாக்கோலம் பூண்டு சாலைப்போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், விமானப்பயணிகளுக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனை முன்னிட்டு நேற்றைய தினமே 5 கிமீ தொலைவுக்கு வாராணசியை திணறடித்த ரோடு ஷோவில் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். சாலையின் இருபுறமும் கூடிய ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ நெடுக 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'ஹர ஹர மகாதேவ்' முழக்கங்கள் எதிரொலித்தன.

இதன் பொருட்டு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் காசி இந்து பல்கலைக்கழகத்தின் சிங் துவாரில் உள்ள மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து தனது சாலைப் பேரணியை தொடங்கினார். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட இந்த பேரணி நிறைவாக காசி விஸ்வநாத் தாமில் நிறைவடைந்தது. அதன் பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பாஜக தலைவர்களுடன் காசி விஸ்வநாத் தாமில் மோடி பிரார்த்தனை செய்தார்.

இன்றைய தினம் மோடி வேட்பு மனுத்தாக்கலுக்கு செல்லும் நிகழ்வை ஒட்டி, வாராணசியில் பெரும் சாலைப் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ரோடு ஷோ நிகழ்வைவிட இன்றைய நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த உபி பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் விமான நிலையத்திற்கு செல்லும் வழியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் மெதுவான வாகன இயக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கேற்ப தங்கள் சாலைப் பயணத்துக்கு தயாராகுமாறும், உரிய நேரத்தில் விமான நிலையத்தை அடையுமாறும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மோடி ரோடு ஷோ காரணமாக திணறிய வாராணசி
மோடி ரோடு ஷோ காரணமாக திணறிய வாராணசி

பாஜகவின் கோட்டையான வாராணசி, கடந்த 2 தேர்தல்களாக மோடியை தேர்வு செய்ததில் தேசத்தின் முதன்மையான நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. வாராணசியில் மோடிக்கு எதிராக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் இம்முறையும் போட்டியிடுகிறார். மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை அஜய் ராய் எதிர்கொள்வது இது மூன்றாவது முறையாகும். மக்களவை தேர்தலின் 7வது மற்றும் கடைசி கட்டமாக, வாராணசியில் ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி 63.6 சதவீதம் அதாவது 6,74,664 வாக்குகளைப் பெற்று அங்கே வாகை சூடினார்.

இதையும் வாசிக்கலாமே...

முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in